
வெற்றிக்கு வழி வீரமாக பேசுவதல்ல; விவேகத்துடன் கூடிய அறிவும், செயல் திறனுமே ஆகும். வாழ்வின் உயர்வுக்கான உந்து சக்தி நம்மிடமே இருக்கிறது. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அதை வெளிக்கொண்டு வரும் திறவுகோல்!
எந்த செயலையும், நம்பிக்கையுடன் துவங்க வேண்டும். கடினமானது என எண்ணவே கூடாது. முயற்சியின் முதல் சரிவே, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்பதில் தான் துவங்குகிறது.
எனவே, எந்த விஷயத்தையும் தள்ளிப்போடக் கூடாது. எதையும் சாதிக்கும் வல்லமை உண்டு என நினைவில் கொள்ள வேண்டும். தெளிவான தேடல் இல்லாத வரை, முயற்சிகள் குழப்பமாகவே தெரியும். எங்கு நிற்கிறோம் என்பது முக்கியம் அல்ல; எதை நோக்கி பயணிக்கிறோம் என்பது தான் முக்கியம்.
பணம் பிரதானம் அல்ல; எந்த தருணத்திலும் நேர்மையை கைவிடாத மன உறுதி வேண்டும்.
உலகம் நமக்காக மட்டுமல்ல, இனி பிறப்போருக்காகவும் படைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
இந்த சிந்தனையை முன் வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
- க.சோணையா