PUBLISHED ON : ஜன 27, 2024

நம் நாட்டை வளப்படுத்தும் நதிகள் ஏராளம். அவை பாய்ந்தோடும் பகுதிகளில் நிலம் செழிப்படைகிறது. மக்கள் மனம் குளிர்கின்றனர். பல்லுயிரினம் பல்கி, சுற்றுச்சூழல் மேம்படுகிறது. வளம் தரும் நதிகள் குறித்து பார்ப்போம்...
கங்கை நதி: இமயமலையில் தோன்றி பல நுாறு கி.மீ., பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கிறது. கங்கை ஆற்று சமவெளி, 10 லட்சம் சதுர கி.மீ., பரப்பில் விவசாயத்துக்கு பயன்படுகிறது.
யமுனை நதி: உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்திரியில் உற்பத்தியாகிறது. ஹரியானா, உ.பி., மாநிலங்களையும் செழிக்க செய்து, 57 லட்சம் பேரின் தாகத்தை தீர்க்கிறது.
கோதாவரி நதி: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி, அரபிக்கடலில் கலக்கிறது. இதன் படுகையில் கனிம வளங்கள் நிறைந்துள்ளன. இந்த நதியின் நீளம், 1,450 கி.மீ.,
நர்மதா: மத்திய பிரதேசம், அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி, மத்திய இந்தியாவில் சாத்பூரா மலைகளுக்கு இடையே பாய்ந்து, அரபிக்கடலில் கம்பாத் வளைகுடாவில் கலக்கிறது. இதில் சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.
சிந்து நதி: இதன் உற்பத்தி இடம் இமயமலை, மானசரோவர் ஏரி. சிந்து என்ற சொல்லுக்கு கடல் என பொருள். இந்த நதியின் மீது, டார்பெலா, கால பாக், முண்டா போன்ற அணைக்கட்டுகள் அமைந்துள்ளன.
மகாநதி: சத்தீஸ்கர் மாநிலம், சிவஹாமலையில் தோன்றி, ஒடிசா மாநிலம் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது. மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹீராகுட் அணை, ஆசியாவிலே மிகப்பெரியது.
கிருஷ்ணா நதி: மேற்கு தொடர்ச்சி மலை, மகா பலேஷ்வரில் உள்ள கோமுகத்தில் உற்பத்தியாகிறது. மிகப்பெரிய அணைகளில் ஒன்றான நாகார்ச்சுன சாகர் இதில் கட்டப்பட்டுள்ளது.
பாகீரதி நதி: இமயமலையில் தோன்றி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பாய்கிறது. இது கங்கையின் தாய் நதி. ருத்ரபிரயாகை என்ற இடத்தில், அலக்நந்தா ஆறுடன் இணைந்து, கங்கையாக மாறுகிறது. அண்டை நாடான வங்கதேசம் வழியாக வளமான கழிமுகத்தை உருவாக்கி, வங்க கடலில் கலக்கிறது.
பிரம்மபுத்திரா: ஆசியாவின் வற்றாத ஜீவ நதி. இந்தியாவின் மிக நீளமான ஆறு. இமயமலையில் உற்பத்தியாகி, அசாம் மாநிலத்தில் நுழைந்து, வங்க தேசம் வழியாகப் பாய்ந்து, கங்கையின் கிளை ஆறான பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழி முகத்தை உருவாக்கி, வங்க கடலில் கலக்கிறது.
சபர்மதி: மத்திய இந்திய ஆறுகளில் ஒன்று. ஆரவல்லி மலை தொடரில் தோன்றி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் குறுக்கே தாரோங் அணைக்கட்டு உள்ளது. காந்திஜி உருவாக்கிய சபர்மதி ஆசிரமம், இதன் அருகே உள்ளது.
சரயு நதி: உத்தர பிரதேச மாநிலம், நந்தகோட் மலைத் தொடரில் உருவாகி மாகாளி, சகாரா ஆறுகளுடன் இணைந்து மிகப்பெரிய நதியாக உருவெடுக்கிறது. சரயு நதி அருகில், ராம் கி பைட் என்ற மலைத்தொடர் மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
ஜீலம் நதி: காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்த பீர்பஞ்சல் தொடரில் உற்பத்தியாகிறது. இதன் மீது மங்களா அணைக்கட்டு உள்ளது.
ராவி நதி: இமாச்சல பிரதேசம், சம்பா மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றங்கரையில், இயற்கையான பாறை உருவில் சாமுண்டா தேவி கோவில் உள்ளது.
பியாஸ் நதி: இமயமலை பியாவ் குன்றில் உற்பத்தி ஆகிறது. இதன் நீளம், 470 கி.மீ., இந்த நதியில், பந்தோ அணை கட்டப்பட்டுள்ளது.
தபதி நதி: மத்திய பிரதேசம், பேதுல் பகுதியில் உருவாகி, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக பாய்ந்து, அரபி கடலில் கலக்கிறது.
துங்கபத்ரா: மேற்கு தொடர்ச்சி மலையில், கங்கமூலா என்ற இடத்தில் உற்பத்தியாகி, கிருஷ்ணா நதியுடன் கலக்கிறது. இதன் குறுக்கே கட்டப்பட்ட துங்கபத்ரா அணைக்கட்டு, பழமையானது. சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரமும், விஜயநகரமும் இந்த நதிக்கரையில் உள்ளன.
காக்ரா: இமயமலை, திபெத் பகுதியில் சிவாலிக் மலையின், மாப்சாகங்கா கொடுமுடியில் உற்பத்தியாகி, மானசரோவர் வழியாக நேபாளத்தை அடைகிறது. பின், பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகே கங்கை ஆற்றில் கலக்கிறது.
சுபர்ணரேகா: ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தோன்றுகிறது. ஒடிசா வழியாகப் பாய்ந்து வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆற்றுப்படுகையில், தங்க துகள் எடுக்கப்பட்டதால் சுபர்ணரேகா எனப்பட்டது.
சம்பல்: விந்திய மலையில் உருவாகி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் வழியாக பாய்ந்து யமுனை நதியில் கலக்கிறது. இதன் குறுக்கே, காந்தி சாகர், ராணா பிரதாப் சாகர், ஜவஹர்சாதுர் நீர் தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. முதலைகள், நன் நீர் டால்பின்களின் இருப்பிடமாகவும், 330 வகை பறவையினங்களின் புகலிடமாகவும் திகழ்கிறது.
- தங்க.சங்கரபாண்டியன்