
வானில் சிதறும் வண்ண ஜாலம்!
பூமியின் துருவப்பகுதிகளில், இரவு வானில் தோன்றும் அபூர்வமான ஒளி நிகழ்வு, 'அரோரா' எனப்படுகிறது. இதை, இயற்கையின் வாணவேடிக்கை என்பர். வானில் சிதறும் ஒளிக்கோலம் என்றும் அழைக்கப்படுகிறது. இருண்ட வானத்தில், பல வண்ணங்களின் கலவை அங்கும் இங்கும் பாய்ந்து ஓடுவது போல் தோற்றம் தரும். தமிழில், 'துருவஒளி' என அழைக்கப்படுகிறது. இயற்கை நிகழ்த்தும் அபூர்வ இயற்பியல் நிகழ்வு இது.
பூமி தோன்றியது முதலே இது போன்ற வண்ண ஒளி காட்சி சிதறல்கள், வானில் வர்ணஜாலம் காட்டி வருவதாக கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். வட துருவமான ஆர்க்டிக் பகுதியில் இது போன்ற காட்சிக்கு, 'அரோரா போரியாலிஸ்' என்று பெயர். ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த விஞ்ஞானி பியர் கசண்டி இந்த பெயரை, கி.பி.1621ல் சூட்டினார்.
ரோமானிய பெண் தெய்வத்தின் பெயர் அரோரா. கிரேக்க மொழியில், 'போரியஸ்' என்ற சொல் பருவக்காற்றை குறிக்கும். இந்த இரண்டு சொற்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த பெயர்.
தென் துருவமான அண்டார்டிகாவில் இது போன்ற தோற்றத்தை, 'அரோரா ஆஸ்ட்ராலிஸ்' என அழைக்கின்றனர். சமீபத்தில், ஆஸ்திரேலியா, டாஸ்மானியா பகுதி வானில் இந்த ஒளிசிதறல் நகர்வு இரண்டு நாட்கள் தெரிந்தது. அதை வியப்புடன் கண்டு ரசித்தனர் அந்த பகுதி மக்கள். இது போன்ற துருவ ஒளிக்கோல நிகழ்வுகள் வரலாற்றில் ஏராளமாக பதிவாகியுள்ளன. இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், துருவ ஒளிக்கும், மின்சாரத்துக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ஓட்டும், வயதும்!
மக்களாட்சியின் மாண்பை காப்பது தேர்தல் நடைமுறை. அண்டை நாடான ஆப்கானிஸ்தான் தவிர, உலகில் அனைத்து நாடுகளும் இதை பின்பற்றுகின்றன. ஓட்டளிக்க உரிய சட்டங்களையும் இயற்றி உள்ளன.
ஓட்டுப்போடும் வயது வரம்பு, நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளது. நம் நாட்டில், 18 வயது நிறைவடைந்தோர் ஓட்டுப் போடலாம். உலகில், பெரும்பாலான நாடுகளில் இதே வயது தான் நடைமுறையாக உள்ளது.
தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, ஈக்வெடார், கரீபியன் நாடான கியூபா, ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, மால்டா போன்றவற்றில் ஓட்டுப்போட குறைந்த பட்ச வயது, 16 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கிழக்காசிய நாடான வடகொரியா, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் போன்றவற்றில், 17- வயதில் ஓட்டுப் போட சட்டம் உள்ளது. ஆசிய நாடான தைவான், மத்திய கிழக்கு நாடான பக்ரைன் போன்றவற்றில், 20 வயதாக உள்ளது.
ஆசிய நாடான சிங்கப்பூர் உள்ளிட்ட, சில நாடுகளில், வயது, 21 வயது என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் ஓட்டுப்போடும் குறைந்த பட்ச வயது, 25 என்பதாக உள்ளது. ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளில் தேர்தலில் ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்போடுவது ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கியமான கடமை!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.