
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 9ம் வகுப்பு படித்தேன். ஆங்கில ஆசிரியை ஜோதி ஜெயமாலா சிறப்பாக பாடம் நடத்துவார். கருணையுடன் கவனித்துக் கொள்வார். அன்று, அருகில் இருந்த கடையில், சாப்பாடு வாங்கி வர கூறினார். உடனே, மிதிவண்டியில் புறப்பட்டேன். மழை துாரல் போட்டுக்கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல், வேகமாக சென்று உணவை வாங்கினேன். அப்போது, மழை பொழிவு கடுமையானது.
சற்றும் தாமதிக்காமல் மழையில் நனைந்தபடி, விரைந்து வந்து பார்சலைக் கொடுத்தேன். மிகவும் நெகிழ்வுடன், 'மழை விட்ட பின் வரவேண்டியது தானே... ஏன் நனைந்தபடி வந்தாய்...' என்று கடிந்தார். பொறுமையாக, 'பசியுடன் இருப்பீர்களே என்று தான், நனைந்தபடியே கொண்டு வந்தேன்...' என எடுத்து கூறினேன்.
வகுப்புகள் முடிந்த பின், மாலை வீட்டிற்கு சென்றேன்; மறுநாள், சுகவீனத்தால் பள்ளிக்கு செல்லவில்லை. இதை அறிந்து, சக மாணவர்களிடம் என் நிலை பற்றி விசாரித்துள்ளார். சளி, காய்ச்சலால் அவதிப்படுவதை தெரிவித்துள்ளனர்.
உடனே, மருத்துவரை அழைத்து, என் வீட்டுக்கு வந்தார் ஆசிரியை. பொறுப்புடன் சிகிச்சை அளிக்க உதவினார். அந்த நிகழ்வு நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. எனக்கு, 68 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்; உயர்ந்த உள்ளத்துடன் உதவிய அந்த ஆசிரியையின் பெருந்தன்மையை போற்றுகிறேன்!
- மா.பாஸ்கரன், மதுரை. தொடர்புக்கு: 96266 91921

