
அன்புள்ள அம்மா...
என் வயது, 17; அரசுப் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. என் வகுப்பு தோழி பரத நாட்டியம் கற்று வருவதை பெருமையாக பீற்றிக் கொள்வாள்.
நடனம் என்பது, கை, கால்களை, காக்காய் வலிப்பு வந்தது போல ஆட்டி, 'தய்யா தக்கா' என, குதிப்பது தானே அம்மா. என் கருத்து சரிதானே... இதை ஆமோதிக்கிறீர்களா... எதிர் கருத்து ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
ஆர்.எஸ்.பவளேஸ்வரி.
அன்பு மகளே...
நடனம் என்பது, ஜீவராசிகளின் உல்லாச, பேரானந்த கொண்டாட்டம். தவளும் குழந்தையிலிருந்து, வீல்சேர் தாத்தா வரை, நடனமாடி குதுாகலிக்கலாம். பொதுவாக, பாடல் மற்றும் இசையுடன் நடனம் சேர்ந்து நடக்கும்.
நடனத்திற்குள், அற்புதமான கணிதம் ஒளிந்திருக்கிறது. நகாசு செய்யப்பட்ட அல்லது அர்த்தப் பூர்வமாய் தேர்ந்தெடுக்கப்பட்ட அசைவுகளை வரிசைபடுத்தி நிகழ்த்தும் கலை வடிவமே நடனமாகும்.
நடனத்தில் அழகியலும், குறியீட்டு மதிப்பும், கருத்துகளும், உணர்வுகளும் கொப்பளிக்கும். ஒழுக்கம், அணுகுமுறை, புதுமை, தன்னம்பிக்கை, வெளிப்பாடு இணைந்திருப்பதே நடன அசைவுகள்.
நடனம் பற்றிய குகை ஓவியங்கள், கி.மு., 8000ல் படைத்துள்ளதை கண்டறிந்துள்ளனர். வட ஆப்ரிக்க நாடான எகிப்து பிரமிடுகளில் கி.மு., 3,300ல், நடன அசைவுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
நடனங்களின் மன்னன் சிவன். பிரபஞ்ச ஆனந்தத்தை சிவனின், 108 நடன முத்திரைகள் வெளிப்படுத்துகின்றன.
நடனத்தின் தந்தை கலிலியோ கலிலி. இவர் கி.பி., 1564- முதல், 1642 வரை வாழ்ந்தார். உலகின் தலை சிறந்த நடனம், 'வால்ட்ஸ்' என்கின்றனர்.
உலக நடன வகைகள்...
ரும்பா, டாங்கே, டிஸ்கோ, ஸ்விங், பேலட், ஜாஸ், ஹிப்ஹாப், பால் ரூம், டேப் டேன்ஸ், ஐரிஷ் நடனம், பாலாடி, ஷாபி, ஷர்கி, அல்ஜில், சாம்பா, மாம்போ, பிளம்மின்கோ, போல்கா, சாசா, பெல்லிடான்ஸ், சல்சா, பூகிவூகி, கொரியாவின் கே பாப் என்பவையாகும்.
இந்திய நடன வகைகளில், கதக்களி, குச்சுப்புடி, மணிப்பூரி, ராஸ்லீலா, பாங்ரா, கூமர், லாவணி, தாண்டியா, ஒடிசி, மோகனியாட்டம், தமால் போன்றவை உள்ளன. கி.பி., 2ம் நுாற்றாண்டில் அரங்கேறிய பரதநாட்டியம் என்ற சதிராட்டமும் முக்கியமானது.
தமிழகத்தில், நாட்டுப்புற நடனங்கள் பல உள்ளன. அவை, தேவராட்டம், கோலாட்டம், மயில் நடனம், பாம்பு நடனம், பொய் கால் குதிரை ஆட்டம், புலியாட்டம், சாட்டம், பாம்பர், தப்பாட்டம் என்பவையாகும்.
இது தவிர, விலாசினி நாட்டியம், பாம கல்பம், வீர நாட்டியம், தப்பு, தப்பேட்டா குல்லு, லம்பாடி, திம்சா, பிச்வா, நட்பூஜா, மஹராஸ், கேல்கோபால், நாகா, ஜுமார், பாக், தமால், குகா, கோர், மரணக்குத்து போன்ற ஆட்டக்கலைகளும் உள்ளன.
உலகின் மிக பிரபலமான நடனப் பள்ளி அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ளது. அதன் பெயர் ஜூலியர்டு நடனப் பள்ளி. இந்தியாவின் பிரபலமான நடனப் பள்ளி மும்பை நாளந்தா நிருத்ய கலா மகாவித்யாலயா. சென்னையின் கலாசேத்ரா நாட்டிய பள்ளியை, 1936ல் ருக்மணி தேவி அருண்டேல் ஸ்தாபித்தார். அது மத்திய அரசு நிறுவனமாக உள்ளது.
நடனத்தை பழிக்காதே... நடனம் கற்றால் உடல் கச்சிதமாகும்; இருதய பலம் கூடும். தெய்வீகம் ஆன்மாவில் வந்து உறையும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.