PUBLISHED ON : ஜன 20, 2024

இந்தியாவின் தேசிய நீர் விலங்கு டால்பின். இது கடலில் வாழும் உயிரினம் அல்ல... ஆற்று நீரில் வாழ்கிறது. கங்கை நதியில் அதிகம் உள்ளது. இதை, 'கங்கை டால்பின்கள்' என்பர். இதன் விலங்கியல் பெயர், 'பிளாடானிஸ்டா கேன்ஜிட்டிக்கா' என்பதாகும். தேசிய நீர் விலங்காக அக்., 5, 2009ல் அறிவித்தது மத்திய அரசு.
நீரில் வாழும் பாலுாட்டி விலங்கான இதில், 40 இனங்கள் உள்ளன. மீன்களை உணவாக உண்ணும். சுவாசிக்கும் போது, ஒருவித ஓசை வெளிப்படும். இதன் அடிப்படையில், 'சூசு' என பகுதி மக்கள் அழைக்கின்றனர். சிந்து நதியில் வாழும் டால்பின், புலான் எனப்படுகிறது.
கடலில் வாழும் டால்பினை விட, உருவம், அளவு, குணத்தில் முழுதும் மாறுபட்டிருக்கும்.
கங்கை நதியில், 500; பிரம்மபுத்திரா நதியில், 400 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தற்போது உள்ளதாக புள்ளி விபரம் உள்ளது. வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது.
பார்வைக் குறைபாடு அதிகம் உள்ளதால், எதன் மீதாவது மோதிக்கொள்ளும். அதனால், அடிக்கடி இறக்கும் நிலை ஏற்படுகிறது. படகு, மீன் வலைகளில் சிக்கி உயிர் இழப்பும் நடக்கிறது.
நீரில் ஏற்பட்டுள்ள மாசு, அணை கட்டுதல், தடுப்புச் சுவர் அமைத்தல் போன்ற செயல்களாலும் இறக்கின்றன. ஆசிய நாடுகளான நேபாளம், பூடான், வங்கதேச நதிகளிலும் இவை வாழ்கின்றன.
கங்கை டால்பின் நீண்ட மூக்கும், பெரிய தலையும் உடையது. எட்டு அடி நீளமும், 100 கிலோ எடையும் உடையது. மேல் மற்றும் கீழ் தாடையில், 28 பற்கள் உண்டு!
மனிதனைப் போல், நுரையீரலில் சுவாசிக்கும். சுவாசிப்பதற்காக, 50 நொடிகளுக்கு ஒருமுறை நீரின் மேல் மட்டத்திற்கு வந்து செல்லும். இதன் கர்ப்ப காலம், ஒன்பது மாதங்கள்.
புதிதாக பிறக்கும் குட்டி, 65 செ.மீ., நீளம் வரை இருக்கும். பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கும். சற்று வளர்ந்த பின், சிறு மீன்கள், இறாலை உண்ணும். இது, 35 ஆண்டுகள் வரை உயிர் வாழும். வேகமாக அழியும் உயிரினங்களில் ஒன்றாக, சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய வன உயிரினப் பாதுகாப்பு சட்டம், 1972 படி, இதை வேட்டையாடவோ, மாமிசத்தை உண்ணவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தி, டால்பின்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
- நாவம்மா