
கழிவு மேலாண்மை !
கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். கொரோனா தொற்று பல விஷயங்களை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது. அவற்றில் முக்கியமானது சுகாதாரமான சூழலில் ஆரோக்கியமான வாழ்வு.
அறிவியல் வளர்ச்சியால் வியத்தகு நன்மைகள் கிடைத்துள்ளன. ஆனால், அறிவியல் தொழில் நுட்பத்தை, முறையாக பயன்படுத்த தவறினால் பெரும் கேடு உண்டாகும்.
இதற்கு உதாரணமாக, தொழிற்சாலைகளில் கழிவு மேலாண்மையை எடுத்துக் கொள்ளலாம். பெருகிவரும் கழிவு, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. சுற்றுக்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தி வருகிறது.
தொழிற்சாலை கழிவால்...
* நிலத்தடி நீர் மாசுப்படுகிறது
* சுவாசிக்கும் காற்று நாசமாகிறது
* அதீத ஒலியால் சூற்றுச்சூழல் பதற்றமாகிறது.
நிலம், நீர், காற்று என்ற உயிர் ஆதாரங்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றன. புதிய வகை நோய்கள் பெருகி வருகின்றன. இதனால் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ துறை அதீத வளர்ச்சி கண்டு வருகிறது. அதே நேரம், மருத்துவக் கழிவை முறையாக அகற்ற தவறுவதால், உயிரினங்கள் பெரும் பாதிப்பு அடைகின்றன.
இதை நிவர்த்தி செய்ய முயற்சி செய் கிறது தமிழக அரசு. மருத்துவக் கழிவை, பாதுகாப்பாக அகற்றும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலாண்மை செய்ய பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. அரசு சார்பில், எழு மையங்களும், தனியார் சார்பில், நான்கு மையங்களும் பயிற்சி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் வீட்டில் அன்றாடம் குவியும் குப்பையை, கையாள பழகுவது நம் கடமை. குப்பை மேலாண்மைக்கு, இரண்டு வகை தொட்டிகள் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது, சுகாதாரத்துறை.
காய்கறி கழிவு போன்ற மக்கும் வகை குப்பையை பச்சை நிறத் தொட்டியில் சேமிக்க வேண்டும்.
மக்கும் தன்மையற்ற, பிளாஸ்டிக் குப்பையை சிவப்பு நிறத் தொட்டியில் சேகரிக்க வேண்டும்.
அவற்றை தனித்தனியே துப்புரவு பணியாளரிடம் தர வேண்டும். குழந்தை பருவத்திலே, இந்த மேலாண்மை முறையை கற்று, கடைபிடியுங்கள்.
அபாய பூதம் கிளம்பும் முன், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவோமே!
உபரி மதிப்பு!
தேவைக்கு அதிகமானதை, உபரி என்பர். தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு நீரை, காவிரி நதியில், கர்நாடகா மாநிலம் திறக்க வேண்டும். ஆனால், பற்றாக்குறை என திறக்க மறுப்பதால் பிரச்சினை வருகிறது.
தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யும்போது, கர்நாடகாவில் அணைகள் எல்லாம் நிரம்பிவிடும். அளவுக்கு அதிகமாக நீர் வரத்தால் அணை உடையும் அபாயம் ஏற்படும். அந்த நேரம் பெருக்கெடுக்கும் நீரை, காவிரி நதியில் திறந்து விடுவர். அதை, 'உபரி' நீர் என்பர்.
ஐரோப்பிய நாடான, ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல பொருளாதார தத்துவ மேதை காரல் என்ரிச் மார்க்ஸ், உழைப்பில், உபரி மதிப்பு தத்துவத்தை கண்டுபிடித்து மங்கா புகழ் பெற்றுள்ளார்.
மண்பாண்ட நலம்!
உயிர் திரவம் தண்ணீர். மாசு பற்றிய பயத்தால், பாட்டிலில் அடைத்துள்ள நீரை பயன்படுத்துகிறோம். துாய பருத்தி துணியில் நீரை வடிகட்டுவது, 25 ஆண்டுகளுக்கு முன், வழக்கத்தில் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை.
நோய்களில் இருந்து தப்ப, தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டியது அவசியம். வெந்நீரைக் குடித்தால், செரிமான தொந்தரவு, உடல் வலி நீங்கும். குளிர்ச்சியாக, குடிக்க விரும்பினால், மண்பானையில் சேமிக்கலாம். குளிர வைப்பதுடன், இயற்கை சுத்திகரிப்பானாகவும் செயல்படும்.
* நீரை, மண்பானையில் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், மாசு நீங்கும்
* நெல்லிக்கனி, சீரகம் ஊற வைத்த நீரை பருகலாம்
* சீரகம் போட்டு கொதித்த நீரையும் குடிக்கலாம்.
நெல்லிக்காய் ஊறிய நீர், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். சீரகத்தில் உள்ள நுண் சத்துகள் நோய்களை அண்டவிடாது.
நன்னாரி வேர், கோரைக்கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றை கொதிநீரில் போட்டு குடிக்கலாம். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்; நீரும் சுவையாக இருக்கும்.
இதுபோல் இயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்க பல உத்திகள் உள்ளன.
தண்ணீர் சேமிப்பு, சுத்திகரிப்பு, பகிர்வு மிகவும் முக்கியம். அவற்றில் கவனம் கொள்வோம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

