
காட்டில், யானைக்குட்டி அப்புவும், கரடிக்குட்டி சுப்புவும் இணைப்பிரியாத நண்பர்கள். அவை கல்வி மீது தணியாத தாகம் கொண்டிருந்தன.
பக்கத்து நகரில் ஒரு மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பில் சேர்ந்தன.
அன்றாடம் கூலிவேலை செய்து படிப்புக்கு உதவி வந்தன அவற்றின் பெற்றோர்.
அதை உணர்ந்து, விடுமுறை நாட்களில் கைத்தொழில் கற்றது அப்பு. தனித்திறனை வளர்த்துக் கொண்டதால், சுயமாக சம்பாதிக்க முடிந்தது.
தொழில் பயிற்சியை மறுத்து கல்லுாரியில் சேர்ந்தது சுப்பு.
அப்பு, மேற்கொண்டு படிக்கவில்லை.
ஆண்டுகள் கடந்தன -
கல்லுாரி படிப்பை முடித்ததும், வேலை தேடியது சுப்பு. இறுதியாக, தொழில் கூடங்களை அணுகியது. அனுபவம் இன்மையால் அதற்கு பணி கிடைக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மறைந்தனர். வழி தெரியாமல், கண்ணீருடன் காலம் தள்ளியது.
ஒருநாள் நண்பன் அப்பு நினைவு வந்தது.
அது கார் பழுது நீக்கும் தொழிற்கூட உரிமையாளராக இருந்தது.
தயக்கத்துடன் அப்புவை சந்தித்து, 'உன் பேச்சை கேட்டிருந்தால், நன்மை விளைந்திருக்கும்...' என கண்ணீர் வடித்தது.
தேற்றிய அப்பு வேலை கற்றுக்கொடுத்தது. அதன் வழிகாட்டுதலில் உழைப்பால் உயர துவங்கியது சுப்பு.
பட்டூஸ்... கைத்தொழில் ஒன்றை கற்றால், எக்காலத்திலும் கவலை இன்றி வாழலாம்!
- புலேந்திரன்