
நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில் இருந்ததால், பெயர் கொடுக்க இயலவில்லை. என்னிடம் எப்போதும் பிரியம் காட்டும் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திரு.பொனிபாஸ் அவர்கள், என் சோகமான முக வாட்டத்தைப் பார்த்து, 'இசக்கி... நீ பேரு கொடுக்கலியா?' என்று கேட்டபடியே, தன் சட்டைப் பையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்துத் தந்தார்.
எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கேரளாவிலுள்ள புனலூருக்கு செங்கோட்டை குகைப் பாதை வழியாக புகை வண்டியில் போய் வந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.
பின்னாளில், நான் படித்த அந்தப் பள்ளி ஆண்டு விழாவில் பேசுவதற்கு என்னை அழைத்திருந்தனர். நான் உரையாற்றும் போது, 'பொனிபாஸ்' சார் செய்த அதி அற்புதமான உதவியை நினைவுப்படுத்தி விளக்கினேன். கூட்டத்தில் பலத்த வரவேற்பு, கை தட்டல். விழா முடித்ததும் நான் எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற நல்லாசிரியராக பொனிபாஸ் சாரும் வருகை தந்திருந்தார். என்னை பேரன்பு பொங்க ஆரத் தழுவி, அவர் சிந்திய ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்து, அவர் பாதம் விழுந்து ஆசீர்வாதம் பெற்று மகிழ்ந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத முக்கிய நிகழ்வுகளில் முதன்மையானது.
- பி.ஜி.பி.இசக்கி, அகஸ்தியர்பட்டி.

