PUBLISHED ON : செப் 16, 2016

நீரிழிவு நோய் சிறப்பு நிபுணர் டாக்டர்: எஸ்.எம்.ராஜேந்திரனுடன் ஒரு கலந்துரையாடல்.
உதவி ஆசிரியர் ஜெனிபர் பிரேம்: இன்றைக்கு பெரியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் பாதித்திருக்கும் ஒரு நோய் நீரிழிவு என்கிற சர்க்கரை நோய். இந்நோயின் சிறப்பு நிபுணரான நீங்கள், இந்த நோய் பற்றி எங்களது வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படக்கூடிய தகவல்களை பரிமாறினால் நன்றாக இருக்கும்.
பிறந்த குழந்தைக்கு நீரிழிவு நோய் இருந்ததை நீங்க கண்டுபிடிச்சதா கேள்விப்பட்டோம் டாக்டர். அதைப் பற்றி முதலில் சொல்லுங்களேன்.
டாக்டர்: ஆமாம். என் நண்பர் மூலமாக கல்கத்தாவிலிருந்து ஒருவர், தன் மூன்றுமாத குழந்தையை அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, 180 இருப்பதை பார்த்ததும், சர்க்கரை நோய்தான் என நினைத்து அங்குள்ள மருத்துவமனையில் பச்சை குழந்தைக்கு இன்சுலின் கொடுத்து குழந்தையை மயக்க நிலைக்கு தள்ளிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை என்னிடம் கொண்டு வந்தனர். நான் அக்குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன், பால் கொடுத்து அரைமணி நேரத்திற்கு பின், என ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்தேன்.
அதில், 185 - 200 என இருந்தது. இது குழந்தைகளுக்கு ஒ.கே., என்பதை பலவிதமான சோதனைகள் மூலம் நிரூபித்து, குழந்தைக்கு சர்க்கரை வியாதி இல்லை என்று உறுதி செய்த பிறகே, பெற்றோர் நிம்மதியடைந்தனர். இதுவரையில் பிறந்த குழந்தைக்கான சர்க்கரையின் அளவு, உலக அளவில் நிர்ணயிக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
உதவி ஆசிரியர்: பிறந்த குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?
டாக்டர்: குழந்தை, கை, கால் அசைக்காமல் படுத்திருக்கும். மயங்கிய நிலையில் இருக்கும். பால் கொடுத்ததும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். அப்போது, குழந்தையின் மூச்சுக்காற்றை தாய் கவனிக்கணும். அதில் லேசான பழவாசனை வந்தால், குழந்தைக்கு, 'டயபடிக்' உள்ளது என்று அர்த்தம். அத்துடன் அடிக்கடி நீர்போகும். பால் குடிக்க மறுக்கும்.
உதவி ஆசிரியர்: அம்மா, அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் வருமா?
டாக்டர்: பிறந்த குழந்தைக்கு உடனே சர்க்கரை நோய் வராது. ஆனால், நாளடைவில் இப்பாதிப்பு ஏற்படலாம். இது பரம்பரை காரணமாக வரலாம்; ஆனால், மரபியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
உதவி ஆசிரியர்: பெரியவர்கள் நிறைய பேர் சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுத்தும், அதன் அளவு குறையவில்லை என்கிறார்களே?
டாக்டர்: ஒரு நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதால் மட்டும் சரியாகிவிடாது. மருத்துவர்கள் சொல்வதை முறையாக பின்பற்ற வேண்டும். 'டயட் கன்ட்ரோல் ' மற்றும் ஒரு மணி நேர, 'ஸ்பீட்வாக்' பண்ணனும். அதுவும் காற்றோட்டமான அல்லது திறந்த வெளியில் 'பார்க்'கில் பண்ணுவதே சிறந்தது. அத்துடன் மாத்திரை சாப்பிடணும். அப்போதுதான் சர்க்கரையின் அளவு குறையும்.
உதவி ஆசிரியர்: 'டிவி' விளம்பரங்களில் காட்டும் கருவிகளை கொண்டு எக்ஸ்சர்சைஸ் செய்யலாமா?
