PUBLISHED ON : ஜன 18, 2020

புன்னைக்காய்குடி அமைதியான கிராமம். அங்கு, சிறுவன் காத்தான் குடும்பம், மண் பாண்டங்கள் செய்து வாழ்ந்து வந்தது. வெள்ளிக் கிழமைகளில், சந்தை கூடி சந்தடியாக இருக்கும்.
ஆண்களும், பெண்களும் பொருட்களை சுமந்து வருவர். சாக்கை விரித்து, சரக்கை பரப்பும் காட்சிகளை பார்ப்பதில், காத்தானுக்கு தனி ஆர்வம்.
அன்று சீக்கிரமே எழுந்து சந்தைக்கு சென்றவன் கவனத்தை, ஒரு பொம்மைக் கடை ஈர்த்தது. வண்ணம் பூசிய அழகிய மண் பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தார் முதியவர்.
அவற்றை கூர்ந்து நோக்கி, 'என்ன அழகான பொம்மைங்க; என்னால இது போல செய்ய முடியுமா...' என முணுமுணுத்தான். இதைக் கேட்ட முதியவர் சிரித்தபடியே, 'தம்பி... உன்னாலும் செய்ய முடியும்...' என்றார்.
'இல்ல தாத்தா... அப்பாவும், அண்ணாவும் செய்யுற சட்டி, பானைகளையே, என்னால் செய்ய முடியாதே... மண்ணு தான் குழைத்துக் கொடுக்கிறேன்...'
'அடடே... இதுவே பெரிய விஷயமாச்சே... பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தா எதையும் சாதிக்கலாம்...' என்று உற்சாகப்படுத்தினார்.
காத்தானுக்கு ஆசை பிறந்தது. அந்த பொம்மைகளையே கவனித்தான்.
அப்போது, 'ஒன்றை மட்டும் ஞாபகத்தில் கொள்; எதையும் முழுமனதுடன் திருத்தமாகச் செய்...' என்றார் முதியவர்.
கடைக்கு ஆட்கள் வரவே, நகர்ந்தான் காத்தான். ஜமுக்காளம், மிதியடி பரப்பியிருந்த கடைக்கு வந்தான். அங்கு சிறுமியுடன் இருந்த மூதாட்டி, 'என் பேத்தி, பின்னிய விரிப்பை விற்க வந்திருக்கிறாள்...' என்றாள்.
விதவிதமான பூ வடிவத்துடன், அழகாக இருந்தது விரிப்பு.
'இதை நீயா பின்னின...' என்றான்.
பெருமையுடன், 'ஆமா... தறில போட்டு பூ வடிவத்துடன் பின்னினேன்...' என்றாள் சிறுமி.
அது போன்றே ஒரு கடை அமைக்க தீர்மானித்து, வீட்டுக்கு ஓடினான் காத்தன். குழைத்துப் போட்டிருந்த களிமண், மூலையில் கிடந்தது. அதை எடுத்து புளியமரத்தடிக்கு வந்தான். பிஞ்சு விரல்களால், உருட்டி நெளித்தான். சிறிய குருவியாக மாறியது.
வியப்பு மேலிட, 'அடே ரொம்ப நல்லா வந்து விட்டதே' என, பெருமைப்பட்டுக் கொண்டான்.
குருவி ஒரு பக்கம் சாய்ந்து நின்றது. சிறிய தவறு. அடுத்த பொம்மையை, கவனமுடன் உருவாக்கினான். தண்ணீர் குடத்துடன் பெண், குரைக்கும் நாய், வாத்து, மூட்டை சுமக்கும் முதியவர்... இப்படி, பல பொம்மைகள் செய்திருந்தான்.
சிலவற்றில் குறைகள் இருந்தன.
'வண்ணம் பூசி சரி செய்து விடலாம்' என்று சமாதானம் செய்து கொண்டான். சட்டி, பானைகளை சுடும் முன், வெயிலில் காய வைப்பது வழக்கம்.
'என் பொம்மைகள் சின்னது தானே, சீக்கிரம் காயந்து விடும்' என நினைத்து, சூளைக்குள் வைத்து தீ மூட்டினான்.
அரைமணி நேரம் காத்திருந்து ஆவலோடு பிரித்தான். மனம் சுண்டி விட்டது. சூளையில், அவன் செய்த பொம்மைகள் ஒன்றையும் காணவில்லை.
துாளான களிமண் சிறு கட்டிகளுடன் இருந்தது. அவனுக்குக் கண்களில் நீர் திரண்டது. ஏமாற்றத்துடன் நின்றான்.
