
முன்கதை: வேழமலை நாட்டில் இளவரசன் வீரவேலனுக்கு முடி சூட்ட முடிவு செய்திருந்த போது திடீரென அவர் மாயமானதாக தகவல் வந்தது. தேடும் படலம் துவங்கியது. அப்போது, நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளதாக தெரிவித்தான் ஒற்றன். இனி -
'தளபதி... கோட்டையை அடுத்த காட்டுப் பகுதியில், மர்ம நபர்களின் நடமாட்டம் தெரிகிறது. அவர்கள், எந்த நாட்டு வீரர்கள் என்பதை அறிய இயலவில்லை...'
ஒற்றன் செய்தியை கூற, ராஜகுருவுக்கும், தளபதிக்கும் அதிர்ச்சி மேலோங்கியது.
'என்ன நிகழ்கிறது என்பதை விரிவாக சொல்...' என்றார் தளபதி.
'நான், வழக்கமாக உளவு பார்த்துக் கொண்டு இருந்தேன். கோட்டையின் தெற்கில் உள்ள காட்டுப் பகுதியில், ஆள் நடமாட்டம் தெரிந்தது. அதை கண்காணித்தேன்; அங்கிருந்தவர்கள் பார்ப்பதற்கு, பயிற்சி பெற்ற வீரர்கள் போல தோற்றம் அளித்தனர்...'
'எத்தனை பேர் இருந்தனர்...'
'அடர்ந்த புதரான பகுதிகளில் ஊடுருவி இருந்ததால், எத்தனை பேர் என அறிய முடியவில்லை. ஐந்து அல்லது ஆறு பேருடைய குழு என கணிக்கிறேன்...'
ஒற்றன் சொல்ல, தளபதியின் முகத்தில், குழப்ப ரேகை ஓடியது.
'அந்த பகுதியை தொடர் கண்காணிப்பில் வை. மிகுந்த கவனம் தேவை...' என்ற தளபதி, கண் அசைவால் ஒற்றனை அனுப்பிய பின், ராஜகுருவிடம் திரும்பினார்.
'யாரேனும், போர் தொடுக்க முயற்சி செய்கின்றனரா...'
'வாய்ப்பு இருக்கிறது தளபதி...'
'வேழமலை நாட்டின் மீது, போர் தொடுக்க நினைப்பது யாராக இருக்கும்...'
'சமவெளி பகுதி மன்னர்கள் எல்லாருக்கும் மலைவளமும், மரவளமும் நிறைந்த இந்த மலைநாட்டின் மீது ஆசை இருக்கிறது...'
'போர் ஓலை எதுவும் வரவில்லையே...'
'நம் கோட்டையின் பாதுகாப்பு மிக வலுவாக இருக்கிறது. உயரத்தில் இருப்பதால் சமவெளியிலிருந்து தாக்கி தகர்ப்பது கடினம்; அதனால், தாக்குதலுக்கான வியூகங்களை அமைக்க, கட்டமைப்பை வேவு பார்க்க, திட்டமிட்டு இருப்பர்; அதனால் தான், கோட்டையின் கிழக்குப் பகுதியில், வாசல் இருக்கும் போது, தெற்கு பகுதியில் களம் இறங்கியுள்ளனர். போர் வியூகங்கள் அமைத்த பின், ஓலை அனுப்புவர்...' என்றார் ராஜகுரு.
'இதை ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும். வந்துள்ள வீரர்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை முதலில் கண்டறிந்து, கைது செய்து, சிரசேதம் செய்வேன்...'
ஆவேசப்பட்டார் தளபதி.
ராஜகுருவின் முகத்தில் மேலும், குழப்ப ரேகை படர்ந்தது.
'இளவரசரை கடத்தி சென்ற எதிரி நாடு, அவரை பணயமாக்கி போருக்கு ஆயத்தம் ஆகியிருக்கலாம்...'
இப்படி ஒரு சந்தேகத்தை ராஜகுரு வலுவாக எழுப்பியிருந்தார்.
திடீரென உறக்கம் கலைந்து எழுந்தார் தளபதி.
ஒற்றன் கூறிய விஷயம் அவர் மனதில் நிழலாடியது.
'கோட்டையின் தெற்கு பகுதிக்கு வந்த வீரர்கள் யாராக இருக்கும்'
இக்கேள்வி மனதை குடைந்ததால், எதுவும் பிடிப்படவில்லை.
எழுந்து உடை மாற்றி, குதிரையில் புறப்பட்டார் தளபதி.
அகலமான கோட்டை மதில் சுவரின் தெற்கு பகுதியில், குதிரை மெல்ல நடை போட்டது. தளபதியை கண்டதும், பணிவுடன் குனிந்து, மரியாதை செலுத்தினர் காவல் வீரர்கள். பதிலுக்கு தலையசைத்தபடியே, தளபதியின் கண்கள், காட்டுப்பகுதியை அலசின.
