PUBLISHED ON : ஜன 18, 2020

'வேற்று கிரகத்தில், உயிரினம் வாழ முடியுமா' என்ற கேள்வியை எழுப்பிய விஞ்ஞானி கார்ல் சேகன். அமெரிக்கா, நியூயார்க் நகரில், நவ., 9, 1934ல் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே, சூரியன், நிலவு, விண்மீன்களை பற்றியே, எண்ணம் சுழன்றது.
விண்ணில் ஏறி, ஆராய்ச்சி செய்து என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்க விரும்பினார். ஐந்து வயதிலேயே, நுாலக உறுப்பினரானார். விண்மீன்கள் பற்றிய நுால்களை விரும்பி படித்தார்.
பள்ளியில் அறிவியல் ஆசிரியரிடம், விண்மீன் பற்றி கேள்வி கேட்டு, திக்கு முக்காட வைத்தார். கேள்விகளுக்கு விளக்கமாக, பொறுப்புணர்வுடன் பதில் கூறும் ஆசிரியர்கள் அமைந்தனர். அதனால், அவரது அறியும் திறன் வளர்ந்தது.
விண்ணியல் மற்றும் இயற்கையின் வினோதம் பற்றி தந்தையிடம் கேட்டார். அவரது ஆர்வம் கண்டு, அறிவியல் விழா, கருத்தரங்கு, சொற்பொழிவு, அறிவியல் மேதைகளின் நினைவு இல்லங்கள் என, அழைத்து சென்று அறிவூட்டினார் தந்தை.
அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில், பட்டம் பெற்றார். அவரது வானியல் அறிவுத்திறனை அறிந்த அமெரிக்கா, ஹார்வேர்டு பல்கலைக்கழகம், விரிவுரையாளர் பணியை அளித்தது.
வகுப்பில் பாடம் நடத்தியதுடன், ஓய்வு நேரங்களில், வானியல் பற்றி, குறிப்பாக, கோள்களின் தன்மை பற்றி ஆய்வு செய்துவந்தார். நிலவைப் பற்றியும் ஆய்வு செய்தார்.
நிலவில், மலைகள், மணற்குன்றுகள், காற்று இருக்க வாய்ப்பு உண்டு. மனிதர்கள் செல்லலாம் என, முதன் முதலில் விளக்கினார். உலக நாடுகள் பாராட்டின.
ஆசியா - ஐரோப்பா கண்டங்களில் விரிந்திருந்த சோவியத் ரஷ்யா, நிலவுக்கு மனிதனை அனுப்ப, ஆய்வு மேற்கொண்டு வந்தது. முதன்முதலில், 'லுானா - 2' என்ற விண்கலத்தை, 1959ல் நிலவில் இறக்கி ஆய்வு செய்தது.
அமெரிக்க விஞ்ஞானிகளின், 'அப்பல்லோ - 11' என்ற விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர், நீல் ஆம்ஸ்ட்ராங், 1969ல், நிலவில் காலடி பதித்தார். இந்த மாபெரும் சாதனைக்கு வழிவகை செய்து ஒத்துழைத்தவர் சேகன்.
கிரகங்களில் என்ன இருக்கிறது; அங்கு விண்கலங்களை அனுப்ப முடியுமா... வெயில், மழை, காற்று, வெப்பச்சூழல் என்று, பல கோணங்களில் சிந்தித்து விடை தேட முயன்றார்.
செவ்வாய் கிரகத்தில், மலைப்பகுதிகள், கடும்புயல் இருப்பதை அறிந்து, ஆய்வை தீவிரமாக்கினார். அங்கு துாசுகளால், மேடு, பள்ளங்களும், சமதரையும் ஏற்படுவதை அறிந்தார். வெப்ப சலனம் உண்டாவதையும் கண்டறிந்தார்.
கோள்கள் பற்றி, பல 100 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய, 'காஸ்மாஸ்' என்ற அறிவியல் நுால் பிரபலமானது. இது, 'டிவி' தொடராகி உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றது. செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வின் விளைவாக, 'மாரினர் -9' என்ற விண்கலமும் செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்டது.
சூரிய குடும்பத்தில், வியாழன், நெப்டியூன், யுரேனஸ் போன்ற கோள்களை ஆராய, வாயேஜர் விண்கலங்களை, அமெரிக்க விண்வெளி நிறுவனமான, நாசா அனுப்ப உதவினார்.
விண்வெளி ஆய்வுகள் பற்றி, டிராகன்ஸ் ஆப் ஈடன், புரோகாஸ், காண்டாக்ட் ஆகிய நுால்களை எழுதியுள்ளார். இவரின் ஆய்வுகளைப் பாராட்டி, பட்டங்களையும், விருதுகளையும் பல நாடுகளும் வழங்கியுள்ளன.
சிறந்த நுாலுக்காக புலிட்சர் விருது, மனிதாபிமான விருது, பொதுநல விருது, அசிமோவ் விருது, ஹுகோ எம்மி, லோக்காஸ் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
கோள்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய, அல்லும்பகலும் பாடுபட்டார். மனம் தளராத முயற்சிகளால் வெற்றிகளை குவித்தவர், மண்ணில் பணிகளை முடித்து, டிச., 20, 1996ல், விண்ணுக்கு பயணமானார்.
