
திருப்பத்துார், அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 6ம் வகுப்பு படித்தேன்.
தமிழாசிரியராக இருந்த சுப்புரத்னம் கண்ணியமானவர். தமிழில் அதிக மதிப்பெண் எடுத்து வந்த என்னை வகுப்பு தலைவனாக்கினார். நிர்வக பயிற்சிகள் தந்தார்.
அன்று என் முகம் வாடியிருந்ததை கண்டதும் காரணத்தை கேட்டறிந்து, 'இதற்கு போய் கவலைபடலாமா...' என்று ஆறுதல் கூறினார்.
அப்போது, தபால் அலுவலகத்தில் ஒருவகை சேமிப்பு திட்டம் அறிமுகமாகி இருந்தது. பெற்றோர் தரும் அன்பளிப்பில் அங்கு சேமிக்கலாம். அதாவது, உரிய பண மதிப்பில் தபால் தலை வாங்கி, பாஸ் புத்தகத்தில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு பின், அதை தபால் நிலையத்தில் சமர்ப்பித்தால், அஞ்சல் தலை மதிப்புக்கு ஏற்ப, வட்டியுடன் பணம் கொடுப்பர்.
அந்த சேமிப்பு திட்டம் பற்றி என் தந்தையிடம் விபரம் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி என்னை சேர்த்தார் ஆசிரியர். பணத்தை உரிய முறையில் சேமித்து, நீண்ட நாட்களாக கனவாக இருந்து மிதிவண்டி வாங்கி மகிழ்ந்தேன்.
என் வயது, 69; கூட்டுறவு வங்கியில், மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அன்று சேமித்து வாங்கிய மிதிவண்டியை அந்த ஆசிரியர் நினைவாக பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.
- டி.கே.சுகுமார், கோவை.

