
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில், இளவரசர் மாயமானார். அப்போது, நாட்டின் எல்லை காட்டில் நடமாடிய எதிரிகளை முறியடிக்க முயற்சி நடந்தது. எதிரிகளை சிறை பிடிக்க சென்ற படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. படை நகர்த்த புதிய வியூகம் வகுத்து அண்டை நாட்டு மன்னரிடம் உதவி கேட்க அனுப்பப்பட்ட துாதுவன், அன்று மாலையே பணியை முடிக்காமல் திரும்பி வந்தான். அவனிடம் விசாரித்து புதிய வழிமுறையில் எதிரியை தாக்க திட்டம் வகுத்து காத்திருந்தனர். இனி -
கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது -
கேடயம், வாள் ஏந்தி முன் வரிசையில் நின்றனர் காலாட்படை வீரர்கள். அவர்களுக்கு இணையாக, வில் வீரர்களும், மோப்ப நாய்களுடன் பயிற்சியாளர்களும் இருந்தனர்.
குதிரைப் படைகள், அதையடுத்து வீரர்களுக்கு உதவி செய்யும் அணியுடன், வைத்திய குழுவும் இருந்தது.
வண்டுகள், குளவிகள் மற்றும் தேனீக்களிடமிருந்து தற்காத்து கொள்ள உடல் முழுதும், வைத்தியர் தயாரித்து கொடுத்த வாசனை தைலத்தை பூசியிருந்தனர்.
குதிரைகளின் உடலிலும், அந்த தைலம் பூசப்பட்டிருந்தது. அதன் மணம், அந்த பகுதி முழுதும் வியாபித்தது.
படைக்கலன்கள், உணவு பொருட்களை நகர்த்தி செல்ல எருமை வண்டிகள் தயாராக இருந்தன.
தளபதி வாள் உயர்த்தி சமிக்ஞை செய்ய, படைகள் புறப்பட்டன.
காட்டுக்குள் களம் இறங்கி, நான்கு, காத துாரம் சென்றதும், காலடித் தடங்களை கண்டறிந்தன மோப்ப நாய்கள்.
அவை முன்னேற முயல, சங்கிலிகளை இழுத்து, கட்டுப்படுத்தினர் பயிற்சியாளர்கள்.
காலடித்தடம் பதிந்திருந்த இடத்தின் அருகில், குதிரைகளுடன் வந்தனர் தளபதியும், அணித் தலைவர்களும்.
'காலடித் தடங்கள் தெளிவாக இருக்கின்றன...' என்றான் அணித் தலைவன்.
'நாங்கள் தேடுதல் வேட்டையில், ஈடுப்பட்ட போதும், இது போல் காலடித் தடங்களை தான் பார்த்தோம். அவர்கள் அணிந்திருக்கும் காலணிகளின் தடம் தான் இது. நிச்சயம் எதிரிகளுடையது தான்...'
உறுதி செய்தான் படைத்தலைவன் மகேந்திரன்.
'குறைந்த எண்ணிக்கை உடைய, 10 பேர் குழு தான், இங்கிருந்து நகர்ந்துள்ளது...'
கணித்தார் தளபதி.
மீண்டும், அந்த திசை நோக்கி பாய முயன்ற மோப்ப நாய்களை கண்டு, 'தளபதி... எதிரிகள் இப்போது தான், கடந்து சென்றுள்ளனர். அவர்களின் உடல் வாசம் காற்றில் இருந்தால் தான், அதை மோப்பம் பிடித்து, இவை இப்படி இழுக்கும்; விரைந்து சென்றால், சிறை பிடிக்கலாம்...' என்றனர் பயிற்சியாளர்கள்.
'குதிரை படைகள் முன் செல்லட்டும். தொடர்ந்து, காலாட்படையும், வில் வீரர்களும் வரட்டும்...'
தளபதி கையசைக்க, அந்த காலடித் தடத்தின் மீது பாய்ந்தன அணித் தலைவர்களின் குதிரைகள்.
