
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் அரசு நடுநிலைப் பள்ளியில், 1973ல், 6ம் வகுப்பு படித்தேன்.
மைதானத்தில், அன்றாடம் காலை, 9:00 மணிக்கு இறை வணக்க கூட்டம் நடக்கும். அதில், அன்றைய முக்கிய செய்திகளை, மாணவர்களே அறிவிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
நான் வசித்தது மிகச்சிறிய கிராமம். எந்த பொருள் வாங்க வேண்டுமானாலும், பக்கத்து நகரமான கும்பகோணத்துக்கு செல்ல வேண்டும். என் அப்பா, அங்கு ஒரு நிறுவனத்தில் இரவு பணி செய்து வந்தார். பணி முடிந்து காலையில் திரும்பும் போது தவறாமல், 'தினமலர்' நாளிதழ் வாங்கி வருவார்.
அதை எடுத்து சென்று, வகுப்பு ஆசிரியர் ஆறுமுகத்திடம் கொடுப்பேன். அன்றைய முக்கிய செய்திகளை சிவப்பு மையால் கோடிட்டு கொடுப்பார். அவற்றை தொகுத்து கூட்டத்தில் சத்தமாக வாசிப்பேன். நாள் தவறாமல் இதை செய்து வந்தேன். அந்த செயல் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் தந்தது.
எனக்கு, 61 வயதாகிறது; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை படிக்கும் போதெல்லாம் அந்த அற்புத நினைவில் ஆழ்ந்து விடுகிறேன். பள்ளியில் செய்தி வாசித்த இனிய பழக்கத்தை குடும்பத்தினரிடம் அடிக்கடி சொல்லி மகிழ்கிறேன்.
- ஆர்.வி.காயத்ரி, செங்கல்பட்டு.
தொடர்புக்கு: 87788 51950