
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், புனித சூசையப்பர் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2018ல், 11ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியை அஸ்வினி மிகவும் அன்பானவர். தமிழ் பாடமும் நடத்துவார்; பொது அறிவை வளர்க்கும் தகவல்களை கூறுவார். காலாண்டு தேர்வில், தமிழில், தேர்ச்சி மட்டுமே பெற்றிருந்தேன்.
இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். இதை பார்த்ததும், உரிய காரணம் கேட்டார். அலட்சியமாக, 'மேற்படிப்புக்கு, இந்த பாடங்களில் வாங்கும் மதிப்பெண்கள் தான் உபயோகப்படும்...' என கூறினேன்.
மிகவும் கனிவுடன், 'தமிழ் நம் தாய்மொழி. எப்போதும், அதன் முக்கியத்துவத்தை குறைக்க கூடாது. இன்று படிப்பது வாழ்நாள் முழுதும் உபயோகப்படும்; அதனால், எல்லா பாடங்களையும் கவனமுடன் படி...' என அறிவுரைத்தார்.
எனக்கு, 21 வயதாகிறது; பொறியியல் கல்லுாரியில், இளங்கலை இறுதி ஆண்டு படிக்கிறேன். அன்று அந்த ஆசிரியை தந்த அறிவுரையால், தமிழ் மீது காதல் கொண்டேன். பத்திரிகைகளுக்கு, துணுக்கு மற்றும் கவிதைகள் எழுதும் அளவுக்கு அது உயர்த்தியுள்ளது.
- ம.பவித்ரா, விழுப்புரம்.
தொடர்புக்கு: 77089 31335

