
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசன் திடீரென மாயமானதாக தகவல் வந்தது. நாட்டில் நிலவிய ஆபத்தை முறியடிக்க சென்ற குதிரை படை வீரர்கள் இருவரை காணவில்லை. அது பற்றி தளபதி விசாரித்துக் கொண்டிருந்த போது கோட்டை நோக்கி ஒரு உருவம் நகர்ந்தது. இனி -
காட்டுக்குள் இருந்து கோட்டை நோக்கி வந்தது, காணாமல் போன குதிரை வீரர்களில் ஒருவன். அவனை அழைத்து சென்று, அரண்மனை தனி அறையில் விசாரித்தனர் ராஜகுருவும், தளபதியும்.
அவன் பதற்றமின்றி, 'காட்டுக்குள், எதிரிகளை தேடி சென்ற போது ஒரு குழு சுற்றி வளைத்து, சிறைப் பிடித்தது. அதில் இருந்தவர்கள், என் கண்கள் மற்றும் கைகளை கட்டி, உட்பகுதிக்குள் இழுத்து சென்றனர்; அங்கு, ஏற்கனவே நம் குதிரை படை வீரன் ஒருவனை, சிறைப் பிடித்திருந்தனர்...' என்றான்.
'நம் குதிரைகள் என்னவாயிற்று...'
'எங்களை சிறைப் பிடித்தவுடன், குதிரையை கைப்பற்றிய இருவர், அதை தனியாக இழுத்து சென்றனர். எங்களை கால்நடையாகவே கூட்டி சென்றனர்; காட்டின் உட்பகுதியில், மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் முகாமிட்டுள்ளனர்...'
'அது எந்த இடம் என, தெரிந்ததா...'
'இல்லை ராஜகுருவே... நன்கு இருள் கவிழ்ந்த பின் தான், எங்கள் கண்கட்டை அவிழ்த்தனர்...'
'அங்கு, எத்தனை பேர் இருந்தனர்...'
'அங்கு, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர்...'
'என்ன, அவ்வளவு வீரர்களா...'
'ஆம்... நான்கைந்து குழுக்களாக முகாமிட்டுள்ளனர். நெருப்பு வெளியே தெரியாத வகையில், கூடாரம் அமைத்து, உணவு தயாரித்தனர்...'
'உனக்கும் உணவு அளித்தனரா...'
'ஆம்...'
'என்ன உணவு...'
'நெருப்பில் சுட்ட கிழங்கும், வேக வைத்த இறைச்சியும்...'
'அது, நம் மக்கள் உண்ணும் உணவு அல்லவா...'
குழப்பத்துடன் கேட்டார் தளபதி.
'ஒரு கூடுதல் தகவல் தளபதி...'
'என்ன சொல்லு...'
'நான் பார்த்தது, ஒரு குழு மட்டும் தான் என நினைக்கிறேன். அவர்கள், தங்களுக்குள் பேசியதை பார்த்தால், இதைப் போல் இன்னும், ஓரிரு குழுக்கள் காட்டிற்குள், மறைந்திருக்க கூடும் என தோன்றுகிறது...'
ராஜகுருவின் மனதில், லேசான கலவர உணர்வு தோன்றியது.
அவனிடம் மேலும், சில கேள்விகளை கேட்டு அனுப்பி வைத்தனர்.
'தளபதி... உடனே, அமைச்சரை அழையுங்கள்; ஆலோசிப்போம்...' என்றார் ராஜகுரு.
விரைந்து வந்து, அவர்களுடன் கலந்தார். ஆலோசனை தொடர்ந்தது; விபரங்களை கேட்டு பேசினார் அமைச்சர்.
'நம் வீரன் கூறியதை பார்த்தால் எதிரிகள், சில மாதங்களுக்கு முன், ஊடுருவி இருப்பர் என்று தோன்றுகிறது. நம் நாட்டின் உணவை சாப்பிடவும் பழகியுள்ளனர்...'
தலையசைத்து ஒப்புக் கொண்டார் ராஜகுரு.
'அமைச்சர் கூறுவதைப் பார்த்தால், இளவரசர் காணாமல் போன காலக்கட்டம், எதிரிகள் ஊடுருவியதாக சொல்லும் காலம் இரண்டிற்கும், ஒற்றுமை இருப்பது தெரிகிறது...' என்றார் தளபதி.
'ஆமாம். எதிரிகள் தான், இளவரசரை கடத்தியிருப்பர்...'
'இளவரசரை காட்டிற்குள், காவல் வைத்திருக்கின்றனரா அல்லது எதிரி நாட்டுக்கு அழைத்து சென்று இருப்பரா என்பதை கண்டறிய வேண்டும்...' என்றார் ராஜகுரு.
'ஊடுருவி இருப்போர், காட்டுக்குள் இருக்கின்றனர் என்றால், நிலைமை விபரீதம் தான்...'
