
விழாக்கோலம் பூண்டிருந்தது வேழமலை நாடு.
இளவரசர் வீரவேலனுக்கு முடிசூட்ட மன்னர் முடிவு செய்திருப்பதை முரசறைந்து அறிவித்தனர் அரண்மனை காவலர்கள்.
'இளவரசர் வீரவேலன், 14 வயது நிரம்பியவர். இந்த சிறுவனுக்கு அவசரமாக எதற்கு முடிசூட்டுகிறார் மன்னர்...'
மக்கள் மனதில் இந்த கேள்வி எழுந்திருந்தது.
'என்றைக்கானாலும், இளவரசர் தானே வேழமலையின் மன்னராக போகிறார்... அதனால், இப்போதே முடிசூட்டிக்கொள்வது தவறில்லை...'
இவ்வாறு பதில் தேடி, ஆளாளுக்கு பேசினர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் உள்ளது வேழமலை. இதை மையமாக கொண்டு, மலை உச்சியில் மிகப்பெரிய கோட்டை அமைக்கப்பட்டு இருந்தது.
யானைகள் வசிப்பிடம் என்பதால் காலங்காலமாக இது வேழமலை என்றே அழைக்கப்படுகிறது.
மலை உச்சியில், மன்னரின் அரண்மனை. அதை சுற்றி, படை வீரர்களின் குடியிருப்பு; கூடவே, குதிரை லாயம், யானை படை முகாம் மற்றும் ஆயுதப் பட்டறையும் இருந்தன.
அதையடுத்து, மக்கள் வாழும் குடியிருப்புகள் மற்றும் வாணிப மையங்கள் அமைந்திருந்தன. கோட்டை சுவருக்கும், குடியிருப்புக்கும் இடையில், 'படையடுக்கு' எனப்படும், பாதுகாப்பு வீரர்களின் முகாம்கள் இருந்தன.
கோட்டையின் கிழக்குப் பகுதியில், நுழைவாயில் அமைந்திருந்தது.
கோட்டையை சுற்றி, முதலைகள் நிறைந்த அகழி உருவாக்கப்பட்டிருந்தது. அதை கடக்க, கோட்டையை பாதுகாக்கும் வீரர்களால் இயக்கப்படும் தொங்கு பாலம் இருந்தது.
அகழியை அடுத்து, வேழமலை நாட்டின் ஆளுகைக்குட்பட்ட காட்டுப் பகுதி அமைந்திருந்தது. அங்கும், சிறியமலை ஒன்றும் உண்டு. அது சிறிய அளவில் இருந்ததால், சிறுமலை என்று பெயர் பெற்றிருந்தது.
பெரும்பாலும், அடர்ந்த காடும், நீர் பிடிப்புப் பகுதியும் அங்கிருந்தன.
சிறுமலையில், தாமிரபரணி ஆற்றின் கிளை நதி ஒன்று உருவாகி, காட்டுக்குள் இறங்கும் இடத்தில் அருவியாக பாய்ந்தது. அதன் அருகில், வேட்டைச்சாமி கோவில் உள்ளது.
வேழமலையை ஆட்சி செய்யும் மன்னர், வேட்டைக்கு வரும் போது அங்கு, சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். காட்டின் ஒரு பகுதி, விளைநிலமாக்கப்பட்டு, உணவு தானியங்களும், காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன.
இது தான், வேழமலை நாட்டின் அமைப்பு.
வேழமலை மன்னர் கஜவீரரும், மகாராணி மங்கையர்கரசியும் சயன அறையில் இருந்தனர்.
'இந்த வயதில், இளவரசருக்கு, முடிசூட்டுவது அவசியம் தானா...'
மஞ்சத்தில், சோர்வுடன் படுத்திருந்த மன்னரிடம் கேட்டார் மகாராணி.
'இளவரசர், ராஜ குருகுலத்தில் கல்வி, போர்ப் பயிற்சி முடித்தவர். போர் வியூகங்கள் அமைப்பதில், குருவை மிஞ்சிய சிஷ்யன் என, ஆசானே அத்தாட்சி வழங்கி இருக்கிறார். என் உடல் நிலை, நாளுக்கு நாள் பலவீனம் அடைகிறது...'
