
நான்காம் வகுப்பு படித்தான் ரவி. வாய் திறந்தால் பொய்தான் வரும்.
'வீட்டுப் பாடம் செய்து விட்டேன்...' என்பான்; பார்த்தால் செய்திருக்க மாட்டான். அடுக்கடுக்காக பொய் பேசுவதில் அவனை மிஞ்ச ஆள் இல்லை.
ஒரு பொய்யை நிரூபிக்க, பல முறை பொய்கள் சொல்ல வேண்டும்; பொய்களை வரிசைப்படுத்தும் போது, உண்மை வெளிவந்துவிடும்; அவமானத்தில், தலை குனிந்து நிற்க வேண்டும். இதை புரிந்து கொள்ளவில்லை ரவி.
ஒரு நாள் -
பள்ளியில், விளையாடி கொண்டிருந்தான் ரவி. அப்போது, 50 ரூபாய் நோட்டை தொலைத்து விட்டான். மற்றொரு மாணவன் கையில், அது சிக்கியிருந்தது. பார்த்ததும் பதறிவிட்டான்.
பதிவாகியிருந்த எண்கள் கூட மனப்பாடமாக இருந்தன. இதையெல்லாம் கூறி கேட்டுப்பார்த்தான் ரவி.
தர மறுத்து, 'என் பணம்...' என பிடிவாதமாக கூறிவிட்டான் அந்த மாணவன். அந்த பணத்தில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தான்.
ஆசிரியரிடம் புகார் தெரிவித்தான் ரவி. அதை நம்பாமல், 'அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்பட்டு, சாமர்த்தியமாக பொய் கூறுகிறான்' என்றே எண்ணினார் ஆசிரியர்.
மிகவும் வருந்தினான் ரவி. பொய் பேசுவது ஆபத்தானது; அது கேவலமான செயல் என உணர்ந்தான். பின், 'எப்போதும் பொய் கூற மாட்டேன்' என முடிவு செய்தான். திருந்தி மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
தளிர்களே... எந்த காரணத்திற்காகவும், பொய் சொல்ல கூடாது!
சந்திரஹரி

