
எலிகளின் ஆயுள் இரண்டு ஆண்டுகள். ஆனால், அமெரிக்கா, கலிபோர்னியா, சான் டியாகோ உயிரியல் பூங்காவில் ஒரு எலி ஒன்பது ஆண்டுகளுக்கு வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடையது இது.
இது பசிபிக் பாக்கெட் எலி இனத்தை சேர்ந்தது. உயிரியல் பூங்காவில் ஜூலை 12, 2013ல் பிறந்தது. நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் நினைவாக, பாட் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் நீண்ட ஆயுளை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தப்போவதாக வனவிலங்கு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எலி சுட்டி பிரிட்சி ஏழு ஆண்டு ஏழு மாதங்கள் வாழ்ந்தது. இது 1985ல் இறந்தது.
எலிகளைப் பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன.
விண்வெளியில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதல் உயிரினம் எலி. இது தண்ணீரின்றி வாழும் திறன் உடையது. நீர் அருந்தாமல் அதிக நாள் வாழ்வதில் ஒட்டகத்தை மிஞ்சும் திறன் உடையது.
- வி.சி.கிருஷ்ணரத்னம்