
மைதிலி, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி; படிப்பில் படுசுட்டி; வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்தாள்.
பெற்றோருக்கு செல்லம் என்பதால், தின்பண்டங்கள், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றுக்கு குறைவே கிடையாது. ஆனாலும், வீதியில் வரும், குல்பி ஐஸ், பஞ்சு மிட்டாய் போன்றவற்றையும் வாங்கி தரும்படி அடம் பிடிப்பாள்.
அன்றும் அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தாள்.
அவளை சமாதான படுத்திய தந்தை, ''தெருவோரம் விற்கும் பண்டங்களை வாங்கி சாப்பிடுவதும், ஓட்டலில் வாங்கி சாப்பிடுவதும் உடல் நலத்தை பாதிக்கும்; உனக்கு ஓரளவு விவரம் தெரியும்; எனவே, சேமிப்பில் கவனம் செலுத்து...'' என அறிவுரை கூறினார்.
அலட்சியமாக, ''என் போன்ற சிறுமியால் சேமிக்க முடியுமா... அதனால் என்ன பயன்...'' என கேட்டாள் மைதிலி.
''தவறாக நினைக்காதே... முயன்றால் முடியும்; அவ்வப்போது கைச்செலவுக்கு தரும் சிறுதொகையை, வீண்செலவு செய்யாமல் சேமித்து பார்... பின் ஆச்சரியப்படுவாய்...''
''வேடிக்கையாக உள்ளதே...''
''முயன்று தான் பாரேன்...'' என்றார் தந்தை.
மறுநாள் -
சிறுவர் சேமிப்புக் கணக்கு ஒன்றை மைதிலி பெயரில் துவங்கி, பாஸ் புத்தகத்தோடு, பரிசாக உண்டியலையும் அவளிடம் தந்தார் தந்தை.
முதலில், 50 ரூபாய் தந்து உண்டியலில் போட செய்தார்.
பின், 20 ரூபாய் தந்தாள் அம்மா. ஊரிலிருந்து வந்த தாத்தா, 10 ரூபாய் தந்தார். அவை எல்லாம் உண்டியலுக்கு போயின.
மைதிலியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
அன்றிரவு குளியலறை குழாயில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
இதைப் பார்த்த மைதிலி தந்தையிடம் தெரிவித்தாள்.
''பழுது நீக்குபவருக்கு தகவல் கூறி விட்டேன்; நாளை காலை வந்து சரி செய்து விடுவார்... அதுவரை, குழாயின் அடியில் ஒரு வாளியை வைத்து விடு; அதில் சொட்டும் தண்ணீரை காலையில் பயன்படுத்தி கொள்ளலாம்...'' என்றார்.
''ஒவ்வொரு சொட்டாக தான் விழுகிறது; அதில், இவ்வளவு பெரிய வாளி நிரம்ப போகிறதாக்கும்...''
கிண்டல் செய்தவாறே, வாளியை எடுத்து வைத்தாள் மைதிலி.
மறுநாள் வாளியில் முழுமையாக நீர் நிரம்பியிருந்தது. இது கண்டு அதிசயித்தாள். அப்பாவிடம் மகிழ்ந்து கூறினாள்.
''பார்த்தாயா... அலட்சியமாக கூறினாய்; ஆனால், சொட்டிய தண்ணீரில் இரவுக்குள், வாளி முழுவதுமாக நிரம்பி விட்டது... இதைத்தான், 'சிறு துளி பெருவெள்ளம்' என்பர். சிறு தொகையாக இருந்தாலும், சேமித்தால் ஒரு கட்டத்தில் பெரும் தொகையாக மாறியிருப்பதை காணலாம்...''
அப்பாவின் பேச்சு நம்பிக்கையை விதைத்தது.
ஓட்டமாக ஓடி, உண்டியலை எடுத்து அணைத்து முத்தமிட்டாள் மைதிலி.
செல்லங்களே... சேமிக்க பழகுங்கள்... வளமான வாழ்க்கைக்கு கை கொடுக்கும்.
என்.கிருஷ்ணமூர்த்தி