டாக்டர்: கட்டாயம் கூடாது. உடற்பயிற்சி என்பது பூங்காக்களில் செடி, கொடிகளுக்கு நடுவில் திறந்த வெளியில் செய்வதுதான் நல்லது. வியர்வையே வெளிவர வழியில்லாமல் ஏ.சி., ஜிம்களில் செய்வதும், ஆர்.பி.டிராக்., டிரெட் மில் இவற்றில் செய்வதும், சர்க்கரையின் அளவை கூட்டுமே தவிர குறைய வாய்ப்பில்லை.
உதவி ஆசிரியர்: சர்க்கரை நோயில் என்னென்ன விதங்கள் உள்ளன?
டாக்டர்: நிறைய வகை உண்டு. முக்கியமாக டைப் 1, டைப் 2, டைப் 3, டைப் 4 என நான்கு வகைகள் உள்ளன.
உதவி ஆசிரியர்: 'ஜெஸ்டேஷனல் டயபடிக்' மற்றும், 'ப்ரீ ஜெஸ்டெஷனல் டயபடிக்' என்பது என்ன?
டாக்டர்: 'ஜெஸ்டேஷனல் டயபடிக்' என்றால் கர்ப்ப கால நீரிழிவு. அதாவது ஒரு பெண் கர்ப்பமான, 28 வாரத்தில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிப்போம்.
அதில் சர்க்கரை அளவு அதிகமாயிருந்தால் அவருக்கு, 'ஜெஸ்டேஷனல் டயபடிக்' கர்ப்பகால நீரிழிவு இருக்கிறது என்று அர்த்தம். 'ப்ரீ ஜெஸ்டேஷனல் டயபடிக்' என்றால் பெண் கருத்தரிப்பதற்கு முன்பே சர்க்கரை நோய் இருப்பது.
உதவி ஆசிரியர்: சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி உணவில் குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள், 'சாலட்' போன்றவற்றை சேர்க்க சொல்கிறீர்கள். ஆனால், இது பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களில் எப்படி சாத்தியம்?
டாக்டர்: ஒரு காலத்தில் சர்க்கரை நோய் பணக்கார நோயாகவே இருந்தது. ஆனால், ஏழைகளுக்கும் உள்ளது என்பதை பின்பே கண்டறிந்தோம்.
இவர்களுக்கு சர்க்கரை வரக் காரணம், உணவு பொருட்களின் மீது தெளிக்கப்படும் ரசாயன உரங்கள், உணவு தானியங்களின் சத்துக்களை அழித்துவிடுகின்றனர். 'இன்சுலின் ஹார்மோன்' சுரக்க வேண்டிய, 'பீட்டா செல்'கள் நிறைய அழிந்துவிடுவதே இதன் காரணம். இவர்கள் விலை குறைந்த தானியங்களை, காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம்.
உதவி ஆசிரியர்: இந்நோய்க்கு அதிக விலையுள்ள மருந்துகளைத்தானே மருத்துவர் பரிந்துரைக்கின்றனர்? ஏழைகள் என்ன செய்வது டாக்டர்?
டாக்டர்: மருந்துகளே வேண்டாம். உணவு முறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சியின் மூலமே சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
உதவி ஆசிரியர்: எவ்வகை உணவுகளை எடுப்பது நல்லது?
டாக்டர்: பூமிக்கு மேல் விளையும் அனைத்து காய்கறிகளையும் உண்ணலாம். பூமிக்கு கீழ் விளையும் கிழங்கு வகைகளை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி உணவை தவிர்த்து, காய்கறி சாலட், சுண்டல், தானிய வகைகள், மோர், வெள்ளரிக்காய், மீன்கள், நெஞ்செலும்பு சூப் இவற்றை ஒருநாளைக்கு ஐந்து வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். அரிசி உணவை ஊறுகாய் மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் காலை நேர, 'ஸ்பீட் வாக்' செய்தாலே போதும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துவிடும்.
உதவி ஆசிரியர்: சர்க்கரை நோய் கணக்கெடுப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
டாக்டர்: உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், 62 மில்லியன் பேர் சர்க்கரை நோய்க்காரர்கள்; இந்தியாவில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இதில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பேர் சர்க்கரை நோயால் இறக்கின்றனர்.
