
கோவை மாவட்டம், மதுக்கரை அரசு நடுநிலைப் பள்ளியில், 1962ல், 8ம் வகுப்பு படித்த போது அறிவியல் ஆசிரியராக இருந்தார் லட்சுமி நரசிம்மன். மிகவும் கலகலப்பானவர். பயந்த சுபாவத்துடன் இருந்த என்னை, 'சாதுப்பெண்' என அழைப்பார்.
அன்று கட்டுரை வாசிக்கும் போட்டி வைத்திருந்தார். பயந்து அதில் பங்கேற்க மறுத்தேன். என்னை கட்டாயப்படுத்தி பங்கேற்க உற்சாகம் ஊட்டினார். தயார் செய்த கட்டுரையை வாசித்தேன். பாதி படிக்கும் போதே சலசலப்பு ஏற்பட்டதால், ஓரக்கண்ணால் கூட்டத்தை பார்த்தேன். கை, கால்கள் நடுங்கியது கண்டு அனைவரும், 'கொல்'லென சிரித்தனர்.
ஒரு ஆசிரியை, 'போதும் வா...' என்று சைகையால் கூப்பிட்டார். அவசரமாக, 'இத்துடன் உரையை முடித்து கொள்கிறேன்...' என இறங்கி வந்தேன்.
பின், எனக்கு ஏற்பட்ட பின்னடைவை அலசி, கூச்சம், தவறுகளை களைந்தேன். தயக்கமின்றி மேடையில் பாடவும், பேசவும் கடும் பயிற்சி செய்து முன்னேறினேன்.
தற்போது, என் வயது, 75; இல்லத்தரசியாக உள்ளேன். மேடை பேச்சு மற்றும் பாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வமாக செயல்படுகிறேன். ஒவ்வொரு நிகழ்வை துவங்கும் போதும், அந்த ஆசிரியர் தந்த பயிற்சியும், நான் எடுத்த முயற்சியும் நினைவுக்கு வருகிறது.
- லட்சுமி காமாட்சி, கோவை.
தொடர்புக்கு: 94866 69041