தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேச்சாளர்!

பேச்சாளர்!

பேச்சாளர்!


PUBLISHED ON : ஆக 12, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவாணி என்ற ஊரில் சின்னப்பன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மனைவி மட்டும்தான்.குழந்தை குட்டிகள் இல்லை. நல்ல பேச்சாற்றல் படைத்தவர். அவர் ஊர் ஊராய்ச் சென்று உயிர்க்கொலை செய்வதன் கொடுமை பற்றியும், மாமிசம் உண்பதால் உண்டாகும் தீங்கு பற்றியும் பிரசாரம் செய்தார்.

இவர் பிரசாரம் செய்வதால் இவருக்குப் புகழுடன் பொருளும் கூடவே கிடைத்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக் கொண்டிருந்தார். வாரத்தில் ஓரிரு நாள்தான் மனைவியோடு வீட்டில் இருப்பார். மற்ற நாள்களில் எல்லாம் பிரசாரம்தான்.

சின்னப்பன் பேசுகிறார் என்றால் கூட்டம் அலைமோதி வழியும். அவர் பேச்சு அத்தனை கவர்ச்சியாக இருக்கும். நகைச்சுவையாகச் சிலர் சொல்லுவார்; உபகதைகள் பல சொல்லுவார். குரலில் ஏற்ற இறக்கம் காண்பிப்பார். துன்ப நிகழ்ச்சியை விவரித்தால் இவரே பாதிக்கப்பட்டது போல் ஆகிவிடுவார். மக்களையும் ஈர்த்து அவர்களின் கண் களில் கண்ணீரை வரவழைத்து விடுவார்.

ஆடு,மாடு, பன்றி, கோழி போன்றவற்றின் இறைச்சியை மூன்று வேளையும் அளவின்றித் தின்றவர்கள் எல்லாம் மரக்கறி உணவுகளையே உண்டு வரலாயினர். நாளுக்குநாள் சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வந்தது. எல்லாம் இவரால்தான் என்று பழைய உறுப்பினர்கள் பேசிக் கொள்வது கேட்டு ஆனந்தப்பட்டார்.

'நான் அந்தக் கூட்டத்தில் அப்படிப் பேசினேன். இந்தக் கூட்டத்தில் இப்படிப் பேசினேன். இதைச் சொல்லும்போது சிரித்தனர்' என்று தன் பெருமையைப் போட்டு உடைத்துக் கொண்டே இருப்பார்.

அவரது மனைவிக்கு கணவன் சொல்வதைக் கிளிப்பிள்ளை போலக் கேட்டுக் கொண்டே இருப்பாள். ஒரு நாளாவது தன் கணவன் பேச்சைக் கேட்டுவிட வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிந்தது.

''எனக்குத்தான் உங்கள் பேச்சைக் கேட்க கொடுத்து வைக்கவில்லை,'' என வருத்தம் தோய்ந்த குரலில் கூறினாள்.

''இதற்காக வருந்தாதே! அடுத்த மாதம் பதினைந்தாம் தேதி இதே ஊரில் ஐயாவுக்கு கூட்டம் இருக்கிறது; அங்கே வந்து கேட்டுக் கொள்!'' என்று சொன்னார்.

அடுத்த மாதம் பதினைந்தாம் தேதிக்கு இன்னும் இருபது நாள்கள் இருக்கின்றன. இந்த இருபது நாள்களும் எப்போதும் கழியும் என்ற ஆவலோடு அன்றைய பொழுதை கழித்தாள்.

சின்னப்பன் சுற்றுப்பயணத்தில் இருந்தார். நாளை எண்ணியெண்ணி பத்தொன்பது நாள்களைக் கடத்தியிருந்தாள் அவர் மனைவி. இன்னும் ஒரு நாள்தான் இருந்தது. வெளியூர் சென்றவர் எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வீட்டு வேலை களைக் கவனித்து வந்தாள்.

அவள் நினைத்தது வீண்போகவில்லை. அன்று மாலையே அவர் வந்து சேர்ந்து விட்டார். கணவனைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது. வேறு எதுவுமே அவளுக்குக் கேட்கத் தோன்றவில்லை.

''என்னங்க... நாளைக்கு நம்மூர் திடலில் பேசுவீர்கள் இல்லையா!'' என்று கேட்டாள்.

