
காட்டில் கனிந்த பழங்கள் நிறைந்து இருந்தன. இதைக்கண்டு மரத்தில் ஏறி, சில பழங்களைப் பறித்துத் தின்றான் இளைஞன். மிகக்கனிந்த பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டி பறிக்க முனைந்தபோது, பாரம் தாங்காமல் கிளை முறிந்தது.
சுதாரித்தவன் மற்றொரு கிளையைப் பிடித்து தொங்கினான்.
தரை வெகு கீழே இருந்தது.
பயந்து போயிருந்தவன் கண்ணை மூடியபடி, ''காப்பாற்றுங்கள்...'' என்று அலற ஆரம்பித்தான்.
உள்ளங்கை வியர்த்தது; வழுக்கும் நிலை ஏற்பட்டது.
தற்செயலாக, அந்த மரத்தின் அடியில் வந்தார் ஒரு முதியவர்.
அவன் தொங்குவது கண்டு சிறிய கல்லை அவன் மீது எறிந்தார்.
கல் பட்டதால் வலி எடுத்தது.
கீழே பார்த்தவன், ''பெரியவரே... உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே... அறிவில்லையா உமக்கு...'' என்று கோபத்துடன் கேட்டான்.
பதில் பேசாமல் மற்றொரு கல்லை எடுத்து எறிந்தார் முதியவர்.
கடும் கோபமுற்ற இளைஞன், ''கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்...'' என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.
கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து, கிளைமேல் ஏறி, மரத்தின் மையப்பகுதிக்கு வந்தான்.
தணியாத கோபத்தில் இறங்கியவன் ஓங்கிய கையுடன், ''ஏன் அப்படிச் செய்தீர்... உதவி தானே கேட்டேன்...'' என திட்ட ஆரம்பித்தான்.
மிகவும் அமைதியாக, ''அப்பா... உயிர் போய் விடும் பயத்தில் இருந்தது உன் மனம்; கல் எறிந்த போது, பயம் நீங்கி, என் மீது கவனம் திரும்பியது...
''மற்ற கல் கோபத்தை உருவாக்கினாலும், வீசிய என்னை எதையாவது செய்யணும் என கவனத்தை திசை திருப்பி ஒருமுகப்படுத்தியது. உனக்குள் இருக்கும் பலத்தை திரட்டி, நீயே முயன்று, மரத்திலிருந்து இறங்கி என் முன் உயிருடன் நிற்பதற்கான உத்வேகத்தை அந்த கல் ஏறி தானே தந்தது...'' என்றார்.
இளைஞனுக்கு புரிந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொன்னான்.
குழந்தைகளே... துயரம், அவமானம், தோல்விகள் எல்லாமே வாழ்க்கை முன்னேற்றத்தின் அடிக்கல் மாத்திரமல்ல; ஏணி படிக்கட்டுகளுமாகும்.
ஷோபனா தாசன்

