PUBLISHED ON : அக் 28, 2011

மிக நீண்ட தூரத்தில் ஏதோ தண்ணீர் தெரிவது போலத் தோன்றியது. ஒருவேளை அது கானல் நீரோ என்று அவள் மனம் எண்ணியது. ஆயினும் அவள் உள்மனம் கானல் நீரோ கோணல் நீரோ நாம் பாலைவனத்தைக் கடந்து செல்ல அதுவும் ஓர் இலக்காக அமையட்டுமே!
இறைவன் தன்னைக் கைவிடமாட்டான் என்று திட நம்பிக்கையுடன் அங்கிருந்து அவ்விடத்தை நோக்கி நடந்தாள். அவள் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. இறைவன் அவளைக் கைவிடவில்லை. பாலைவனத்தின் ஊடே தெளிவான சுனைநீர் ஊற்று ஒன்று காணப்பட்டது. அதை நோக்கி விரைந்து நடைபோட்டான்.
அந்த ஊற்றினைச் சுற்றி நீர்வாழ்த் தாவரங்கள் சிலவும், சற்றே உலர்ந்துபோன நாணல்புற்கள் சிலவும் காணப்பட்டன. அந்த நாணல்புற்கள் ஒரு சில முரட்டு மனிதர்கள் அறுத்துக் கட்டுகளாகக் கட்டியவாறே இருந்தனர். அவள் அந்த சுனையருகே போனவுடன் நடக்க முடியாமல் போனதால் கீழே விழ நேர்ந்தது.
மிக நீண்ட நேரம் அவள் குழந்தை களைத் தோளில் சுமந்த காரணத்தினால் அவளுடைய இரண்டு கைகளும் மரத்துப் போய்க் காணப்பட்டன.
எனவே, தண்ணீரிலிருந்தும், தாகமிருந்தும் அவளால் அத்தண்ணீரைக் கைகளால் அள்ளிப் பருக முடியவில்லை. ஆகையினால் படுத்தவாறே அந்தச் சுனையினுள் தன் பவள இதழ்களை வைத்து நீர் அருந்துவதற்கு அவள் முயற்சி செய்தாள்.
அப்போது இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அம்முரட்டு மனிதர்களை விருட்டென்று எழுந்து வந்து அவளுடைய தலை முடியைக் கொத்தாகப் பற்றி அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
''நீ தண்ணீர் குடிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது,'' என்று அவர்கள் ஆர்ப்பரித்தனர்.
''ஐயா நான் மிகவும் தூரத்திலிருந்து வந்துள்ளேன். பசி, தாகம், களைப்பு ஆகிய அனைத்தும் என்னை வாட்டி வதைக்கின்றன. தயவு செய்து என்னை நீர் குடிக்க அனுமதியுங்கள்,'' என்று கெஞ்சி கேட்டுக் கொண்டாள்.
முரட்டு மனிதர்கள், மிகவும் இரக்கமற்றவர்களாக இருந்தனர்.
''நீ ஆயிரம்தான் கூறினாலும் உன்னை நீர் குடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது எங்கள் வசதிக்காக எங்களால் கண்டறியப்பட்டு எங்களால் அனுபவிக்கப்படும் ஓர் நீர்ச் சுனையாகும். இதில் அன்னியர் எச்சில் பட ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம். எனவே நீ வேறு எங்காவது சென்று நீர் அருந்து. இதையும் மீறி நீ அருந்துவாயேனால் நாங்கள் அனைவரும் பொல்லாதவர்களாயிருப்போம்.'' என்று எச்சரித்தனர்.
அப்போது லடோனா, ''ஐயா நீங்கள் என்னை நீர் குடிக்க அனுமதிக்க வேண்டாம். இந்தப் பச்சிளங் குழந்தைகளைப் பாருங்கள். அவர்களும் என்னுடன் நீண்ட நேரமாகப் பசியையும், தாகத்தையும் அனுபவித்து வருகின்றனர். அவர்கள் என் தோள் மேல் இருந்திருந்த போதிலும் கடுமையான மனச் சோர்வால் மயங்கிப் போயிருக்கின்றனர். தயது செய்து அவர்களுக்காவது தண்ணீர் அருந்துவதற்கு அனுமதியைக் தாருங்கள்!'' என்று கேட்டாள்.
இரக்கம் என்பதே சிறிதளவும் இல்லாத அப்பொல்லாத பாவியர் லடோனாவின் வார்த்தைகளுக்கு சற்றும் செவி சாய்க்கவே இல்லை. எங்கே தங்களுடைய சொற்களை மீறி அவள் தண்ணீர் அருந்தி விடுவார்களோ என்று அவர்கள் ஆத்திரமும், படபடப்பும் அடைந்து, சற்றும் நிதானமின்றி அந்தச் சுனையில் இறங்கித் தெளிவான அதன் நீரோட்டதை சேறும், சகதியுமாக ஆக்கினர்.
