
எடையூர் கிராமத்தில் வசித்து வந்தான் லோகு. அவனுக்கு புத்திகூர்மையும், அறிவும் வளரவில்லை. ஏதாவது வேலை கிடைத்தால் செய்வான். கிடைக்கும் கூலியில், செலவு செய்தது போக, மீதியை அம்மாவிடம் கொடுப்பான்.
இரவு வந்தால், தெருக்கோடியில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பான். அப்போது ஏதாவது உளறி, நண்பர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாவான். ஆனால், எதையும் பொருட்படுத்த மாட்டான்.
அன்று அசதியால், கோவில் அருகே துண்டை விரித்து படுத்தான். வாங்கிய கூலி, 400 ரூபாயை வேட்டியின் நுனியில் முடிந்திருந்தான். அங்கு நள்ளிரவில் திருடர்கள் வந்தனர்.
சுருண்டு படுத்திருந்த லோகுவை பார்த்த திருடர்களில் ஒருவன், ''கூட்டாளி... இவனிடம், ஏதாவது சிக்குதான்னு பார்ப்போம்; கிடைத்த வரை லாபம்...'' என்றான்
''பிச்சைக்காரன் போல் தெரிகிறது. இவனிடம் என்ன இருக்கப் போகிறது...'' என்றான் மற்றொருவன். துாக்கம் கலைந்திருந்ததால், உரையாடல் லோகுவின் காதுகளில் விழுந்தது. அவமரியாதையாக உணர்ந்தான். தன்மானத்தை தட்டியெழுப்பி விட்டது. உடனே படக்கென எழுந்து, ''உங்க ஊரில் பிச்சைக்காரன் இடுப்பில், 400 ரூபாய் முடிஞ்சி தான் படுத்திருப்பானா... என்னை பார்த்தால் ஒண்ணுமில்லாதவன் போல் தெரிகிறதா...'' என்று கேட்டான் லோகு.
குபீரென்று அவன் மேல் பாய்ந்த திருடர்கள், அவன் வேட்டியில் முடிந்திருந்த பணத்தை பறித்து தப்பினர். திருடர்கள் சென்ற பின், எதுவும் நடக்காதது போல் போர்த்தியபடி மீண்டும் படுத்துக் கொண்டான் லோகு.
பட்டூஸ்... சூழலை அறிந்து செயல்பட்டால் தான் நன்மை விளையும்!
பொன்.கண்ணகி