/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - எழுத்தை படிக்கும் குரங்கு!
/
அதிமேதாவி அங்குராசு - எழுத்தை படிக்கும் குரங்கு!
PUBLISHED ON : மார் 23, 2024

குரங்கின் அடுத்த கட்ட வளர்ச்சி மனிதன் என்கிறது, பரிணாம அறிவியல். அதாவது, குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது விஞ்ஞானிகள் முடிவு.
அதற்கு ஏற்றது போல, சிலவகை குரங்குகளின் நடத்தை மனிதன் போலவே உள்ளன. அப்படி ஆச்சரியப்பட வைக்கும் குரங்கு இனம் பாபூன். இது, ஆப்பிரிக்காவை பூர்வீகமாக உடையது. மத்திய கிழக்கு நாடான அரேபியாவிலும் காணப்படுகிறது. இது, 20 லட்சம் ஆண்டுகளாக பூமியில் வசிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பாபூன் குரங்கின் புதை படிவம், 2015ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்கில், ஐந்து இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் எடையிலும் மாறுபாடு உள்ளது.
பாபூனில், கிண்டா என்ற ஒருவகை 50 செ.மீ., நீளமும், 14 கிலோ எடையும் உடையது. சாக்மா என்ற பாபூன், 120 செ.மீ., நீளமும், 40 கிலோ எடையும் உடையது.
பாபூன் குரங்கு கூர்மையான கோரைப்பற்களும், கனமான தாடைகளும் உடையது. நீளமான ரோமம் உடல் முழுதும் அடர்ந்து இருக்கும். முகம் மட்டும் கிராப் வெட்டியது போல தெளிவாக காட்சியளிக்கும்.
குரங்குகளுக்கு வழக்கமாக நீண்ட வால் இருக்கும். இந்த இனத்துக்கு குட்டையாக இருக்கும். இரவில், எதிரியிடமிருந்து தப்ப, உயரமான பாறை அல்லது மரக்கிளையில் துாங்கும். தாவரங்கள், விதை, கிழங்கு, இலை, மரப்பட்டையை சாப்பிடும். சிறிய விலங்குகள், பறவைகள், பூச்சிகளையும் உணவாக்கும். சராசரியாக, 30 ஆண்டுகள் வரை வாழும்.
இந்த குரங்கு இனத்தின் வாழ்க்கை முறை ஆச்சரியம் தரும்.
இது, குழுவாக வாழும் விலங்கினம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை மேற்கொள்கின்றன. ஒரு குடும்பத்தில், 50 பாபூன்கள் வரை இருக்கும். வசிக்கும் இடத்தை பொறுத்து, 250 பாபூன்கள் வரை சேர்ந்திருக்கும்.
கூட்டு குடும்பத்தை, மூத்த ஆண் குரங்கு தான் கட்டுப்படுத்தும். பெண் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இந்த குரங்குகள் வாழ்கையிலிருந்து தான், மனிதன் கூட்டுக் குடும்ப முறையை கற்றுக் கொண்டிருக்கக் கூடும் என்பது, மனுடவியல் அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த குரங்கின் எதிரி சிறுத்தை மற்றும் சிங்கம் தான். எதிரியிடமிருந்து பெரிய குரங்குகள் தாவி தப்பித்தாலும், சிறிய குரங்குகள் மாட்டிக் கொள்ளும். குட்டி குரங்குகளை காக்க, பெரிய குரங்குகள் கண்களிலிருந்து ஒளியை ஒளிர செய்யும். சில சைகை முறைகளையும் பயன்படுத்தும். இதை உணர்ந்து, குட்டி தப்பி விடும்.
இந்த குரங்கு இனம், 'ஆர்தொகிராபிக் பிராசசிங்' என்ற உடலியக்க செயல்களை வெளிப்படுத்தும். இது, எழுத்தை ஒவ்வொன்றாக கூட்டி படிக்கும் முறையாகும். ஒழுங்கற்று கிடக்கும் பொருட்களை, வரிசையாக்கி வகைப்படுத்தும். எழுத்துக்கூட்டி படிக்கும் முறையை, இந்த குரங்கு இனம் நெருங்கி இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்!
- -என்றென்றும் அன்புடன், அங்குராசு.