'அவர்களை உடனே, சிறைப் பிடிக்கவோ அல்லது விரட்டவோ வேண்டும். இளவரசரை மீட்க வேண்டும்...'
'சரி... உடனே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்...' என்றார் தளபதி.
'இந்த சூழலில், விஷயத்தை மன்னருக்கு தெரியப்படுத்துவது தான் சரி. ஆனால், இளவரசர் பற்றிய விஷயம் தெரிய கூடாது; அதை மட்டும் நாம், தனியாக கையாளுவோம்...'
ராஜகுருவின் கருத்தை எதிர்க்கவில்லை அமைச்சரும், தளபதியும். ஆனால், காட்டுக்குள் பொதிந்திருக்கும் சிக்கல்கள், இவர்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிதாக தீர்க்கப்பட கூடியவை அல்ல என்பது, போக போகத் தான் புரியும்.
மன்னரின் அறைக்கு ராஜகுரு, அமைச்சர், தளபதி வந்தனர். அப்போது, அங்கு வைத்தியரும் இருந்தார். ராணி மங்கையர்க்கரசி அங்கு இல்லை. எனவே, மன்னர் சாய்ந்து கொள்ள வசதியாக, சேடிப் பெண்கள் தலையணைகளை அமைத்தனர்.
வைத்தியர் கண்ணைக் காட்ட, சேடிப்பெண்கள் வெளியேறினர்.
'இளவரசர் நலமாக இருக்கிறாரா...'
விசாரித்தார் மன்னர்.
'நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நல்ல உணவு வழங்குகிறோம். உலாவுவதற்கு கூடுதலாக விசாலமான அறை ஒன்றையும் வழங்கியுள்ளோம்; அவரோடு சதுரங்கம் விளையாட வீரர்களை அனுமதிக்கிறோம்...'
'அவரை நான் பார்க்க வேண்டும்...'
'இளவரசர் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்...' என்றார் அமைச்சர்.
'நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்...'
'உங்கள் உடல்நலம் சரியாகட்டும். நாட்டில் சூழ்நிலைகள் சீராகட்டும்... அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்...'
'என் உடல் நிலையைப் பயன்படுத்தி, அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறீர்...'
'இல்லை மன்னா... உங்கள் உடல்நிலையை கருத்தில் வைத்து, உங்கள் சுமையை நாங்கள் சுமக்கிறோம்...'
சற்று நேரம் அமைதியாக இருந்தார் மன்னர்.
'மூவரும் சேர்ந்து வந்திருக்கிறீரே... என்ன விஷயம்...'
மெல்லிய குரலில் விசாரித்தார் மன்னர்.
'தற்போது, ஒரு புதிய பிரச்னை முளைத்துள்ளது...'
தயக்கத்துடன் வார்த்தைகளை நிறுத்தினார் ராஜகுரு.
மன்னரின் முகபாவம் சட்டென மாறியது.
'நீங்கள் தயங்குவதைப் பார்த்தால் ஏதோ விரும்பத்தகாத செய்தி போல தோன்றுகிறது. என்ன விஷயம்... சொல்லுங்கள் ராஜகுருவே...'
ராஜகுரு, அமைச்சரை திரும்பி பார்த்தார்; அமைச்சர் மவுனமாக நின்றார்.
'அமைச்சரே... நீங்களாவது சொல்லுங்கள் என்ன பிரச்னை...'
'மன்னா... நம் காட்டுப் பகுதியில் எதிரிகளின் நடமாட்டம் தெரிகிறது...'
'ஒற்றரின் செய்தியா இது...'
'ஆம்... ஆனால், நாங்களும், வீரர்களை அனுப்பி உறுதி செய்துள்ளோம்...' என்றார் தளபதி.
'நான் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது இப்படி ஒரு சூழ்நிலையா...'
மன்னரின் முகத்தில் சஞ்சலம் தெரிந்தது.
'எதிரிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். இது என் உத்தரவு...' என்றார் மன்னர்.
தளபதி தாழக்குனிந்து உத்தரவை ஏற்றபடி, 'இதற்கான அனைத்து பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டன...' என்றார்.
'நீங்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் மன்னா. உங்கள் உடலுக்கும், மனதுக்கும் இப்போது ஓய்வு தேவை. வெளி விவகாரங்களை அமைச்சரும், தளபதியும் ராஜகுருவும் கவனித்துக் கொள்வர். அவ்வப்போது உங்கள் ஆலோசனை மட்டும் கூறுங்கள்...' என்றார் வைத்தியர் வஞ்சக குரலில்.
'நமக்கு நாடு முக்கியம்...'
இந்த வார்த்தைகள் மட்டும் மன்னர் வாயிலிருந்து வந்தன.
- தொடரும்...
ஜே.டி.ஆர்.