
வால்பாறை காட்டில், சோம்பேறியாக வாழ்ந்து வந்தது வெண் கொக்கு. நாள் முழுதும், துாங்கியே பொழுதை கழித்தது. பசி வந்தால், நண்பர்களிடம் கெஞ்சி உணவு கேட்கும். அவையும், பரிதாபப்பட்டு இரை கொடுத்து உதவின.
இப்படியே சிறிது காலம் சென்றது.
குணத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை சோம்பேறி கொக்கு.
உழைக்காமல் பொழுதை வீணடித்தது.
சோம்பி திரிந்த அதை திருத்த விரும்பின அதன் நண்பர்கள்.
'இனி, இலவசமாக உணவு தர கூடாது. அப்படி செய்தால் தான் தேடுவதில் கவனம் செலுத்தும்' என முடிவெடுத்தன.
சில நாட்களுக்கு பின் -
சோம்பேறி கொக்கு இரை தேட செல்லவில்லை. நண்பர்கள் எதிர்பார்ப்பும் கைகூடவில்லை. அதன் இருப்பிடத்தில் ஒரே கூச்சல் குழப்பமாய் இருந்தது.
விசாரித்தன நண்பர்கள். பறவைகளின் கூட்டில் வைத்திருந்த உணவை களவாடி தின்றிருந்தது.
குஞ்சுகளுக்கு கொண்டு வந்த இரையை திருடித் தின்ற சோம்பேறி கொக்கை வசைபாடி தீர்த்தன தாய் பறவைகள்.
அவற்றை சமாதானப்படுத்தி, சோம்பேறி கொக்கை தனியே அழைத்து வந்த நண்பர்கள், 'சோம்பேறித்தனத்திற்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வை... நாளை எங்களுடன் வா... மீன் பிடிக்க கற்றுத் தருகிறோம். துணிவாய் இரு; தீய பழக்கங்களை உன் உழைப்பு, தன்னம்பிக்கை விரட்டி விடும்...' என்று அறிவுறுத்தின.
மறுநாள் -
சோம்பேறி கொக்கிற்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்து, அதன் வாழ்வில் ஒளியேற்றி வைத்தன நட்பு பறவைகள்.
பட்டூஸ்... தொழிலை கற்று உழைத்து உயருங்கள்!
- ச.தயாநிதி