''என்ன... அப்படிக் கேட்டுவிட்டாய்? அதற்காகத்தானே பறந்தோடி வருகிறேன்? வழியிலே நான்கைந்து ஊர்களில் பேசவேண்டும் என்று தடுத்துப் பிடிவாதம் பிடித்தனர்.'அதெல்லாம் இப்போது முடியாது' என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். சிங்கம்பட்டிக் கூட்டம் முன்பே ஒப்புக்கொண்ட கூட்டமாயிற்றே!

இதை ஒத்திப் போட முடியுமா? அதிலும் நம்மூர்க்கூட்டம் நீ கேட்கவேண்டும் என ஆசையோடு இருக்கிறாய். இதை எப்படித் தவிர்ப்பேன் நான்?'' என மனைவியிடத்தில் கூறினார். அவர் மனைவிக்கு வாயெல்லாம் பல்லானது. கணவனை உள்ளே அழைத்துச் சென்று உணவு பரிமாறினாள்.இருவரும் சாப்பிட்டுப்படுத்தனர்.

அடுத்த நாள் மாலை ஆறுமணி அளவில் திடல் களைகட்டிக் கொண்டிருந்தது. ''சிங்கம்பட்டிப் பேச்சாளர் சின்னப்பன் இன்னும் சிறிது நேரத்தில் அணை கடந்த வெள்ளம் போலத் தன் அழகுத் தமிழ்ப் பேச்சினைத் தொடங்க இருக்கிறார்,'' என ஒலிபெருக்கி ஒலித்தது.

தன் கணவன் மேடையில் நின்று முழங்குவதைக் கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல், அவள் உடலெங்கும் உணர்ச்சி அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

சின்னப்பன் பேசத் தொடங்கினார். ஆரவாரித்த கூட்டம் அமைதியானது. ''நான் இரு நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் உயிர்களைக் கொல்லாமையும், கொன்று தின்னாமை பற்றியுமே பேசிவந்திருக்கிறேன். தினம் உடம்பை கொன்று தின்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

''ஆடும் மாடும் கோழியும் உங்களுக்கு என்ன தீங்கினைச் செய்தன? நீங்கள் ஏன் அவற்றைக் கொல்கிறீர்கள்? கொன்று உண்கிறீர்கள்! அவை உங்களைக் கொன்று தின்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

''மாமிசத்தை உண்பதால் நோய்கள் பெருகின்றன; ஆயுள் குறைகிறது; காய்கறி களையே உண்ணுங்கள். எந்தக் கெடுதலும் இல்லை. ஆயுள் கூடும்; நோய் உண்டாகாது. எந்தப் பாவமும் வந்து சேராது.

''புத்தரும், மகாவீரரும், வள்ளுவரும், வள்ளலாரும் அண்மையில் வாழ்ந்து மறைந்த காந்தியடிகளும் உயிர்களைக் கொல்வதைக் கண்டித்திருக்கின்றனர். அது பாவம் எனப் பறைசாற்றியிருக்கின்றனர். இன்று முதலாக மாமிசம் உண்பதைத் தவிருங்கள். என்னை எடுத்துக் கொள்ளுங்கள். நான் மாமிசமே உண்பதில்லை. திடகாத்திரமாக இருக்கிறேனா இல்லையா? காய்கறி உணவுதான் என் உடம்பை இந்த அளவிற்கு வளர்த்திருக்கிறது,'' என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

கணவன் இரவு பகலாக அலைந்து பிரசாரம் செய்து கொண்டு வருகிறாரே...! உடம்பிற்குத் தெம்பு வேண்டுமே எனக் கருதி வீட்டில் நின்ற விடைக் கோழியை அறுத்து, பாதியைக் குழம்பு வைத்திருந்தாள். மீதியை மசாலா போட்டு வறுத்து வைத்திருந்தாள்.

தன் கணவன் காய்கறி உணவே சிறப்பு. மாமிச உணவு பாபத்தைக் கொடுக்கும் எனப் பேசியதைக் கேட்ட அவள், கோழிக் குழம்பைப் பார்த்ததும் திட்டித் தீர்க்கப் போகிறார் என எண்ணி வேக வேகமா வீட்டுக்கு ஓடி வந்தாள். தோட்டத்தில் ஆழமாய் ஒரு குழி தோண்டி அதில் குழம்பை ஊற்றி மண் போட்டு மூடி விட்டாள். வறுத்த கறியை எடுத்து வந்து நாய்க்குப் போட்டு விட்டாள்.

