
கார் ஓட்டிக்கொண்டிருந்தார் நடேசன். திடீரென சாலையில் நின்று விட்டது. அதை ஓரமாக தள்ளி நிறுத்திய பின் பேருந்தில் ஏறினார். அங்கு கூட்டத்தை பார்த்த போது, பயமாக இருந்தது; அமர இடமில்லை; நின்றபடியே பயணித்தார்.
அந்த நேரத்தில், ஒரு இருக்கை காலியானது; அருகே நின்றிருந்தவர் அதில் எளிதாக அமர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை. நடேசனுக்கு இருக்கையை விட்டுத் தந்தார்.
நின்று கொண்டிருந்தவர் அடுத்த நிறுத்தத்திலும் அமரவில்லை. இருக்கையை, நான்கு முறை மற்றவர்களுக்கு அளித்தார். கடைசி நிறுத்தத்தில் அனைவரும் இறங்கி சென்றனர்.
ஆர்வத்தில் அவரிடம் சென்ற நடேசன், ''ஐயா... உங்களுக்கு கிடைத்த இருக்கையை மற்றவர்களுக்காக ஏன் கொடுத்தீர்...'' என்று கேட்டார்.
புன்னகைத்தவாறு, ''நாள் முழுதும் வேலை செய்தாலும், என்னால் இன்னும் சிறிது நேரம் நிற்க முடியும். நான் படிக்காதவன்; கொடுத்து உதவ பணம் இல்லை; மற்றவர்களுக்காக, எளிதில் செய்யக் கூடிய ஒரே விஷயம் இது போன்ற உதவி தான்...
''உங்களுக்கு இருக்கை அளித்த போது, நன்றி கூறினீர்; அதை கேட்டு மகிழ்ந்தேன்; ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவது திருப்தி அளிக்கிறது. இதை ஒவ்வொரு நாளும் செய்து விட்டு, புத்துணர்ச்சியுடன் வீட்டிற்கு செல்கிறேன்...'' என்றார்.
அவரது உதவும் மனப்பான்மை கண்டு வியந்தார் நடேசன்.
ஏதாவது ஒன்றை கற்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார் நடேசன். அவருக்கு தக்க பாடம் கற்பித்தார் வழிப்போக்கர். அதை பின்பற்றி, தினமும் உதவி செய்ய முடிவெடுத்தார்.
பட்டூஸ்... உதவுவதற்கு மனம் மட்டும் இருந்தால் போதும்!
- சவுமியா சுப்ரமணியன்