
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில், ராமராவ் - கிருஷ்ண வேணம்மா தம்பதிக்கு, 1909ல் பிறந்தார் துர்காபாய். இந்திய விடுதலைக்கு போராடிய வீராங்கனைகளில் முக்கியமானவர். சமூக சேவகி, எழுத்தாளர், ஆசிரியை, திட்டக்கமிஷன் உறுப்பினர், முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என பெருமிதங்களுக்கு சொந்தக்காரர்.
சிறுவயதிலே தேசபக்தி, தன்னம்பிக்கை குடும்பத்தால் ஊட்டப்பட்டது. கணவர் தேஷ்முக் சிறந்த சமூக சேவகராக இருந்ததால் சேவைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்தது.
காந்திஜி, உப்பு சத்தியாகிரகம் நடத்திய போது, மதராஸ் மகாணம் சார்பில் தலைமை தாங்கி சென்றார். எடுத்த உப்பை போட மறுத்து, விடாப்பிடியாக போராடினார். காவலர்கள் கடுமையாக தாக்கியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த போதும், 'வந்தே மாதரம்' கோஷத்தை, மந்திரமாக உச்சரித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நடத்திய போராட்டத்தால், மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். கொடுமையான சிறைவாசம், இரும்புத் தட்டில் சாப்பாடு என சிரமங்களை அனுபவித்தார். துாக்கு தண்டைனை கைதிகளுடன் அடைக்கப்பட்ட போதும் கலங்கவில்லை.
சிறையில் அடைபட்டிருந்த போது கைதிகளாக இருந்த பெண்களுக்கு கல்வி கற்பித்தார். கைத்தொழில்கள் பயிற்றுவித்தார். சிறைவாசம், வாழ்க்கையின் மற்றொரு கதவைத் திறந்தது. மகளிருக்கு சட்ட ஆலோசனை, பொருளாதார உதவி தேவைப்படுவதை உணர்ந்தார்.
விடுதலையானதும், பனாரஸ் இந்து பல்கலையில் சேர்ந்து படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.
குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை போன்ற மூட பழக்க வழக்கங்களை எதிர்த்தார். பெண்கள் சுயதொழில் செய்ய உதவியாக சிறிய மையங்களை நிறுவினார்.
முதிர்ந்த பெண்களுக்கும், அடிப்படை கல்வி அவசியம் என்று உணர்ந்து, முதியோர் கல்விக்கு, ஏற்பாடுகள் செய்தார். தேசிய கல்விக் கமிட்டியின் முக்கிய உறுப்பினராக சேவையாற்றினார். அது, பெண் கல்வியின் பொற்காலம் என போற்றப்படுகிறது.
துர்காபாயின் உடல்நலம், 1981ல் சீர்குலைந்தது. பார்வைத்திறன் மங்கியது. மரணப்படுக்கையில் இருந்த போதும் பல திட்டப்பணிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அவை, இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எண்ணற்ற ஏழை குழந்தைகளின் வாழ்வில், ஒளி ஏற்றும் விளக்காக திகழ்கின்றன. பள்ளிகள், முதியோர் இல்லங்களுக்கு அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

