
அன்புள்ள ஆன்டி...
என் வயது, 18; கிராமத்தை சேர்ந்த இளம்பெண். சென்னை கல்லுாரியில், இளங்கலை வணிகவியல் பாடத்தில் சேர இடம் கிடைத்துள்ளது.
கோவில்பட்டியிலிருந்து, சென்னைக்கு ரயிலில் போனேன். இந்திய ரயில்வேக்கு என்று பிரத்தியேகமாக நேரம் இருக்கிறதாமே... ரயில் நேரம் பற்றி, எனக்கு விளக்கி சொல்லுங்கள் ஆன்டி...
இப்படிக்கு,
என்.திராவிட முக்கனி கலையரசி.
அன்பு மகளுக்கு...
இந்திய ரயில்வேயில், 16 மண்டலங்கள் உள்ளன.
கிழக்கு ரயில்வே மண்டலம், தென்மத்திய ரயில்வே மண்டலம், மத்திய ரயில்வே மண்டலம், கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம், வடக்கு ரயில்வே மண்டலம், கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம், மேற்கு ரயில்வே மண்டலம், தென்கிழக்கு ரயில்வே மண்டலம், தெற்கு ரயில்வே மண்டலம், வடகிழக்கு ரயில்வே மண்டலம், வடமேற்கு ரயில்வே மண்டலம், தென்மேற்கு ரயில்வே மண்டலம், வடமத்திய ரயில்வே மண்டலம், வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம், கொங்கன் ரயில்வே மண்டலம் என்பவையாகும்.
அனைத்து மண்டலங்களுக்கான தலைமையகம் டில்லியில் உள்ளது.
கன்னியாகுமரி முதல், திப்ருகர் வரை செல்லும் விரைவு ரயில், 4,200 கி.மீ., துாரத்தை, 80 மணி நேரத்தில் கடக்கிறது. இதில், 50 நிறுத்தங்கள்; இந்த ரயில், பல மண்டலங்களுக்குள் புகுந்து, கடைசியில், வடகிழக்கு எல்லை ரயில்வேக்குள் சென்று சேர்கிறது.
பல்வேறு மண்டலங்களில், வெவ்வேறு உள்ளூர் நேரங்களை கடைபிடித்தால், ரயில் வரும், புறப்படும் நேரங்களில், மாபெரும் குழப்பம் ஏற்படும் இல்லையா... நேரக்குழப்பம் ஏற்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பும் அதிகரிக்கிறது. எனவே தான், அனைத்து இந்திய ரயில் நிலையங்களையும் இணைக்கும் ரயில்வே நேரம் உருவானது.
ரயில்வே நேரம் என்ற நியம நேர ஏற்பாட்டை, முதலில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் மகாமேற்கு ரயில்வே, நவம்பர், 1840ல் கொண்டு வந்தது.
இதற்கு இங்கிலாந்தின் பல நகரங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது. 40 ஆண்டு போராட்டத்துக்கு பின், இங்கிலாந்து முழுக்க, ரயில்வே நேரம் அமல்படுத்தப்பட்டது.
இந்திய ரயில்வேயில், 1906ல் இது போல் நேரம் அமல்படுத்தப்பட்டது. கோல்கட்டா, 1948 வரையும், மும்பை, 1955 வரையும், உள்ளூர் நேரத்தையே தக்க வைத்திருந்தன.
ரயில் மற்றும் விமான போக்குவரத்து, 24 மணி நேர கடிகாரத்தை பயன்படுத்துகின்றன. காரணம், அவை, 24 மணி நேரமும் இயங்குகின்றன.
ரயில்வே நேரத்தில், காலை, மாலை கிடையாது; 24 மணி நேர கடிகார முறையில், நான்கு இலக்கங்களில் குறிக்கின்றனர்; முதல் இரு இலக்கங்கள், மணியை குறிக்கும். கடைசி இரு இலக்கங்கள், நிமிடங்களை குறிக்கும்.
மணி இலக்கத்துக்கும், நிமிட இலக்கத்துக்கும் இடையே புள்ளிகள் கிடையாது.
ரயில்வே நேர அட்டவணை புத்தகம், எல்லா ரயில் நிலையங்களிலும் கிடைக்கும். ரயில் அட்டவணை செயலியாகவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.