
''எல்லாரும் அவங்க அவங்க பட்டத்தை எடுத்து வாங்க...''
உற்சாகப்படுத்தினான் சுந்தர்.
பல வண்ணங்களில், உருவாக்கப்பட்ட பட்டங்களை எடுத்து வந்தனர் நண்பர்கள்.
''ஒருவர் பின், ஒருவர் பறக்க விடணும்; நல்ல இடைவெளியில் நின்றுவிடுங்க...''
நட்புடன் அறிவுறுத்தினான்.
பட்டங்கள் வானில் பறந்தன.
வண்ண பட்டாம்பூச்சிகள் கூட்டமாக பறப்பது போல் காட்சியளித்தது.
''ஆஹா... கண் கொள்ளா காட்சி...''
நண்பர்களுடன் சிலாகித்த சுந்தர், ''இதே போல், ஒவ்வொரு நாளும் விளையாடுவோம்...'' என்றான்.
''சரி... நாளை என்ன விளையாடலாம்...'' என்றான் மணி.
''பம்பரம் விடலாம்; எல்லாரும் பம்பரம், சாட்டை எடுத்து வாங்க...''
மகிழ்ச்சியுடன் கூறி விடைப் பெற்றனர்.
சுந்தரின் அப்பா அர்ஜுன் முகம் வாடிப்போயிருந்தது.
அது கண்டு, ''ஒரு மாதிரியா இருக்கியே, ஏதாவது பிரச்னையா...'' என, அவரது நண்பர் சோமநாதன் கேட்டார்.
''மகன் சுந்தர், எப்ப பாரு, நண்பர்களோட ஊதாரியாக விளையாடிட்டே இருக்கான்...'' என சோகமாய் கூறினார்.
''சரியா படிக்காம இருக்கானா...''
''அதுல குறை எதுவும் இல்ல... 60 சதவீதம் மதிப்பெண் வாங்குறான்; ஆனால், பயன்படாத விளையாட்டில் தான், முழு கவனமும் இருக்கு. படிப்புல இன்னும் அக்கறை செலுத்தினால், நிறைய மார்க் வாங்கலாம்...''
''எப்பவும் விளையாட்டாவே இருக்கானா...''
''இல்ல... வீட்டுப் பாடத்தை முடிச்சுட்டு தான் போவான்...''
''இதுல வருத்தப்படுற அளவுக்கு என்ன இருக்கு...''
''இது நவீன யுகம்; தெருவுல யாராவது சிறுவர்கள் விளையாடுறத பார்க்குறீயா... அறைக்குள்ள மடி கணினி, அலைபேசி வெச்சு தான் விளையாடுறாங்க...''
''என்ன மாதிரி விளையாடுறான் உன் மகன்...''
''சொல்லவே வெட்கமா இருக்கு...''
சலித்து தயங்கினார் சுந்தரின் அப்பா.
''சும்மா சொல்லுப்பா...''
''பட்டம், பம்பரம், கோலி, கில்லின்னு விளையாடுறாம்பா...''
புன்னகைத்தபடியே, ''இதில் என்ன வருத்தம் வேண்டி கிடக்கு. இவை எல்லாம் நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் தானே... நீயும், நானும் கூட விளையாடி இருக்கோம்; அதை மறந்து பேசுறீயே...''
''ஐயோ... அதெல்லாம் அந்த காலம்...''
''இதோ பாரு... என் மகன், அலைபேசி கேட்டு அடம் பிடிச்சு, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வாங்கி தந்தேன். எப்பவும் அதுல, 'வெப் கேம்ஸ்' விளையாடுறதால, படிப்புல பின்தங்கி நிக்குறான்; காலையில் எழுந்ததும், அலைபேசிய எடுத்து நோண்டிட்டு தான், கழிப்பறைக்கே போறான்...
''வீட்டுக்குள் அடைஞ்சு இருக்குறதால, உடல் நலமும் பாதிக்குது. உன் மகன் அப்படி இல்ல; நண்பர்களோடு சேர்ந்து, நல்ல காற்றோட்டமான இடத்துல திறன் மிக்கதாக விளையாடுறான்...
''ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் பார்க்க முடியுது; அந்த விளையாட்டுக்கு, பொருட் செலவும் மிக குறைவு. படிக்கிற நேரத்தில் படிப்பையும், விளையாடுற நேரத்தில் விளையாட்டுமாய் இருக்குறவனைப் பார்த்து, சந்தோஷப்படாம, வருந்திட்டு இருக்கிறீயே...''
தேற்றினார் சோமநாதன்.
நண்பர் கூறியதை கேட்டதும், மனதில் மாற்றம் ஏற்பட்டது. மகிழ்ச்சியோடு வீடு திரும்பி, பணம் டிபாசிட் செய்ய வங்கிக்கு புறப்பட்டார். பணப் பையை அணைத்தபடி நடந்தார் சுந்தரின் அப்பா.
வெயிலின் தாக்கத்தால், கைக்குட்டையால் நெற்றி வியர்வையை துடைத்தார். அந்த சந்தர்ப்பத்தில், பணப் பையை பிடுங்கியபடி ஓடினான் திருடன்.
''ஐயோ... திருடன்... பிடிங்க... பிடிங்க...''
கத்தினார் சுந்தரின் அப்பா.
நண்பர்களுடன் அந்த வழியே வந்த சுந்தர், இது கண்டு அதிர்ந்தான்.
நண்பர்களை எச்சரித்து, ''பையில் உள்ள கோலிகளை தெருவுல பரப்புங்க... சீக்கிரம்... சீக்கிரம்... விரைந்து செய்யுங்க...'' என ஆயத்தப்படுத்தினான் சுந்தர்.
ஓடி வந்த வழிப்பறித் திருடன் கோலிகள் மீது கால் வைத்ததும், நிலை தடுமாறி விழுந்தான்.
அவனை அமுக்கி பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர் சிறுவர்கள்.
காவல்துறை அதிகாரி, சமயோசிதமாக செயல்பட்டவர்களை பாராட்டி கை குலுக்கினார்.
குழந்தைகளே... அலைபேசியை விட்டொழித்து, நண்பர்களுடன் சேர்ந்து ஓடி, ஆடி விளையாடுங்க!
- மலர்மதி