சுனை கலங்கியது. அத்துடன் லடோனாவின் இதயமும் கலங்கியது. கயவர்களின் இதயமோ மகிழ்ச்சியால் குறுக்கியது.
அதுவரை ஜீனோ தேவதையால் பலவித இழப்புகளுக்கும், துக்கங்களுக்கும் ஆளாகி இருந்த போதும் அவள் ஒரு வார்த்தையைக் கூட ஆத்திரடத்துடன் கூறாமல் மிகவும் நிதானமாக நடந்துக் கொண்டாள்.
தான் பெண்ணாக இருந்தபோது, தனக்கு ஏற்படாத ஆத்திரம் கோபம் ஆகிய அனைத்தும் தாயாக மாறியதும், ரவுத்தாரமாக அவளுள் பொங்கியது.
அவள் விண்ணை நோக்கிக் கைகள் இரண்டையும் உயர்த்தினாள்.
''ஆண்டவனே, நீ உண்மையில் இருக்கிறாயா? இல்லையா? இந்த அக்கிரமங்களையும் அநியாயத்தையும் கேட்க மறந்து விட்டனவா உன் செவிகள்? கொடுமையான இப்பாவியைப் பார்க்க மறந்து விட்டனவா உன் கண்கள்! அநியாயம் செய்யக்கூடிய இவர்களைத் தண்டிக்க உன் நீதியின் கரம் நீளுமென்றால் இதுவரை ஏன் நீளவில்லை!
''அக்கிரமக்காரர்களை விரைவில் தடுப்பதற்காக உன் கால்கள் ஏன் இன்னும் ஓடி வரவில்லை? உன் நீதி, நியாயம், நேர்மை, தீர்ப்பு ஆகிய அனைத்தும் எங்கே ஒளிந்து கொண்டன? நான் வாழ்வதா வேண்டாமா? எந்த நீரின் மேல் ஆசை கொண்டு இந்த முரட்டு மனிதர்கள் என்னைத் தடுத்தார்களோ அந்த நீருக்குள்ளே இவர்கள் கிடக்க நீயே அனுகூலம் பண்ணு,'' என்று கூக்குரலிட்டாள்.
அந்த மனிதர்கள் இவளைப் பார்த்து கேலி செய்து சிரித்தனர்.
உடனே, வானத்தின் கதவுகள் திறந்தன. பிரகாசம் பொருந்திய இறைவன் நீதி தேவதையின் வடிவில் வானத்திலிருந்து கீழிறங்கி வந்தாள்.
அந்த மனிதர்களை நோக்கி கைகளை ஆட்டினாள். அவர்கள் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்குபோதே, அவலட்சணமான வடிவையுடைய அங்குமிங்கும் தாவிக் குதிக்கக்கூடிய நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய விநோதமான உயிரினமான தவளையாக உருமாறினர்.
இன்று நாம் நீர் நிலைகளின் அருகே தவளைகளைப் பார்க்கின்றோம் என்றால் மிகவும் இழிவான மோசமும் சூதும் வாதும் நிறைந்த மனிதர்கள் தங்கள் மனிதப் பிறவியை முடித்துக் கொண்டதும் பிறக்கும் இழிநிலைப் பிறவிதான் அது என்பதை அனைவருக்கும் எச்சரிக்கை செய்ய இறைவன் அளித்த நீதியின் தீர்ப்பு ஆகும் அது.
இறைவன் லடோனாவையும் அவள் குழந்தைகளையும் ஆசீர்வதித்தார். அவள் குழந்தைகளுக்கு தன்னுடைய தெய்வ சக்திகள் பலவற்றை அன்பளிப்பாகத் தந்தார்.
லடோனாவின் மகன் அப்போலாதான் இன்று நாம் உலகில் பார்க்கக்கூடிய உன்னத ஒளித் தெய்வமான சூரிய பகவானாகவும், இசைகளுக்கு அதிபதியாகவும், அவருடைய தங்கை டயானாதான் லடோனாவைப் போல அழகின் சிகரமான நிலவுத் தேவதையாகவும் விளக்கி வருகின்றனர். இவ்விதமான ஆற்றலை இறைவனே அவர்களுக்குத் தந்தான்.
அன்றிலிருந்து இன்றுவரை லடோனாவும் எவ்வித பிரச்னையுமின்றி மகிழ்ச்சியாக இறைவனுடன் காலங்கழித்து வருகின்றாள். ஜீனோ தன் அறியாமையை எண்ணி நாணி வருந்தினாள்.
(முற்றும்)