உதவி ஆசிரியர்: 'ஜோனல் டயபடிக்' என்றால் என்ன?
டாக்டர்: டைப் 1 டயபடிக் வகை இது. அதாவது கணைய சுரப்பியில் இன்சுலின் சுரக்காததே இதற்கு காரணம். கணைய சுரப்பியிலுள்ள பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டால் டைப் 1 டயபடிக் வரும். பரம்பரை மற்றும் கர்ப்பிணித்தாய் கர்ப்பத்தின் போது ஆரோக்கிய உணவுகளை உண்ணாததே இப்பாதிப்பு வர முக்கிய காரணம்.
உதவி ஆசிரியர்: சர்க்கரை நோய் மாதிரியே உடல் பருமன் குழந்தைகளைத் தாக்குகிறதே?
டாக்டர்: உடல் பருமன் இருந்தால் சர்க்கரை நோய் வந்துவிடும். இதோடு உடல் பருமனுக்கு முக்கிய காரணம் வாழ்வியல் மாற்றம் மற்றும் உணவு மாற்றம். துரித உணவுகளை அதிகம் உண்பது, உடலுழைப்பு இல்லாததே இதற்கான முக்கிய காரணங்கள்.
உதவி ஆசிரியர்: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட, தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளே அதிக உடல் பருமனோடு இருக்கிறார்களே?
டாக்டர்: அரசு பள்ளிகளில் கேன்டீன்கள் இல்லை. ஆனால், தனியார் பள்ளிகளில் கேன்டீன் வசதி உள்ளது. அதிலும் அங்கு துரித உணவுகள் கொழுப்பு சத்துள்ள உணவுகள், பாக்கெட் உணவு என்று உடலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தும் இருக்கிறது. எனவே, கட்டாயம் இப்பாதிப்பு வரும்.
உதவி ஆசிரியர்: 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் டயபடிக்' என்றால் என்ன?
டாக்டர்: கணைய சுரப்பியிலுள்ள பீட்டா செல்லில் இன்சுலின் ஹார்மோன் சுரக்கும்; ஆனால், செயல்படாது. பொதுவாக உடல் பருமனான பெண்களுக்கும், தொப்பை உள்ள பெண்களுக்கு இது வருகிறது.
உதவி ஆசிரியர்: இன்சுலின் ஊசியை தொடைகளில்தான் போட வேண்டுமா?
டாக்டர்: தவறு. இன்சுலின் ஊசியை வயிற்றில் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உடனே பலன் கிடைக்கும். இரவு நேரத்தில் தொடையில் போட்டுக் கொள்வது நல்லது. அப்போதுதான் மெதுவாக வேலை செய்யும்.
உதவி ஆசிரியர்: இன்சுலின் மருந்தை பிரிட்ஜில் வைக்கலாமா?
டாக்டர்: பேனா வடிவம் என்றால் பிரிட்ஜில் வைக்க வேண்டாம். 'வயல்' எனப்படும் பாட்டில் வடிவம் என்றால் பிரிட்ஜில் கடைசி அறையில் வைக்க வேண்டும்.
உதவி ஆசிரியர்: குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?
டாக்டர்: மொபைல், கம்ப்யூட்டரில்தான் தற்போது குழந்தைகள் விளையாடுகின்றனர். அப்படியே நொறுக்குத் தீனி சாப்பிடுகின்றனர்.
அதற்கு பதிலாக, தினமும் ஒரு மணிநேரம் திறந்த வெளியில் நன்றாக ஓடியாடி விளையாடினாலே சர்க்கரை நோய் வராது. அதோடு, பசித்தால் மட்டுமே சாப்பாடு கொடுங்கள். சாப்பிடு, சாப்பிடு என சொல்லி குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணிக்காதீங்க. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
உதவி ஆசிரியர்: பயனுள்ள பல தகவல்களை குட்டீஸ், பெரியவர்கள் என எல்லாருக்கும் வழங்கினீர்கள். நன்றி டாக்டர்!
தொகுத்தளித்தவர்
- அனு பிரியா ஹனீபா
