PUBLISHED ON : மார் 02, 2024

மார்ச் 8 மகளிர் தினம்
பெண்மையை போற்றும் புனித பூமி இந்தியா. இந்த மண்ணில் செய்த சேவையால் விண்ணளவு புகழ் பெற்றார் அன்னை தெரசா. விண்வெளி ஆய்வில் கால் பதித்து சரித்திரம் படைத்தார் கல்பனா சாவ்லா. இது போல் சாதித்துள்ளவர்கள் ஏராளம்.
பெண்களுக்கு சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தி உலக அளவில் மகளிர் தினம் மார்ச் 8ல் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உருவான வரலாறு பற்றி பார்ப்போம்...
உலகில், ஆணுக்கு நிகராக பணி செய்ய பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்த போதும், ஊதியம் மிகக் குறைவாகவே இருந்தது. இது பெரும் மனக்குறையை ஏற்படுத்தியது. இதை போக்கும் வகையில் குரல்கள் எழுந்தன.
உலக அளவிலான சோசலிஸ்ட் பெண்கள் இயக்க மாநாடு, ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், கடந்த, 1910ல் நடந்தது. இதில், ஆண் - பெண் சமத்துவம் பற்றிய விவாதம் நடந்தது. இது தொடர்பான தீர்மானத்தை முன் மொழிந்தார், ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த கிளாரா ஜெட்கின்.
இதன் அடிப்படையில், ஆசிய ஐரோப்பிய நாடான ரஷ்யாவில் பேரணி ஒன்று நடந்தது. இதில் பங்கேற்ற அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை உலக மகளிர் தினமாக கடைபிடிக்கும் பிரகடனத்தை முன் மொழிந்தார். இதுவே, மகளிர் தினம் உலக அளவில் கடைபிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
பெண்கள் உரிமை மற்றும் சுதந்திரமாக செயல்பட கல்வி மிக முக்கியமான ஆயுதம். இதன் முக்கியத்துவத்தை பரப்பும் வகையில், சர்வதேச மகளிர் ஆண்டாக 1975 அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தை வெளியிட்டது ஐக்கிய நாடுகள் சபை.
கல்வியை பெண்கள் முழுமையாக பெறுவதால்...
* சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்
* குடும்ப நிர்வாகம் திறம்பட நடக்கும்
* பாலின பேதம், பாகுபாடுகள் ஒழியும்
* நாட்டின் பொருளாதார நிலை மேம்படும்.
கல்வி பெற்ற பெண்கள், சமூகத்தில் ஏற்படும் பிரச்னையை அறிந்து, தக்கபடி ஆராய்ந்து தீர்வு காண்கின்றனர். தொழில் திறமையால் உற்பத்தியை அதிகரிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றனர். இவை எல்லாம் இன்று, கண்முன் கைகூடி வருகின்றன.
நம் நாட்டில் பெண்கள் உயர்வாக மதித்து நடத்தப்படுகின்றனர். இதற்கு இலக்கியம் மற்றும் கல்வெட்டுக்களில் வரலாற்று ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. பழந்தமிழ் நுால்களில் பெண்களை மேன்மையாக மதித்த நிகழ்வுகளும், செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய ஆன்மிக தத்துவத்தை உலகம் முழுதும் பரப்பியவர் சுவாமி விவேகானந்தர். பெண்மையை போற்றியதில் தலைசிறந்து விளங்குகிறார். பெண்களை மிகவும் உயர்வாக மதித்த மகாகவி பாரதி, 'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று பாடியுள்ளார்.
மனைவியிடம், 'எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்து கொள் செல்லம்மா. உடலமைப்பில் மாறுபட்டாலும், ஆணையும், பெண்ணையும் சமமாகவே இறை சக்தி படைத்துள்ளது. எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே...' என உறுதி பட உரைத்துள்ளார் பாரதி.
நம் நாட்டில் நிலவிய இது போன்ற சிந்தனைகளே பலதுறைகளில் பெண்கள் இன்று வெற்றி நடைபோட காரணமாகியுள்ளது. அதேநேரம் பெண்களுக்கு எதிரான வன்செயல்களும் நிகழ்கின்றன. இதை ஒழிப்பதில் உறுதி ஏற்று தீவிரமாக செயல்பட வேண்டும்.
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.