
அன்புள்ள அம்மா...
என் வயது, 18. பிளஸ் 2 முடித்திருக்கும் இளைஞன். எனக்கு, ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் அதிகம். 100 மீட்டர் துாரத்தை, 12 நொடிகளில் ஓடிக் கடப்பேன்.
கடந்த மாதம் ஒரு வீடியோ பார்த்தேன்; அதில், சிலர் கட்டடம் விட்டு, கட்டடம் தாண்டுகின்றனர். எவ்வித கருவியும் இல்லாமல், 80 மாடி கட்டடத்தில் ஏறுகின்றனர். மலை உச்சியில், நின்ற இடத்தில், சாமர் சால்ட் அடிக்கின்றனர்.
அந்த விளையாட்டை பற்றி, என் நண்பர்களிடம் கேட்டேன்; யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால், அதை பற்றி விரிவாக கூறுங்கள் அம்மா...
இப்படிக்கு,
ஆர்.என்.ஆர்.மித்ரன்.
அன்பு மகனே...
நீ பார்த்த விளையாட்டுக்கு, 'பார்க் அவர் ஜம்ப்' என்று பெயர். இது, 'பார்க்கோர்ஸ்' என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பிறந்தது. இந்த விளையாட்டின் தந்தை டேவிட் பெல்லி.
முதல் உலகப்போரின் போது, ஜியார்ஜ் ஹெப்பர்ட் இந்த விளையாட்டின் அடிப்படைகளை உருவாக்கினார். தொடர்ந்து, ரேமன்ட் பெல்லி என்பவர் இந்த விளையாட்டை மேம்படுத்தினார்.
இது, முழுமையான விளையாட்டாக ஐரோப்பிய நாடான பிரான்சில், 1980ல் பரிணமித்தது. மனிதன் உருவாக்கிய அல்லது இயற்கையான சூழலில், தடைகளை மின்னல் வேகத்தில் கடக்க ஓடுதல், குதித்தல், ஏறுதல், சுழலுதல், தாவுதல் போன்ற உத்திகளை பயன்படுத்துவதே, பார்க் அவர் ஜம்ப் விளையாட்டின் அடிப்படை.
இந்த விளையாட்டில், கை, கால்களை தவிர, வேறெந்த கருவியும் பயன்படுத்த அனுமதியில்லை. முழுக்க, முழுக்க பவுதிக விதிகளை அடிப்படையாக உடையது.
உலகம் முழுக்க, இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளோர் எண்ணிக்கை, 10 ஆயிரம். இதில், 500 பேர் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர். பெண்களும், இந்த விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
வீடியோ பார்த்து, தானாகவே முயன்று, சிலர், இந்த விளையாட்டை கற்றுக் கொள்கின்றனர். புவி ஈர்ப்பு விசைக்கு சிக்காமல், ஒரு புள்ளியில் உடல் எடையை கொண்டு வந்து நிறுத்துவது தான் இந்த விளையாட்டின் மையப்புள்ளி.
இந்த விளையாட்டை ஐரோப்பிய நாடான பிரிட்டன், 2016ல் அங்கீகரித்தது. சீக்கிரம் ஒலிம்பிக் விளையாட்டில் அறிமுகப்படுத்தப்படும் நிலை உள்ளது. இந்த விளையாட்டுக்கு என ஒரு சர்வதேச அமைப்பு உள்ளது. இது, 2008ல் நிறுவப்பட்டது.
உடலையும், மனதையும் இணைத்து இயங்க வைக்க, இந்த விளையாட்டு மிக உதவும்.
குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு; ஆனால், ஆபத்தானது. இதில் ஈடுபடுவோர் தங்களை, 'யாமகாசி' என அழைத்துக் கொள்கின்றனர். கடந்த, 2006ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான, காசினோ ராயலில், இந்த விளையாட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விளையாட்டின் நம்பர் 1 ஆட்டக்காரர் பெயர், வான் சின்ஜென். நீயும் இந்த விளையாட்டில், துணிச்சலாய் ஈடுபட்டு, வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.