
கோவை மாவட்டம், ஓடையூர் அரசு ஆரம்பப் பள்ளியில், 1961ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியர் குமரவேல், பாடங்களை புரிந்து படிக்க அறிவுறுத்துவார். அன்று முழு ஆண்டுத் தேர்வு துவங்கியது. எழுதிக் கொண்டிருந்த போது, ஒருவன் எழுந்து, ஆசிரியர் அனுமதியுடன், தண்ணீர் குடித்தான். பின், பேனாவில் சிறிது ஊற்றினான்.
இதை கவனித்து அழைத்து விபரம் கேட்டார் ஆசிரியர். பயம் கலந்த குரலில், 'ஐயா... பேனாவில் மை ஊற்றி வர மறந்து விட்டேன். அதனால், தண்ணீர் ஊற்றி எழுதலாம் என்று தோன்றியது...' என பதிலளித்தான்.
மிகவும் மென்மையாக, 'இது தவறான அணுகு முறை. இப்படி செய்வது பலன் தராது...' என்றபடி, திகைத்து நின்றவனை அருகே அழைத்து, 'எப்போதும் பயம் கொள்ளல் ஆகாது. கீழ்படிந்து நடப்பது நல்ல பண்பு. அதற்காக, எல்லா நேரத்திலும் பயம் கொண்டால் வளர்ச்சியை தடுத்து விடும்...' என அறிவுரைத்தார்.
பின், ஒரு பேனா கொடுத்து, தேர்வு எழுத உதவினார். எழுதிய பின், திருப்பி கொடுக்க முயன்றவனிடம், 'நீயே வைத்துக் கொள்...' என கனிவு காட்டினார்.
எனக்கு, 74 வயதாகிறது; பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பயம் வளர்ச்சியை தடுத்து விடும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய நல்லாசிரியரை நினைவில் கொண்டுள்ளேன்.
- பி.லட்சுமி, திருப்பூர்.