
கன்னியாகுமரி மாவட்டம், சொத்தவிளை அரசு நடுநிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் முகமது. அன்று, இலக்கண பாடம் நடத்தினார். இடையில் மாணவர்களிடம் கேள்வியும் கேட்டார்; யாரும் பதில் கூறவில்லை.
கடும் ஆத்திரத்தில் ஒருவனை, தோப்புக்கரணம் போட சொன்னார். அவன் தயங்கி நின்றது கண்டு, 'ஏன்டா... மற்றவர் முன்னிலை என்பதால் கேவலமாக இருக்கிறதா... தண்டனையை அனுபவித்தே ஆகணும்...' என உத்தரவிட்டார்.
மிகவும் பணிவுடன், 'ஐயா... இந்த தண்டனை வேண்டாம். அதற்கு பதில், துாக்குத்தண்டனை தாருங்கள்...' என்றான். அனைவரும் மிரண்டு போனோம்.
பின், அவனை தனியாய் அழைத்து விசாரித்தார் ஆசிரியர். அப்போது, 'ஐயா... என் அப்பா மதுவிற்கு அடிமையாய் இருப்பவர். இதனால், குடும்பத்தில் வறுமை நிலவுகிறது. எனக்கு, நைந்து கிழிந்த இரண்டு, 'பேண்ட்'களே உள்ளன. அணிந்திருப்பதில் பட்டன்கள் இல்லாததால், 'சேப்டி பின்' குத்தி இருக்கிறேன்... பின் பகுதியில் தையல் பிரிந்து விட்டது. தோப்புக்கரணம் போட்டால் முழுதும் கிழிந்து விடும்...' என்று கூறியுள்ளான்.
அதை கேட்டு நிலை குலைந்த ஆசிரியர், மறுநாள் இரண்டு புதிய சீருடைகள் தந்தபடி, 'இனி, ஒழுங்கா படிக்கா விட்டால் தோப்புக்கரணம் போடணும்...' என்றார். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
தற்போது, என் வயது, 45; மின் இயந்திரங்கள் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறேன். உடன்படித்த அந்த நண்பர், டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி, வாழ்வில் உயர்ந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.
- மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.
தொடர்புக்கு: 94870 56476