அதை தொடர்ந்து, குதிரைகளை அதே பாதையில் செலுத்தினர் வீரர்கள். குதிரைகளின் குளம்பொலியால், அந்த இடமே கலகலத்தது. அவை பாய்ந்து செல்வதால் ஏற்படும் புழுதி, மெல்ல காற்றில் மேகம் போல் படர ஆரம்பித்தது.
காலடித் தடங்களை தொடர்ந்து சென்ற குதிரை படை வீரர்கள், மானோடையை அடைந்து நின்றனர். அங்கு, முட்டளவு தண்ணீர் ஓடியது. தரையில் மோப்பம் பிடித்து வந்த மோப்ப நாய்கள், தண்ணீரில் மோப்பம் பிடிக்க முடியாமல் அந்த பகுதியை சுற்றின.
'தளபதி... எதிரிகள் தண்ணீரில் இறங்கி சென்றுள்ளனர். நாம் மோப்ப நாய்களுடன் வருவோம் என்பதை ஏற்கனவே, அவர்களுக்கு கிடைத்த அனுபவத்தால் உணர்ந்துள்ளனர்...'
'ஆம்... அதனால் தான், நாய்கள் மோப்பம் பிடிக்க இயலாத அளவுக்கு, தண்ணீருக்குள் இறங்கி சென்றுள்ளனர்...'
குதிரைகளை நகர்த்தி, மானோடையின் மறுகரைக்கு வந்தனர். அங்கு, காலடித் தடங்கள் காணப்படவில்லை.
'மானோடையை கடந்து செல்லவில்லை. மோப்ப நாய்களிடமிருந்து தப்ப, தண்ணீருக்குள் நடந்து சென்றுள்ளனர். இதில், வலது புறமா அல்லது இடது புறத்தை பயன்படுத்தி சென்றனரா என புரியவில்லை...'
குழப்பத்தை தெரிவித்தான் அணித் தலைவன்களில் ஒருவன்.
'படைகள் இரண்டாக பிரியட்டும். இரண்டு புறமும், தேடுவோம்...'
குழப்பத்தை நிவர்த்தி செய்தார் தளபதி.
'இரு கரைகளையும் கவனித்தபடி, தண்ணீருக்குள் செல்லுங்கள். எதிரிகள் கரையேறிய இடம் தெரிந்தால், அங்கு முகாமிட்டு தகவலை மற்றவர்களுக்கு தெரிவியுங்கள்...'
தளபதி கட்டளையிட, குதிரை படையினர் ஓடைக்குள் இறங்கினர்.
ஒரு படைப் பிரிவு, வலது புறம் நீரோட்டத்தை எதிர்த்தும், இன்னொரு பிரிவு, இடது புறம் நீரோடும் திசையிலும் சென்றன.
தேடல் ஆரம்பமானது.
அவர்களது பார்வை முழுதும், எங்காவது காலடித் தடங்கள் தெரிகின்றனவா என்று கரையின் இருபுறமும் இருந்தது.
மெய்க்காப்பாளர்கள், 10 பேருடனும், படைத்தலைவன் மகேந்திரனுடனும் காத்திருந்த தளபதி, 'இம்முறை எப்படியும், எதிரிகளை பிடித்து விட வேண்டும்...' என உறுதியாக கூறினார்.
நேரம் கடந்தது -
வலது புறத்திலிருந்து ஒரு குதிரை மட்டும் ஓடி வந்தது. அதில் வீரன் இல்லை; அதை தொடர்ந்து, நான்கு குதிரைகள் ஓடி வந்தன; அவற்றிலும், வீரர்கள் இல்லை.
'குதிரைகள் மட்டும் ஓடி வருகின்றனவே, நம் வீரர்களுக்கு என்ன நிகழ்ந்து இருக்கும்'
பதற்றம் மற்றும் குழப்பத்துடன் நின்றார் தளபதி.
தொடர்ந்து, குதிரையை செலுத்தி விரைந்து வந்தனர் இரண்டு வீரர்கள்.
வீரர்களின் நிலையை பார்த்து அதிர்ந்தனர் மகேந்திரனும், உடன் இருந்த வீரர்களும்.
- தொடரும்...
- ஜே.டி.ஆர்.