PUBLISHED ON : டிச 21, 2019

கோவை மாவட்டம், நல்லுார், உயர்நிலைப் பள்ளியில், 1961ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியையாக, வானதி இருந்தார்.
பள்ளிக்கு காலை, 9:00 மணிக்குள் வந்து இறைவணக்க கூட்டத்தில் பங்கேற்பதை கண்டிப்பாக பின்பற்ற சொல்வார்.
உடன் படித்த மீரா, தாமதமாக வந்து கொண்டிருந்தாள். கோபமடைந்த வகுப்பாசிரியை, வெயிலில் நிற்க வைத்து தண்டித்தார்.
பின்னரும் தாமதமாகவே, தலைமை ஆசிரியை தாரணியிடம் அனுப்பி வைத்தார். அவரும் கண்டித்து, 'பெற்றோரை அழைத்து வா...' என்றார்.
மனம் விம்மியபடி, 'பெற்றோர் இறந்து விட்டதால், கால் ஊனமுற்ற அக்காவுடன் வசிக்கிறேன். காலை, 5:00 மணிக்கே எழுந்து, வீடுகளில் வேலை செய்து வருவாய் பெறுகிறேன். பின், உணவை சமைத்து, மற்ற வேலைகளையும் முடித்து வர நேரமாகி விடுகிறது...' என்று கூறினாள்.
கண்கலங்கிய தலைமை ஆசிரியை, 'இனி வீட்டு வேலைக்கு போக வேண்டாம்; படிப்பில் கவனம் செலுத்து...' என்று தேற்றி உதவினார். அவள் நன்றாகப் படித்து, மருத்துவராகி சேவை செய்கிறாள்.
எனக்கு, 70 வயதாகிறது. துன்பத்தை எதிர் கொள்ளும் போது, மீராவையும், உதவிகள் செய்யும் போது, தலைமை ஆசிரியையும் நினைத்துக் கொள்கிறேன்.
- பி.லட்சுமி, திருப்பூர்.
தொடர்புக்கு: 98946 71466
