
இரவு, 7:00 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை வசந்தன்; தாய் முல்லைக் கொடிக்கு, கவலை பற்றியது. கணவர் ராமச்சந்திரனிடம் புகார் வாசிக்க ஆரம்பித்தாள்.
அவருக்கு கோபம் தலைக்கேறியது.
'எல்லா மாணவரும் மாலை, 5:00 மணிக்கு வீடு திரும்புகின்றனர்; இவன் மட்டும், காலதாமதமாக வருகிறான்' என, கோபத்துடன் காத்திருந்தார்.
சிறிது நாட்களாகவே மகன் சொல் கேட்காமல் நடப்பதாக இருவரும் வருத்தமடைந்திருந்தனர்.
பாட்டு வகுப்பு, இசைக் கருவிகள் இசைக்கும் வகுப்பு மற்றும் தனித்திறன் வகுப்புகளை தவிர்த்து வந்தான் வசந்தன்.
படிப்பிலும் அவன் கெட்டிகாரன் இல்லை. வேறு வகை திறன்களும் இருப்பதாக தெரியவில்லை. பொறுப்பில்லாமல் வளர்ந்து வரும் பிள்ளையை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.
அன்று இரவு 7:30 மணிக்கு வீடு திரும்பினான் வசந்தன்; உள்ளே நுழைந்தவுடன் வசைப்பாட துவங்கினர்.
''ஏன்டா இப்படி செய்ற... ஊரை சுத்தி வந்தால் எதிர்காலம் என்ன ஆகும். உன் வாழ்வின் இலக்கு என்ன...'' என்று கேட்டார் அப்பா.
சற்று மவுனம் காத்தான்; பெற்றோரின் மனநிலை புரிந்தது.
பின், மிருதுவான குரலில், ''அப்பா... வெறும் படிப்பு மட்டும் போதாது; பல வித திறன்களையும் வளர்த்து இருக்கணும் என்று அடிக்கடி, சொல்லுவீங்க... அதனால் தான், அறிவியல் ஆசிரியருடன் சேர்ந்து, சமூக சேவை செய்ய சென்றிருந்தேன்; பக்கத்து கிராமத்தில் பனை விதைகளை நடவு செய்தோம்...
''நாளை கூட, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய நிகழ்வு இருக்கு; இது போன்றவற்றில் பங்கேற்க கூடாதா...'' என்றான் வசந்தன்.
புன்னகைத்தபடி, ''இதுவும், படிப்பின் வகை தான்; சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய்...'' என்று மகனை தழுவினார் தந்தை.
குழந்தைகளே... கல்வி கற்பதோடு, சமூக அக்கறையுடன் பணிகளும் செய்ய வேண்டும்.
எம்.கே.சுப்பிரமணியன்