சின்னப்பன் வருவதற்குள் ஒரு ரசத்தை வைத்து வெண்டைக்காய் பெரியால் செய்து வைத்திருந்தாள்.

இரவு பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது கூட்டம் முடிவதற்கு. கூட்டம் முடிந்தது மாலை மரியாதையோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தார் சின்னப்பன்..

''அடியே... ! கூட்டத்திற்கு வந்தியாடி!'' என ஆவலுடன் விசாரித்தார்.

''வந்திருந்தேன்... வந்திருந்தேன்... நீங்கள் பேசினது முழுவதும் கேட்டேன். அடேங்கப்பா என்னமாய் பிளந்து கட்டுகிறீர்கள்? ரொம்ப பிரமாதம்...!'' என்று தன் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

''சரி... அப்புறம் அதையெல்லாம் பாத்துக்கலாம். எனக்கு ரொம்பப் பசியாக இருக்கிறது. சாப்பாட்டை எடுத்து வை!'' என்று சொல்லிவிட்டுக் கைகால் அலம்பச் சென்றார்.

சாப்பாட்டு மேஜையில் ரசத்தையும் வெண்டைக்காய் பொரியலையும் கொண்டு வந்து வைத்துவிட்டு அவரது தட்டில் சோற்றைப் போட்டாள். சின்னப்பன் தட்டின் முன் அமர்ந்தார்.

சோற்றின் மீது இரண்டு கரண்டி தக்காளி ரசத்தை எடுத்து ஊற்றினாள்.

தேள் கடித்தது போல் அலறிய சின்னப்பன், ''என்னடீ இது ரசம்...?'' என்றார்.

''நானும் கூட்டத்திற்கு வந்து விட்டேனா, அதனால் எதுவும் செய்ய முடியலைங்க...!'' என ஒரு பொய்யைச் சொன்னாள்.

''அடியே...! நான் கூட்டத்திற்குப் போகும் போது நம் வீட்டில் கோழிக்குழம்பு வாசனை வீசியதே!'' என்றனர்.

''அதை மோப்பம் புடிச்சிட்டீங்களா நீங்க...?''

''ஆமாடி... கொண்டா அதை...!'' என்று அவசரப்படுத்தினார்.

வாசற்காலைப் பார்த்துக் கொண்டிருந்த மங்களம் திருதிருவென விழித்தாள்.

''என்னடீ... முழிக்கிறே...?'' என மீண்டும் அதட்டலாகக் கேட்டார்.

''உங்களிடத்திலே ஏன் பொய் சொல்லணும்? விடக்கோழி அடிச்சது உண்மைதான். பாதியைக் குழம்பு வச்சிட்டு மீதியை வறுத்தது உண்மைதான். உங்கள் பேச்சைக் கேட்க வந்தபோது அங்கே நீங்க பேசினது என் மனசைத் தொட்டிருச்சு. மாமிசம் தின்பது பாவம்; காய்கறி தின்றால் ஆயுள் கூடும் என்று நீங்கள் பேசினதாலே கோழிக்கறி தின்ன மாட்டீர்கள் என நினைத்து, குழி தோண்டிப் புதைச்சிட்டேனுங்க...!'' என அழாதக்குறையாகச் சொன்னாள்.

''முண்டம்...!முண்டம்...! கூட்டத்தில் பேசினதெல்லாம் உண்மை என்று நினைச்சிட்டியாக்கும்? அந்த உபசேதம் எல்லாம் ஊருக்கல்லவா சொன்னேன்? உனக்காடி சொன்னேன்?''

''சரி அந்த குழம்பு வைத்த சட்டி எங்கே?'' என்று கொக்கரித்தார்.

''கழுவிக் கவிழ்த்து வச்சிருக்கேனுங்க...!'' என்றாள்.

''சுத்தமாக் கழுவிட்டியா...? பைத்தியம்... பைத்தியம்!''

''உம்,'' எனத் தலையை அசைத்தாள்.

''அடி பாவி! கழுவிய சட்டியையாவது என் கண்முன்னால் கொண்டு வந்து வை. அதைப் பார்த்துக் கொண்டேயாவது இந்த ரசச் சோற்றை உள்ளுக்குத் தள்ளுகிறேன்!'' என்றார்.

சொன்னபடி கொண்டு வந்து வைத்தாள். அதைப் பார்த்துக் கொண்டே வேண்டா வெறுப்பாக ரசக் சோற்றை உள்ளுக்குத் தள்ளினார் சின்னப்பன்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us