
கிராமத்தை ஒட்டியிருந்தது தண்டரைக் காடு. அதில் முதிர்ந்த குரங்கு ஒன்று வசித்தது. மிகவும் இரக்கமுள்ளது. எப்போதும் நீதியை போற்றியது.
அந்த காட்டில் தினமும் விறகு சேகரிக்க வருவார் ஒரு பாட்டி.
அவருக்கு அவ்வப்போது உதவியது குரங்கு.
ஒரு நாள் -
வெயிலில் அலைந்து, விறகு கிடைக்காமல், மரத்தடி நிழலில் சோர்வாக அமர்ந்திருந்தார் பாட்டி.
அவர் நிலையை கண்டு இரக்கம் கொண்ட குரங்கு, மரக்கிளையில் காகம் கட்டியிருந்தக் கூட்டைக் கலைத்து, பாட்டியின் கூடையில் போட்டது. மரத்தில் காய்ந்திருந்த சுள்ளிகளையும் முறித்துப் போட்டது. பாட்டியின் விறகுப்பெட்டி நிறைந்தது.
மேலே பார்த்த பாட்டி, 'நன்றி...' எனக்கூறி, வீடு நோக்கிச் சென்றார்.
மாலையில், மரக்கிளைக்கு திரும்பிய காக்கை, கூட்டை தேடியது. பாடுபட்டு கட்டியதைக் காணோம். கவலையில் அமர்ந்திருந்தது. சற்று நேரத்தில், கவலையை உதறி, அடுத்த பணியை துவங்கியது.
மூன்றே நாளில், சுள்ளிகள், சருகுகளை தேடி, சேகரித்து அதே கிளையில் மீண்டும் கூடு கட்டியது.
மறுநாள் -
மறைந்திருந்து மரத்தில் கட்டிய கூட்டை நோட்டமிட்டது காக்கை.
வயதான குரங்கு, காக்கை கட்டிய புதிய கூட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதைக் கண்டதும், 'ஓ... நீ செஞ்ச வேலை தானா' என முடிவு செய்தது காக்கை.
பின் மெதுவாக, 'குரங்கண்ணே... நீங்க தானே என் கூட்டைக் கலைச்சது...' என கேட்டது!
'ஆமாம்... அதுக்கென்ன...'
முறைத்தது குரங்கு.
'அண்ணே... என் மேல ஏதாவது ஜென்ம பகை உண்டா... கோபிக்காம சொல்லு...'
'தம்பி... என் தாத்தா சொன்னாரு... உங்க இனம், ஒரு பாட்டி சுட்ட வடையைத் திருடி, அதை நரிக்குப் போட்டிருச்சாம்... பாட்டியிடம் திருடின பாவம், எனக்கு கோபத்தை உண்டாக்கிருச்சு. அதனால தான், உன் கூட்டைக் கலைச்சு, விறகாக்கி, அந்த பாட்டிக்கு உதவினேன். இது தப்பா... நீயே சொல்லு...'
'தப்பில்ல அண்ணே... இனி, எங்க காக்கை இனம் இப்படி ஒரு தப்பு செய்யாம பாத்துக்கிறேன்... எத்தனையோ அசுத்தங்களைச் சுத்தம் செய்யிறது எங்க இனம் தான். இதைக் கண்டு தான் மனிதர்களே, 'ஆகாய தோட்டி'ன்னு எங்களை பாராட்டுறாங்க; ஒரு சின்ன தப்பு செஞ்சதால, கெட்ட பேரு வந்துருச்சு; இனி இப்படி நடக்காது...'
'சரி தம்பி... அந்தக் காலத்தில், ஏதோ ஒரு காக்கா செஞ்ச திருட்டுக்கு விமோசனமாக அந்த பாட்டிக்கு உதவி செஞ்சேன்; இனி, உன் கூட்டுக்கு எந்த ஆபத்தும் வராம நானே பாத்துக்கிறேன்...' என, மன்னிப்பு கேட்டது குரங்கு!
குழந்தைகளே... யாருக்கும் தீமை செய்யக்கூடாது!
அ.ராஜப்பன்

