
கோகுலின் அப்பா, பெரிய பணக்காரர்; நிறைய தொழில்கள் செய்து வந்தார்.
அப்பாவை போல சுயமாக தொழில் செய்ய முயன்றான். அவர் செல்வாக்கை பயன்படுத்தாமல், தனி முத்திரை பதிக்க விரும்பினான் கோகுல்.
அவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. தொழிலில் ஏற்பட்டிருந்த பின்னடைவு, தடைகளுக்கு விடை தேடும் வகையில் முனிவர் ஒருவரை நாடிச் சென்றான்.
''ஐயா... வணங்குகிறேன்; தீவிரமாக முயற்சி செய்தும் என்னால் எதிலும் சாதிக்க முடியவில்லையே...''
வருத்தத்துடன் கேட்டான் கோகுல்.
அமைதியாக தோட்டத்துக்கு அவனை அழைத்து சென்றார் முனிவர். அங்கு மூடி வைக்கப்பட்டிருந்த கூடையை துாக்கினார். அதில் அடைந்திருந்த கோழிகள் ஒவ்வொரு திசையில் சிதறி ஓடின. ஆங்காங்கே பூச்சி, புழுக்களை தேடி கொத்தி தின்ன ஆரம்பித்தன.
அப்போது, ''இளைஞனே... அந்த கோழிகள் அனைத்தையும் பிடித்து, முன்போல் கூடைக்குள் அடைத்து விடு...'' என்றார் முனிவர்.
தோட்டத்திற்குள் ஓடியவன் கோழிகளை பிடிக்க முயன்றான். அவை, திசைக்கு ஒன்றாய் சிதறி ஓடின.
பலவாறாக முயன்று களைப்படைந்து, ''ஐயா... கோழிகள், திசைக்கு ஒன்றாய் ஓடுகின்றன; அவற்றை பிடிக்க இயலவில்லை...'' என, இயலாமையை ஒப்புக்கொண்டான் கோகுல்.
புன்னகைத்த முனிவர், துாரத்தில் நின்ற சிவப்பு கோழியை சுட்டிக் காட்டி, ''முதலில் அதை பிடித்து வா... அவசரம் தேவையில்லை; பின், மற்றவற்றை பிடித்து விடலாம்...'' என்றார்.
சிவப்பு கோழியை குறி வைத்து, சிறிது நேரத்திற்குள் லாவகமாக பிடித்து வந்தான்.
அவன் திறன் கண்டு, ''உன் கேள்விக்கு விடை கிடைத்ததா...'' என்றார் முனிவர்.
''ஒன்றுமே புரியவில்லை ஐயா; நானோ, வெற்றிக்கு வழி அறிய விரும்பினேன்; அதற்கும், கோழியை பிடித்து வந்ததற்கும் என்ன சம்மந்தம்...''
''சிந்தித்துப் பார்... முதலில், எல்லா கோழிகளையும் அவசரமாக இலக்கு நிர்ணயிக்காமல் துரத்தினாய்; பிடிக்க இயலவில்லை. அதைப்போல், சாதிக்க விரும்பி, பல தொழில்களில் இறங்கினாய். ஆனால், எதையும் முழுமையாக செய்ய முடியவில்லை. அதற்கான இலக்கை நான், தீர்மானித்து தந்த போது, உறுதியாக முயன்று வெற்றி பெற்றாய் அல்லவா...'' என்றார் முனிவர்.
''ஐயா... பலவீனத்தை உணர வைத்தீர்; மிக்க நன்றி...'' என கூறி, விடைப் பெற்றான்.
பின், இலக்கை தீர்மானித்து, விரும்பிய தொழிலை உறுதியாக செய்து தனி முத்திரை பதித்தான் கோகுல்.
குழந்தைகளே... இலக்கை முடிவு செய்து, உறுதியாக முயற்சித்தால் எளிதாக வெற்றி பெற முடியும்!
- எம்.அசோக்ராஜா