
திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2003ல், 10ம் வகுப்பு படித்தபோது, ஆங்கில ஆசிரியராக இருந்தார் மாரியப்பன். சிரமம் பார்க்காமல் கவனம் எடுத்து கற்பிப்பார். ஆனால், தேர்வில் அதிக மதிப்பெண் போட மாட்டார். சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவியர் கூட, அவரது பாடத்தில் உரிய மதிப்பெண் பெறுவது கடினம்.
அன்று, மாதாந்திர தேர்வு நடந்தது. அதில், ஆங்கில வினாத்தாளை பார்த்தவுடன் மகிழ்ந்தேன். நான் படித்திருந்த அனைத்து கேள்விகளும், இலக்கண பயிற்சியும் இடம் பெற்றிருந்தன. எல்லாவற்றுக்கும் சிறப்பாக பதிலளித்தேன்.
சில நாட்களுக்குப் பின், தேர்வு முடிவை அறிவித்த ஆசிரியர் என் பெயரை குறிப்பிட்டு, 'இத்தனை ஆண்டு என் பணியில், எந்த மாணவனும் இந்த அளவு மதிப்பெண் வாங்கியதில்லை...' என கூறி பாராட்டினார். விடைத்தாளில், 96 மதிப்பெண் என இருந்தது.
என் வயது 35; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். பள்ளி வகுப்பறையில் அன்று பெற்ற வாழ்த்தும், பாராட்டும் நெகிழ்வு தந்து கொண்டிருக்கிறது!
- எஸ்.சங்கரசுப்ரமணியன், சென்னை.

