
திருச்சி, பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில், 1979ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியர் மாணிக்கம் திறமையானவர்; மிகவும் கண்டிப்பு காட்டுவார். கால் இறுதித் தேர்வு முடிந்ததும், என் விடைத்தாளை முதலில் திருத்தினார். முதன்மை மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தேன்.
தொடர்ந்து மற்ற மாணவர்களின் விடைத்தாள்களை என்னிடம் கொடுத்து, திருத்தச் சொன்னார். இறுதியில், அவற்றை மதிப்பீடு செய்தார். இதுபோல் திருத்திய விடைத்தாளை மாணவர்களுக்கு வழங்கும் நாட்களில், ஒரு பொட்டலம் பிரியாணி சாப்பிடுவார். குறைந்த மதிப்பெண் பெற்றவரை அடித்து தண்டிப்பார்; இதனால், பலரும் விடுப்பு எடுத்து ஒளிந்து கொள்வர்.
நண்பன் ஒருவன் அது போன்ற தண்டனைக்கு பயந்து அவனது மதிப்பெண் பற்றி என்னிடம் விசாரித்தான். விளையாட்டு போக்கில், 34 என்பதற்கு பதில், 43 என தவறான தகவல் கூறினேன். அதை நம்பியவன் தைரியமாக வகுப்புக்கு வந்தான். கடுமையாக அடி வாங்கி நொந்தான்.
தவறான தகவல் தந்ததற்கு மன்னிப்பு கேட்டு, கற்பதில் தனிப்பட்ட முறையில் அவனுக்கு உதவினேன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். இதை அறிந்து, என்னை அழைத்து பாராட்டினார் ஆசிரியர்.
என் வயது, 55; தெற்கு ரயில்வேயில், இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றுகிறேன். எழுத்தாளராகவும் உள்ளேன். வகுப்பறையில் அன்று நடந்த நிகழ்வு, பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துள்ளது.
- கி.முரளிதரன், மதுரை.
தொடர்புக்கு: 98429 63972