
முத்து போல, பவளமும் கடலில் தான் கிடைக்கிறது. வெதுவெதுப்பான கடல் நீர்ப்பகுதியில் விளையும். இதை துப்பு, பிரவாளம், துவர், துகிர், வித்துருமம், அர்த்தம் என்றும் அழைப்பர்.
பவளப்பூச்சி என்பது ஒரு கடல்வாழ் உயிரினம். கரையான் புற்று போல் கூடு கட்டும். இதுவே பவளப்பாறை.
குழியுடலி இனத்தை சேர்ந்தது பவளப்பூச்சி. ஜல்லிவேர் போன்ற கால்களை உடையது. கடல் நீரில் உள்ள உப்புகளை பிரித்தெடுத்து, உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
கடல் நீரில் சுண்ணாம்பு சத்தை உறிஞ்சி, கால்ஷியம் கார்பனேட்டை சுரக்கும். இது, பல கிளைகளை உடைய மரங்களை போல் இருக்கும்; இதை பவளக்கொடி என்பர். இவை திட்டுகளாக சேர்ந்து இறுகி பாறையாகி தீவு போல் ஆகும்.
இதை பவளப்பாறை தீவு என்பர்.
பவளப்பூச்சிகள் கடலில், 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் செழித்து வளரும். இவற்றால், 18 டிகிரி செல்ஷியசுக்கு குறைந்த வெப்ப நிலையில் வாழ முடியாது.
இதன் வளர்ச்சிக்கு, சூரிய ஒளி பரவும் தெளிவான கடல் நீர் அவசியம். கடல் நீரில் உப்பின் அளவு, லிட்டருக்கு, 35 கிராமுக்கு மேல் இருக்கக் கூடாது. பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன.
உலகின் மிகப்பெரும் பவளப்பாறை, ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதை விண்ணிலிருந்தும் பார்க்க முடியும்; அது, 1.33 லட்சம் சதுர கி.மீ., பரப்பில் உள்ளது. இங்கு, 2,900 தனித்தனி பவளப்பாறைகள் உள்ளன. இது, 1,400 கி.மீ., நீளத்தில், 1,050 தீவுகளாக இருக்கிறது.
பவளத்தில் சிறந்த வகை, சிவப்பு வண்ணத்துடன் வெண்மை கலந்து எண்ணெய் பூசியது போல இருக்கும். பவளத்தீவிலிருந்து கிடைக்கும் கால்ஷியம் கார்பனேட்டில், பற்பசை, ரப்பர், எழுதும் மை, காகிதம், பீங்கான் பொருள்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பூச்சிக் கொல்லி தயாரிக்கவும் பயன்படுகிறது.
பருவநிலை மாற்றங்களால், பவளப்பாறை அழிவை எதிர் நோக்கியுள்ளது. இதனால், பவளத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
- வ.முருகன்

