/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
மழைநீர் துளிகளில் நம்பிக்கை விதை!
/
மழைநீர் துளிகளில் நம்பிக்கை விதை!
PUBLISHED ON : மார் 02, 2024

நஞ்சில்லா உணவு பங்கீடு, எளிய முறையில் மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் போன்ற உன்னத செயல்களால் உலகப் புகழ் பெற்றவர் சுனிதா நரேன். அறிவியல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைமை பொறுப்பு வகிக்கிறார். இயற்கையை பாதுகாக்கும் செயல்பாடுகளில் சிகரமாக விளங்குகிறார்.
இவருக்கு, இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மீது, பள்ளி மாணவியாக இருந்த போதே ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படித்த போது, காந்தி அமைதி அறக்கட்டளை நடத்திய சூழலியல் பயிற்சி முகாமில் பங்கேற்றார். அங்கு மரங்களை பாதுகாக்கும், 'சிப்கோ' இயக்கம் பற்றி அறிந்து, அதில் இணைந்து செயல்பட்டார்.
பின், பிரபல பத்திரிகையாளர் அனில் அகர்வாலுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகள் தயாரிக்கும் பணியில் செயல்பட்டார்.
தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பில் எளிய தொழில் நுட்பங்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார். புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான தகவல் தொடர்பில் உலக அளவில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
உலகின் செல்வாக்கு மிக்க, 100 பேரில் ஒருவராக பிரபல, 'டைம்' இதழ் தேர்வு செய்து கவுரவித்துள்ளது. இந்திய காடுகளை மேம்படுத்தும் ஆய்விலும், அது தொடர்பான பணியிலும் ஈடுபாடு காட்டி வருகிறார் சுனிதா.
கிராமங்களில், உள்ளாட்சி முறை சுதந்திரமாக செயல்பட்டால் தான், நாடு நிலையான வளர்ச்சி அடையும் என நம்பி உரிய பணிகளை ஆற்றுகிறார். உலகம் முழுதும் ஜனநாயகம் மலர போராடி வருகிறார்.
தனித்துவ திறனும், தொழில் நுட்பம் உருவாக்குவதில் நிபுணத்துவமும், விடாமுயற்சியும், தளராத மன உறுதியும் நிறைந்தவர் சுனிதா. டில்லியில் வீட்டருகே, அதிகாலை மிதிவண்டி ஓட்டி உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுவார். அக்., 20, 2013 அன்று பயிற்சியின் போது, கார் மோதி படுகாயம் அடைந்தார். அந்த நிலையிலும் மனம் தளராது, மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார். கடும் பாதிப்பிலும் உறுதியான மனதுடன் போராடி மீண்டார்.
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விவாதம் ஏற்படுத்தி, உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பிரபல அமெரிக்க குளிர்பான நிறுவன தயாரிப்புகளில், பூச்சிக்கொல்லி நஞ்சு இருந்ததை தைரியமாக சுட்டிக்காட்டி மாற்றம் ஏற்படுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுனிதாவுக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு.
அறிவியல் முறைப்படி, மழைநீரை சேகரிக்கும் தொழில் நுட்பம் உருவாக்கியதற்காக, தண்ணீருக்கான நோபல் பரிசு என புகழப்படும், 'ஸ்டாக்ேஹாம் வாட்டர் அவார்டு' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், மிகக்குறைந்த மழைபொழிவு உள்ள ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் பகுதியில், சுனிதா உருவாக்கியுள்ள, பசுமையை மீட்கும் தொழில்நுட்ப அமைப்பு, உலகுக்கே முன் உதாரணமாக திகிழ்கிறது.
- ஒளி