
தங்கம் பயன்பாடு பழங்காலத்திலே மதிப்பு மிக்கதாக இருந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், தங்கத்தாலான புராதன பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில், தங்கத்தால் செய்த பெல்ட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இது கிடைத்துள்ளது. ஒரு விவசாயி நிலத்தில், பீட்ரூட் அறுவடை நடந்து கொண்டிருந்தது. அப்போது, அழகான வேலைப்பாடு உடைய தங்க பெல்ட் கண்டு எடுக்கப்பட்டது.
அது குறித்து, அங்குள்ள சிலேசியன் அருங்காட்சியகத்துக்கு தகவல் போனது. தொல் பொருள் ஆய்வாளர்களுக்கு அந்த தங்க பெல்ட் புகைப்படம் அனுப்பப்பட்டது. அதை ஆராய்ந்து, அதன் பழமை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது தொல்லியல்துறை.
கண்டறியப்பட்ட தங்க பெல்ட், 51 செ.மீ., நீளமுடையது. இதனுடன், வெள்ளி, தாமிரம், இரும்பு உலோகங்கள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தோலால் ஆன பெல்ட்டின் முன்புறம் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. தங்க பெல்ட் பட்டையில், அழகிய வடிவங்கள் கலை நுட்பத்தோடு செதுக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் அதிகாரமிக்கவருக்கு, இந்த பெல்ட் சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். ஆய்வுக்கு பின், மியூசியத்தில் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- நர்மதா விஜயன்