
சின்னபாளையம் கடைத்தெரு வழியாக வந்தான் அந்த சிறுவன். நான்கு பேர் கும்பல், அவனைச் சுற்றி வளைத்தது. துாரத்தில் இருந்தபடி, இதை கவனித்தார் அந்த ஊர் பெரியவர் கந்தசாமி. சிறுவனைக் கடத்த திட்டமிடுகின்றனரோ என்ற சந்தேகத்துடன் விரைந்து வந்தார்.
அதட்டும் குரலில், 'சிறுவனை எங்கிருந்து கடத்தி வந்தீங்க...' என்றார்.
சற்றும் எதிர்பாராத கேள்வியால் திடுக்கிட்டு, 'வாங்கடா... பெரிசு கிட்ட மாட்டினால் தொலைஞ்சோம்...' என, தப்பி ஓடியது அந்த கும்பல்.
பின், 'யாருப்பா நீ... உன் பெற்றோர் யாரு...' என, சிறுவனிடம் கேட்டார் கந்தசாமி.
பதில் கூறாமல், பயத்துடன் நின்றான் சிறுவன்.
அக்கம் பக்கத்ததில் விசாரித்தார்.
அவனை பற்றி யாருக்கும் தெரியவில்லை.
வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடியது.
'வழி மாறி வந்திருப்பான்...' என்றார் ஒருவர்.
'ஹிந்தி மொழி பேசும் குழந்தையாக இருக்கும்...'
இப்படி பல வித பேச்சுக்கள்.
அரைகுறை ஆங்கிலத்தில், பெயரைக் கேட்டார் ஒருவர்.
தயக்கத்துடன், 'ரோஷன்...' என பதில் கூறினான் சிறுவன்.
அவனை காவல் நிலையம் அழைத்து சென்றார் பெரியவர்.
அப்போது, இளம் தம்பதியினர் பதட்டத்துடன் ஓடி வந்தனர்.
அவர்களைக் கண்டதும், 'மம்மி...' என கட்டிக்கொண்டான் சிறுவன்.
'ஒரு மணி நேரமா தேடுறோம்...'
தவிப்புடன் சொன்னார் சிறுவனின் தந்தை.
'இதுக்குதான், கிராமமும், திருவிழாவும் வேண்டாம்ன்னு அடிச்சுகிட்டேன்...'
கணவனிடம், ஆங்கிலத்தில் திட்டி, சிறுவனை கண்டபடி அடித்தாள் பெண்.
பெரியவர், 'தமிழ் தெரிந்த பையனா இவன்... நாங்க கேட்டதற்கு, பதில் சொல்லவே இல்லையே...' என்றார்.
அந்த பெண், 'அவனுக்கு தமிழ் தெரியாது; ஆங்கிலம் மட்டும் தான் தெரியும்...' என, பெருமையுடன் கூறினாள்.
'தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பையனுக்கு, தமிழ் மொழி தெரியாதா...' என வியந்தார்.
கர்வத்துடன், 'ஆமாம்... அவனை அமெரிக்காவில் படிக்க வைத்து சொகுசாக வாழ விரும்புறோம்...' என்றாள் பெண்.
சிந்தித்தவாறே, 'அமெரிக்காவில் படிக்கிறதுக்கும், தமிழ் பேசுறதுக்கும் என்னம்மா சம்பந்தம்...' என்றார் பெரியவர்.
'தமிழகத்தை தாண்டினா, தமிழுக்கு என்ன மதிப்பு...'
கோபத்தில் சீறினாள் பெண்.
'ஆபத்து நேரத்துல, உதவி கேட்டு நாலு பேரோட பேசவாவது முடியுமே...'
சாந்தமாக பதில் சொன்னார் பெரியவர்.
சிறுவனை அடித்து இழுத்து சென்றாள் பெண்.
'மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ஐயா...' என்றபடி பின்னால் சென்றார் சிறுவனின் தந்தை.
'சின்ன வயசிலேயே, சொகுசு வாழ்க்கையை பற்றி, குழந்தைகள் மனதில் பதியவச்சுடறாங்க... அதை அடைய முடியாதவங்க தீய வழியில் போறாங்க... இது போல் ஆசை காட்டி வளர்க்கும் பெற்றோர் முதலில் திருந்தணும்...'
அறிவுரைத்தார் பெரியவர்.
ஆமோதித்தக் கூட்டம் கலைந்தது.
குழந்தைகளே... தாய்மொழியின் சிறப்பை உணர்ந்து, நன்றாக பயிற்சி செய்ய வேண்டும். பல மொழிகளைக் கற்றால் வாழ்வு சிறக்கும்.