சட்டென அவர் கைகள் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க நடையை நிறுத்தியது.
தளபதியின் பார்வை ஓரிடத்தில் நிலை குத்தியது.
கோட்டையின் உயரமான மதில் சுவரிலிருந்து பார்த்த போது, கீழே தெற்கு பகுதியில் காட்டில் வல, இட புறமாக தீ பந்தங்கள் நகர்வது தெரிந்தது. அது, ஒற்றன் குறிப்பிட்ட வீரர்களாக தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றியது.
அவர்கள், மனித சங்கிலி போல் அணிவகுத்து நிற்பதாய் பட்டது. தீ பந்தங்களின் எண்ணிக்கையை தளபதியின் மனம் கணக்கிட்டது. அங்கு, ஒற்றன் குறிப்பிட்டது போல், ஐந்து அல்லது ஆறு நபர்கள் அல்ல; 20க்கும் மேற்பட்டோர் இருப்பதாக கணித்தார்.
சிறிது நேரத்திற்கு பின் -
தீப்பந்த வீரர்கள் மறைந்தனர்.
நாட்டை ஆபத்து சூழ்ந்திருப்பது உறுதியானது.
உடனே, குதிரை படைத்தலைவன் மகேந்திரனை அழைத்தார் தளபதி.
'கோட்டையின் தெற்கு திசையில் உள்ள காட்டுப் பகுதியில், எதிரிகளின் நடமாட்டம் உள்ளது. வீரர்களுடன் சென்று, அவர்களை கைது செய்து வாருங்கள்...'
கட்டளையிட்டார் தளபதி.
அதிகாலையில், மகேந்திரன் தலைமையில், 30 வீரர்கள் உடைய குதிரைப் படை, தெற்கு திசையில் உள்ள காட்டுப் பகுதிக்கு வந்தது.
குதிரைகளின் காலடி சத்தம், காட்டில் நிலவிய அமைதியை கிழித்தது.
குதிரையை நடக்க விட்டு, அந்த இடத்தை பார்வையால் அலசினான் மகேந்திரன்.
செடிகொடிகள் ஒடிந்திருந்த பகுதிகள் கண்ணில் பட, குதிரையிலிருந்து இறங்கி, அந்த இடத்தை சுற்றி வந்தான். மற்ற வீரர்களும் இறங்கினர்.
'நடந்து தான் இங்கு வந்துள்ளனர்...' என்றான் மகேந்திரன்.
'எப்படி சொல்கிறீர்...'
'தரையில் குதிரைகளின் காலடி தடம் இல்லை. வீரர்களின் காலில் மிதி பட்டு ஆங்காங்கே செடிகள் மட்டும் ஒடிந்திருக்கின்றன. பந்தங்களிலிருந்து வெளிப்பட்ட தீச்சுவாலையால் பசுந்தழைகள் கருகி உள்ளன. எனவே, நடந்தே வந்து சென்றிருப்பர்...'
விவரித்தான் மகேந்திரன்.
'எரிந்து அணைந்த ஒரு தீப்பந்தம் இங்கு கிடக்கிறது...'
கூவினான் ஒரு வீரன்.
விரைந்து சென்று, வீரன் சுட்டிக்காட்டிய இடத்தில் கிடந்த தீப்பந்தத்தை கூர்ந்து பார்த்தான் மகேந்திரன்.
'இந்த மரக்கொம்பு காயாமல், பசுமையாய் இருக்கிறது. எதிரிகள் இங்கு வந்த பின், மரக்கொம்புகளை வெட்டி தீப்பந்தத்தை தயாரித்துள்ளனர். அவர்கள், வெகுதுாரம் சென்றிருக்க வாய்ப்பில்லை; ஏதாவது ஒரு பகுதியில் மறைந்திருப்பர்; தேடுங்கள்...'
கட்டளையிட, வீரர்கள் ஆளுக்கொரு திசையில் தேடலை தொடர்ந்தனர்.
மாலை வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
'அடர்ந்த காட்டில், எதிரிகள் எங்கேயாவது மறைந்து இருப்பர். வீரர்களே... கோட்டைக்கு திரும்பலாம். தளபதியுடன் ஆலோசித்து அடுத்த நடவடிக்கையை எடுப்போம்...' என்றான் மகேந்திரன்.
கோட்டைக்கு வந்த பின் -
குதிரை வீரர்கள் அணிவகுத்து நின்றனர். படையில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருவர் காணாமல் போயிருந்ததை கவனித்து அதிர்ந்தான் மகேந்திரன்.
- தொடரும்...
ஜே.டி.ஆர்.

