/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - மூக்கை எப்படி பாதுகாப்பது!
/
அதிமேதாவி அங்குராசு - மூக்கை எப்படி பாதுகாப்பது!
PUBLISHED ON : மார் 16, 2024

முகத்துக்கு பொலிவு தருவது மூக்கு. உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் செலுத்தும் முக்கிய உறுப்பு. வாசனையை அறியும் ஆற்றல் உடையது. பேச்சுக்கும், மூக்குக்கும் கூட தொடர்பிருக்கிறது. பேசும் போது, குரல் சரியாக அமைய வேண்டும். அதற்கு மூக்கும் அதன் அருகில் உள்ள சைனஸ் காற்றறைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
மூக்கில் இரு பகுதிகள் உள்ளன. நடுவில் இடைச்சுவர். மேல் பாகம் கூரை போன்ற அமைப்பை உடையது. இந்த பகுதி, 10 ஆயிரம் வகை வாசனைகளைப் பிரித்து உணரும் திறன் உள்ளது.
மூக்கின் முனை பகுதிக்குள் மயிரிழைகள் உள்ளன. இவை, காற்றை வடிகட்டி நுரையீரலுக்கு சுத்தப்படுத்தி அனுப்பும். அடுத்துள்ள சங்கு போன்ற அமைப்பில், 'டர்பினேட்' என்ற சளித்திரவம் சுரக்கிறது. இது காற்றை குளிர்வித்து, உடலை இதமான வெப்பநிலைக்கு கொண்டு வரும். பின், மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் நுழைகிறது.
வெளிக்காற்றில் இருக்கும் வெப்பநிலை அப்படியே உள்ளே போனால், நுரையீரல் பாதிக்கப்படும். இதை தடுக்கும் ஏற்பாடு தான் சளித்திரவம்.
அசுத்த காற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் உடலுக்குள் புகுந்து தாக்கும் போது, ஜலதோஷம் ஏற்படுகிறது. கிருமி தாக்கியதும் ஆபத்து என்பதை மூளை உணர்த்தும். உடனடியாக, மூக்குக்கு ரத்த வினியோகம் அதிகரிக்கப்படும். அடுத்த கட்டமாக, 'டர்பினேட்' விரிவடைந்து, சளித்திரவம் அதிகமாக சுரக்க வழி செய்யும். இதை தான் சளித் தொல்லை என்கிறோம்.
சுத்தமான காற்றை சுவாசித்து, நன்றாக ஓய்வெடுப்பது தான், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி. ஒரு வாரத்தில் இயல்பாக குணமாகி விடும். மூக்கடைப்பு ஒரு பக்கமாகவோ, இரண்டு பக்கமாகவோ இருக்கலாம். மூக்கில் உள்ள சளிச்சவ்வு வீங்கி, மூக்கை அடைக்கும். ஒவ்வாமை காரணமாகவும் மூக்கடைப்பு ஏற்படும். அப்போது, தொடர்ச்சியாக தும்மல் வரும்.
குழந்தைகளுக்கு, 'அடினாய்டு' என்ற அண்ணச்சதை வீங்கும் போதும், சைனஸ் அழற்சி தீவிரமாகும் போதும், நீர்க்கோப்புச் சதை வளரும் போதும், மூக்கடைப்பு ஏற்படும்.
தொடர்ச்சியாக, மூக்கு அடைத்துக் கொண்டால், காது, மூக்கு, தொண்டை குழாயும் அடைபடும். இதில் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும். வாயால் மூச்சு விட வேண்டிய நிலை ஏற்படும். இதன் விளைவாக குறட்டை விடுதல், தெற்றுப் பற்கள் உண்டதால் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மூக்கடைப்பை போக்க, பலவகை சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.
மூக்கடைப்பை போக்க நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வேண்டும். படுக்கும் போது, சுவாசம் சீராக வருவதற்கு ஏற்ற வகையில் தலைபாகத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். சத்துள்ள உணவு சாப்பிட்டு, நோய் எதிர்பாற்றலை வளர்த்துக் கொண்டால், மூக்கடைப்பு குறையும்.
குழந்தைகள் மூக்கில் விரலை நுழைத்து குடைவது வழக்கம்; குச்சி, பல்பம், பென்சில், பேனா போன்றவற்றால் குடைந்தால் சில் மூக்கு பாதிக்கப்பட்டு ரத்தம் வடியும். இதற்கு, மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற வேண்டும்.
மூக்கை சுத்தமாக வைக்கா விட்டால், ஈக்கள் முட்டையிட்டு, புழுக்கள் வளர்ந்து விடும். குளிக்கும் போது, மூக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். தும்மல் ஏற்படும் போதும், சிந்தும் போதும் கைக்குட்டையால் மறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவாது. மூக்கை பாதுகாப்போம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

