
ஹைதராபாத் அடுத்த, திருமல்கிரி, செயின்ட் ஜோசப் பள்ளியில், 1983ல், 8ம் வகுப்பு படித்த போது, தலைமையாசிரியராக இருந்தார் அருள் தந்தை வி.கே.சுவாமி. மிகவும் அன்பாக பழகுவார். ஒருமுறை அவரை சந்திக்க சென்றிருந்தேன். சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.
காத்திருந்த போது, மேஜையில் ஆங்கில பத்திரிகைகளைப் பார்த்தேன். அதில், 'தி இல்லஸ்ட்ரேட்டட்' என்ற இதழ் கவர்ந்தது. அதை, ஆர்வமுடன் புரட்டிக் கொண்டிருந்தேன்.
அப்போது, அருகில் வந்த தலைமை ஆசிரியர், 'நீ புத்தகங்கள் வாசிப்பதை கவனித்தேன்... மிகவும் நல்ல பழக்கம். அதை தவறாத வழக்கமாக்கி கொள்...' என்றார். நன்றி கூறியபடி, 'பத்திரிகை படிப்பதால் என்ன பயன்...' என்று கேட்டேன்.
மிகவும் உற்சாகமாக, 'வகுப்பறை பாடங்கள், மதிப்பெண்கள் எடுக்க மட்டும் தான் உதவும். அதை வைத்து, அடுத்த வகுப்புக்கு செல்லலாம்; மதிப்பெண், ஞானத்தை தராது. பத்திரிகை படிப்பதால் ஞானம் வளரும். உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியலாம். மொழியை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாகும். வாழ்வில் உயர்வடைய உதவும்...' என அறிவுரைத்தார். அதை மனதில் கொண்டு வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன்.
என் வயது, 54; தனியார் நிறுவன மார்க்கெட்டிங் பிரிவில் பொது மேலாளராக பணிபுரிகிறேன். பத்திரிகைகள் வாசித்து, பொது அறிவை வளர்த்துள்ளதால், பேச்சாற்றல் திறன் பெற்றுள்ளேன். புத்தகம் எழுதும் நிலைக்கு உயர்ந்து, 'அன்னையர் வாழ்க்கை' என ஆங்கிலத்தில் நுால் எழுதியுள்ளேன். அதற்கு அடித்தளமிட்ட தலைமையாசிரியருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.
- பிரகாஷ் அர்ஜுன், சென்னை.
தொடர்புக்கு: 95512 81433