'அரண்மனை வைத்தியர், அருகில் இருந்து கவனிப்பதால், விரைவில் குணமடைவீர்...'
'இளவரசருக்கு, 18 வயது நிறைவு பெற்றதும், மன்னராக வேண்டியது தானே... இப்போதே முடிசூட்டி கொள்வதில் தவறு ஒன்றுமில்லை; இப்போதே பட்டம் சூட்டினாலும், அந்த வயது வரும் வரை ஆட்சிப் பொறுப்பை நான் தான், கவனிக்க போகிறேன்...'
பதில் எதுவும் சொல்லாமல், அமைதியாக இருந்தார் மகாராணி.
'மங்கை... என்ன யோசிக்கிறாய்...'
'மன்னா... களப்பயிற்சி நிறைவடையும் வரை காத்திருக்கலாம் என நினைத்தேன்...'
'முடிசூட்டு விழாவை கண்குளிரப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது...'
மன்னர் கூறியதை கேட்டு மவுனமாய் தலையசைத்தார் மகாராணி.
அரண்மனை தர்பார் மண்டபத்தின் அருகிலிருந்தது விவாதக் கூடம்.
அங்கு, ராஜகுரு, அரண்மனை வைத்தியர், படைத் தளபதி கூடியிருந்தனர். அவர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தனர். மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர்.
'மன்னரின் உடல்நிலை எவ்வாறு உள்ளது. பவுர்ணமிக்கு இன்னும், மூன்று நாட்கள் தான் இருக்கின்றன; அதற்குள், அசம்பாவிதம் எதுவும், நிகழ்ந்து விடாது அல்லவா...'
வைத்தியரிடம் கேட்டார் ராஜகுரு.
'கட்டுப்பாட்டில் தான் மன்னர் உடல்நிலை இருக்கிறது. இப்போது எதுவும் ஆகாது...'
வைத்தியர் பதிலளிக்க, குறுக்கிட்டார் தளபதி.
'பவுர்ணமி அன்று, வளர்பிறை, தேய்பிறை சந்திக்கும் நேரத்தில், இளவரசருக்கு முடிசூட்ட வேண்டும். அதுவரை, மன்னர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் வைத்தியரே...'
'அதனால் தான், மெல்ல கொல்லும், நச்சு மூலிகைகளை, மூன்று நாட்களுக்கு முன் நிறுத்தி விட்டேன். முடிசூட்டு விழாவுக்கு, மன்னருக்கு, தனி சிகிச்சை வைத்துள்ளேன்...
'விழா முடிந்து, இரண்டு வாரத்திற்கு பின், நச்சு மூலிகைகளை மீண்டும் கொடுக்கலாம்; ஒரு மாத காலத்தில், மரணப்படுக்கையில் விழுந்து, ஓராண்டுக்குள் மரணித்து விடுவார் மன்னர்...'
'மரணத்தில் எதுவும் சந்தேகம் வராதே...'
'எப்படி வரும். நான் கொடுக்கும் நச்சு மூலிகைகள், உடனே, உயிரை பறித்து விடாது. உடலையும், உள்ளுறுப்புகளையும் பலவீனமாக்கி, படிப்படியாக செயலிழக்க வைக்கும்; அவர், படுக்கையில் விழுந்த பின், மரணிப்பதால் இயற்கை மரணம் போலவே இருக்கும்...'
'மன்னர் மரணப்படுக்கையில் விழுந்ததும் இளவரசருக்கு, 18 வயது நிறைவடையவில்லை என கூறி, ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி விடலாம். வேழநாடு கைக்கு வரும்; பின், நாம் வைப்பது தான் சட்டம்...'
வஞ்சகமாக சிரித்தார் தளபதி.
'இளவரசர் வீரவேலனுக்கு அரசு நிர்வாகம் எதுவும் தெரியாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும். நம் கைப்பாவையாக, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவன்...'
ராஜகுரு கூறியபோது, பதற்றத்துடன் ஓடி வந்தான் அரண்மனை காவலன்.
'தளபதி... இளவரசர் வீரவேலனை காணவில்லை...'
அதை கேட்டதும் அதிர்ச்சியுற்றனர் மூவரும்.
- தொடரும்...
- ஜே.டி.ஆர்.,