பிற்பகல், 3:00 மணிக்கு அண்ணா வந்தான். சோர்ந்திருந்த காத்தானைக் கண்டு, 'ஏன் அழுற...' என விசாரித்தான்.
'இந்த புத்திக்கெட்ட சூளை, என் பொம்மைகளை வீணாக்கிவிட்டது; எவ்வளவு அழகாக இருந்துச்சு தெரியுமா... நானே செய்தேன்...'
'பொம்மையா... நீ செய்தாயா...' என்று வியப்போடு கேட்ட அண்ணாவிடம், நடந்தவற்றை கூறினான் காத்தான்.
'தம்பி... சூளை மேல் குத்தமில்லை. அப்பா செய்ற மாதிரி, மண் பொம்மைகளை, இரண்டு நாளாவது காய வைக்க வேண்டாமா... பொம்மை பார்க்க, காய்ந்த மாதிரி இருக்கும். உள்ளே ஈரம் அப்படியே தான் இருக்கும். ஈர மண்ணை சூளையில் வைத்தால், மண்ணில் உள்ள தண்ணி ஆவியாக மாறுமல்லவா... அந்த ஆவிக்கு வெளியே போக வழி கிடையாது. அது, உன் பொம்மையை உடைத்து தான் வெளியேறணும்; அதனால, சுக்காக காய்ந்த பின் தான், சூளையில் சுடணும்...' என்றான்.
நன்கு புரிந்து கொண்டான் காத்தான். நன்றியுடன் பார்த்தவனை, 'தம்பி... நீ மறுபடியும் பொம்மை செய்... சுடுவதற்கு நான் பயிற்சி தரேன்...' என்றான் அண்ணன்.
'ஊஹூம்... கையெல்லாம் வலிக்குது... இப்போ செய்து, சந்தையில விற்க நேரமேது...'
'ஏன், அடுத்த சந்தையில் விற்கலாமில்ல... இன்னிக்கு சிரமமாக இருந்தால் நாளைக்குச் செய்...' என்று அரவணைத்தான்.
மறுநாள் -
மண்ணைப் பிசைந்து, அழகு பொம்மைகள் செய்தான் காத்தான். பூனைக் குட்டி, நாய், குருவி எல்லாம் வடிவமாக வந்திருந்தன. மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்தான்.
கடைசியாக மிகவும் கவனமாக, ஒரு கிளி செய்தான். அதைக் காய வைக்க எடுத்துச் சென்ற போது, தவறி விழுந்து உடைந்தது. காத்தானுக்கு, துக்கமும், ஆத்திரமும் தாங்கவில்லை. உடைந்த கிளியை எட்டி உதைத்து, 'இனி பொம்மையே செய்வதில்லை' என, ஓடி விட்டான்.
அன்று மாலை, வெளியில் காய வைத்திருந்த பொம்மைகளைக் கண்டார் அப்பா. அது பற்றி பெருமையாக அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அது காதில் விழுந்ததும், காத்தானுக்கு உற்சாகம் பிறந்தது.
அடுத்த நாள் அழகு மிக்க கிளி பொம்மைகளை உருவக்கினான். அவற்றை நன்றாக உலர்த்தி, சூளையில் சுட்டு, பளபளக்கும் வண்ணங்கள் பூசி, அழகுபடுத்தினான்.
வெள்ளிக்கிழமை சந்தை கூடியது. காத்தானின் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். பொம்மைகளை அடுக்கி கடை பரப்பினான். சிறிது நேரத்தில், குழந்தைகள் கூடி விட்டனர்.
யானைக் குட்டி பொம்மையை பார்த்த ஒருவன், 'எவ்வளவு அழகாக இருக்குது...' என்றான்.
எல்லா பொம்மைகளும் விற்று தீர்ந்தன; கை நிறைய பணத்துடன் பொம்மைக்கார தாத்தாவுக்கு நன்றி தெரிவித்தான் காத்தான்; அவனைப் பாராட்டி, மகாத்மா காந்தி பொம்மை ஒன்றை பரிசாக அளித்தார் முதியவர்.
தங்கங்களே... காத்தான் பொம்மை செய்தது போல், பல திறன்கள் உங்களிடமும் ஒளிந்திருக்கும்; அவற்றை தட்டி எழுப்புங்க... வீணாக பொழுதை போக்காமல், ஆக்கப்பூர்வமாக செயலில் ஈடுபடுங்க. சரியா!
வாண்டுமாமா
