/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - கண்ணீர் புகை குண்டு!
/
அதிமேதாவி அங்குராசு - கண்ணீர் புகை குண்டு!
PUBLISHED ON : பிப் 17, 2024

கலவரங்களின் போது, கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது, உலகம் முழுதும் காவல்துறையில் நடைமுறையாக உள்ளது. கண்ணீர் புகை குண்டு எப்படி வேலை செய்யும்; என்ன மாதிரி தாக்கம் ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்...
மனித உடலில் எரிச்சலை ஏற்படுத்தும் சில வகை வேதியியல் சேர்மங்களை உடையது தான் கண்ணீர் புகை குண்டு. இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது. உடலுக்கு பெரும் அச்சுறுத்தலை தரும். இதில் உள்ள வேதிப்பொருள் கலவையில் வெங்காயத்தில் இருக்கும், 'தையோபுரொபனல் எஸ் ஆக்சைடு' என்ற வாயு உள்ளது. புரோமா அசிட்டோன், பென்சினல் புரோமைடு, எத்தில் புரோமா அசிட்டேட், சைலைல் புரோமைடு மற்றும் ஆல்பா புரோமோபென்சில் சயனைடு போன்ற சேர்மங்களும் கலந்து இருக்கும்.
இந்த குண்டு வீசும் போது வெளியேறும் புகை, சுவாசம் வழியாக நுரையீரலில் எரிச்சலுாட்டும். இதனால், கண்ணீர், அரிப்பு, இருமல், சளி, தும்மல், தோல் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம், தற்காலிக பார்வை இழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
அமெரிக்க வேதியியல் அறிஞர்கள் பென் கார்சன் மற்றும் ரோஜர் ஸ்டவுட்டன் இதை கண்டுபிடித்தனர். கடந்த, 1950ல் முதன்முதலில் கண்ணீர் புகை குண்டு தயாரிக்கப்பட்டது. இதில், ரசாயனப் பொருட்கள் துாள் வடிவில் இருக்கும். இது மெத்திலீன், குளோரைடு போன்றவற்றுடன் காற்றில் கலக்கும். அதை சுவாசித்தால், உடலில் மாற்றங்கள் ஏற்படும். இருமல் அதிகரித்து கண்ணீரும், சளியும் வழிந்தோடும். கூடி இருப்போர் தப்பித்தால் போதும் என ஓடி விடுவர். கலவரம் அடங்கி விடும்.
இதற்காகத்தான் கண்ணீர் புகை குண்டு வீசப்படுகிறது.
கண்ணீர் புகை குண்டு வெடித்ததும்...
* அந்த புகை உடலில் உடனே பரவி மாற்றம் ஏற்படுத்தும்
* அந்த பகுதியில் இருந்து வெளியேறும் உணர்வு ஏற்படும்
* மூச்சு திணறலும், எரிச்சல் உணர்வும் தொண்டை வரை இருக்கும்
* நெருப்பை விழுங்கியது போல் கடுமை ஏற்படும்
* கண்கள் செயல் இழந்து பார்வைத் திறனை இழப்பது போல் தோன்றும்
* கண்ணை சிரமப்பட்டு திறந்தால் பார்வை மங்கலாகும்.
கண்ணீர் புகை குண்டு வெடித்து காற்றில் பரவும் போது, உடலில் உணர்ச்சி நரம்புகள், மூளைக்கு ஒரு சமிக்ஞை அனுப்பும். உடனே, மூளை, கண்ணீரை சுரந்து அதை வெளியேற்ற முயற்சிக்கும்.
அடுத்து, புகையை சுவாசிக்கும் போது, சுவாச மண்டலத்தில் பாதுகாப்புகான நடவடிக்கையை துாண்டி விடும். அதாவது இருமல், சளியை ஏற்படுத்தி எரிச்சலுக்கு காரணமானவற்றை உடல் வெளியேற்ற முயற்சிக்கும். அப்போது குமட்டலுடன் வாந்தி ஏற்படும்.
கண்ணீர் புகை குண்டால் ஏற்படும் பாதிப்பு சில மணி நேரங்களில் சரியாகி விடும். குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு தான் கூடுதல் சிக்கல் ஏற்படுத்தும்.
கண்ணீர் புகை குண்டால் ஏற்படும் பாதிப்பை நீக்க மருந்து எதுவும் கிடையாது. சம்பவ இடத்தை விட்டு உடனே வெளியேறி, சுகாதாரமான காற்றை சுவாசிப்பதே நிவாரணம் பெறும் ஒரே வழி!
கண்ணீர் புகை குண்டு வீசும் பகுதியில் காற்று கனமாகி தரையில் படியும். அதனால், உயரமான இடத்திற்கு செல்வது பாதுகாப்பானது. கண், வாய், மூக்கு மற்றும் உடலை மூடிக்கொண்டால் பாதிப்பு குறையும்.
உடனே குளித்து புதிய ஆடை அணிய வேண்டும். குண்டு வீச்சு நடந்தபோது அணிந்திருந்த உடைகளை தனியாக துவைக்க வேண்டும். இதற்கு, 'குளோரின் ப்ளீச்' உடைய டிடர்ஜென்ட் பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், புதிய வினைபுரிந்து கூடுதலாக நச்சுக் கலவை உருவாக ஏதுவாகி விடும். எனவே கவனம் தேவை.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.